பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, August 7, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 16

தூண்டுதல்களையும் வெகுமதிகளையும் மாற்றாமல், எப்படி செயல்முறைகளை மட்டும் மாற்றுவதன் மூலம், பழக்கங்களை மாற்றமுடிகிறது என்பது 2007-ல் ஜெர்மன் நரம்பியல் நிபுணர் முல்லர் செய்த சோதனைமூலம் நிரூபணம் ஆனது. மதுப்பழக்கத்திலிருந்து வெளிவர பலமுறைகள் முயன்ற ஐந்துபேர்களை முல்லர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். அவர்களுடைய Basal ganglia – (மூளையில் பழக்கத்தை நினைவில் நிறுத்தும் பகுதி). அருகில் உணர்வு கருவிகளைப் பொருத்தி (MIT ஆய்வாளர்கள் எலிகளுக்கு பொருத்தியதைப் போல), மது அருந்தவேண்டிய ஏக்கம் வந்ததும் அந்த உணர்வு கருவிகளிலிருந்து தேவையான அளவு மின்சாரம் தன்னிச்சையாக பாய்வதுபோல் வடிவமைத்தார். 

அந்த மின்சாரம் மதுப்புழங்கிகளின் மூளையில், வெகுமதி அடையும் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்களிடம் வேண்டுமென்றெ மது அருந்துவதற்கான தூண்டுதலை அவர் ஏற்படுத்தினார். சாதாரணமாக அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களால் மது அருந்தாமல் இருக்க முடிந்ததில்லை. ஆனால், மூளையில் செலுத்தப்பட்ட மின்சாரத்தின் விளைவால், அவர்களுடைய பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. அவர்களால் மது அருந்தாமல் இருக்க முடிந்தது.


“மூளையில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதும் மது அருந்தும் எண்ணம் சுத்தமாக ஏற்படவே இல்லை.” என்று ஒருவர் கூறினார். ஆனால் அந்த மின்சாரத்தை நிறுத்தியவுடன் மது அருந்தும் ஏக்கம் வந்துவிட்டதாக அவர் கூறினார் என்றும் முல்லர் குறிப்பிடுகிறார்.


ஆனால், மதுப்புழங்கிகளின் மூளை நரம்பியலை கட்டுப்படுத்துவதன்மூலம் ஏற்படும் மது அருந்தாத நிலை நாள்பட நிலைக்கவில்லை. சோதனைக்கு எடுத்துக்கொண்ட ஐவரில் நால்வர் மீண்டும் மது அருந்தும் பழக்கத்திற்கு திரும்பிவிட்டார்கள். வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான நிலை, அவர்களை பழையபடியே மதுவுக்கு அடிமையாக்கியது. மது அருந்தாமல் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பிரச்சினைகளை அவர்கள் மதுவின் மூலமாகவே சந்திக்க முற்பட்டார்கள். ஆனால் பிரச்சினைகளை மதுவைத் தவிர வேறு விஷயங்களால் சரிசெய்ய முயன்றவர்கள், மதுப்பழக்கத்திலிருந்து மீண்டார்கள். 


ஆனால் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்ஸில் சேர்ந்தவர்கள், மதுப்பழக்கத்திலிருந்து முற்றிலும் மீண்டார்கள். பன்னிரெண்டு வயதிற்கே மதுப்பழக்கத்திற்கு அடிமையான இருவர் A.A-ல் சேர்ந்தபிறகு, இப்பொழுது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக மதுவைவிட்டு சுத்தமாக விலகி இருக்கிறார்கள். முல்லரின் சோதனைகளில் இருந்தவர்களுக்கு A.A-ன் மூலம் உதவி அளிக்கப்பட்டது. A.A-யினுடைய செயல்முறையின் மூலம் அவர்கள் மதுப்பழக்கத்திலிருந்து மீண்டுள்ளார்கள்.



பழக்கங்களின் முதன்மையான விதி இங்கே சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளையில் ஏக்கங்களை ஏற்படுத்தும் பகுதிகளை அறுவை சிகிச்சையின்மூலம் மாற்றினாலும் பழக்கங்களை நீண்ட நாட்களுக்கு கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் பழைய தூண்டுகோலையும் வெகுமதியையும் மாற்றாமல், செயல் முறையைமட்டும் மாற்றுவதன்மூலம் பழக்கத்தை மாற்றமுடியும் என்று இங்கு புலனாகிறது. 


பழைய தூண்டுகோலும், வெகுமதியும் அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் வெளிவரும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. “சில மதுப்புழங்கிகளை அறுவைசிகிச்சையின் மூலமே குணப்படுத்தமுடியும் இருப்பினும் அவர்களும் வாழ்க்கையில் பிரச்சனையை எதிர்கொள்ளுவதற்கு ஏதேனும் புதுவழியைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.” என்று டாக்டர் முல்லர் கூறுகிறார்.



A.A- இத்தகைய புதுவழிகளையே கற்றுத்தருகிறது.  A.A-ன் வெற்றியையும், அதன் நுட்பத்தையும் புரிந்துகொண்ட அறிவியலாளர்கள் அதே மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி, மக்களை புகை, மது, அதீத உடல் உணர்வு போன்ற தீயப்பழக்கங்களிலிருந்து மீட்க வழிகளை வகுத்துள்ளனர்.


*********


மாண்டி என்ற அந்த 24 வயது மாணவி, மிசிசிபி ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் மனநல ஆலோசனைக்கான அறையில் நுழைந்தார். வருடம் 2006, கோடைக்காலம். மாண்டிக்கு நகம் கடிக்கும் கெட்டபழக்கம், குழந்தைப்பருவத்திலிருந்தே இருக்கிறது. நகக்கணுக்களில் ரத்தம் வருமளவுக்கு, நகங்களைக் கடித்துக்கொண்டிருப்பது அவள் வழக்கம். தன்னுடைய புண்ணான விரல்களை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாது என்று அவள் முடிந்தவரை கைகளை சட்டைப்பைகளில் மறைத்து வைத்துக்கொள்வாள். எவ்வளவுதான் முயற்சி செய்து நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து மீள நினைத்தாலும், அவளால் அது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே இருந்தது. விரல்களில் நாற்றமடிக்கும் நகப்பூச்சு என்று சகலவிதமான பொருட்களையும் அவள் முயற்சித்து தோல்வியையே சந்தித்திருக்கிறாள். படிக்கும்பொழுது, தொலைக்காட்சி பார்க்கும்பொழுது என்று தன்னை மறந்த நிலையில் அவள் இருக்கும்பொழுது, அவளையறிமாமல் அவள் நகம் கடிக்க ஆரம்பித்துவிடுவாள்.


“பழக்கங்களை மாற்றும் பயிற்சி” என்ற துறையில் டாக்டர் பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவர், மாண்டியை இந்த மனநல ஆலோசனைக்கு பரிந்துரைத்திருக்கிறார். பழக்க மாற்றத்தின் பொன்விதியைப்பற்றி ஆலோசனை தரும் அந்த மனோவியல் நிபுணருக்கு நன்கு தெரியும். பழக்கத்தை மாற்றுவதற்கு புதிய செயலை அந்த பழக்க சுழற்சியில் அறிமுகப்படுத்த வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.


“நகங்களைக் கடிப்பதற்காக, விரல்களை உன் வாய்க்கு அருகில் எடுத்துச் செல்லும் பொழுது, உன் மனநிலை எப்படியிருக்கும்?” மனோவியலாளர் வினவினார்.


“விரல்களில் ஒருவிதமான பதற்றம் தோன்றும். நகங்களைக் கட்டைவிரலால் துழாவி, துருத்திக்கொண்டிருக்கும் நகத்தைத் தேடுவேன். அப்படிக்கிடைத்த்தும் அதனைக் கடிக்க ஆரம்பிப்பேன். ஆரம்பித்துவிட்டால், ஒவ்வொரு நகமாகத் தொடருவேன். நிறுத்துவதற்கு எனக்கு மனமிருக்காது.”


நோயாளிகளிடம் பழக்கத்திற்கான தூண்டுதலைப் புரிய வைப்பது “நிலையை அறியும் பயிற்சி” ஆகும். இது பழக்கத்தை மாற்றுவதற்கான முதல்படி ஆகும். மாண்டியின் விரலில் ஏற்படும் பதற்றம் அவளது நகம் கடிக்கும் பழக்கத்திற்கான தூண்டுதல் (துப்பு) ஆகும்.
“ஏன் தனக்கு இந்தப்பழக்கம் வந்தது என்பதற்கான தூண்டுதலை உணராமலேயே, மக்கள் பழக்கத்துக்கு ஆளாகிவிடுகின்றனர்.” என்று ப்ராட் டுஃப்ரேன் கூறுகிறார். இவர்தான் மாண்டிக்கு ஆலோசனை சிகிச்சை அளித்தவர்.


அடுத்து, ஏன் நகங்களைக் கடிக்கிறாய் என்று அவர் மாண்டியிடம் கேட்டார். ஆரம்பத்தில் அவளால் எந்தக் காரணத்தையும் குறிப்பிட முடியவில்லை. அவர்கள் உரையாடலின் மூலமாக, செய்கின்ற செயலில் ஈடுபாடு குறைந்தால் அவள் நகத்தைக் கடிக்க முற்படுவதை அவர் கண்டுகொண்டார். தொலைக்காட்சி பார்க்கும் பொழுதும், வீட்டுப்பாடங்களை செய்யும் பொழுதும் அவள் நகம் கடிப்பதை ஆலோசனை அனுபவத்தில் அவர் தெரிந்துகொண்டார். நகங்களைக் கடித்ததும், தன் வேலை முழுமையடைந்த திருப்தி அடைந்ததாக அவள் கூறினாள். இங்கு, அந்த திருப்தியே அவளுக்குக் கிடைத்த வெகுமதியானது.










 -தொடரும்




கண்டு ரசிக்க ஒரு காணொளி:

கடல் நாய்க்குத் தானும் சர்ஃபிங்க் செய்ய ஆசை. இந்தக் கடல் நாய் வளர்ப்பு பிராணி கிடையாது என்பதும் ஆச்சர்யம்தான்.






Math captured this GoPro footage of a baby seal climbing on his board and playing with him and a friend in the water.

We caught up with Matt to get the low down on what happened:
“Me and my friend Andrew were out enjoying some summer waves when this little guy came along and scared the hell out of Andy because we didn’t know what it was! It nudged his foot from underneath,” he explained.

After an hour or so of playing around with the pup, the guys decided to head back to the shore, but the little guy hadn’t finished and tried to follow them up the beach. “When we got home Andy rang the local marine wildlife authority to make them aware of what occurred just in case the seal was unwell… He didn’t seem unwell when he was surfing in like a pro!”


6 comments:

  1. //பழைய தூண்டுகோலையும் வெகுமதியையும் மாற்றாமல், செயல் முறையைமட்டும் மாற்றுவதன் மூலம் பழக்கத்தை மாற்றமுடியும்.//


    இந்த முறையைக் கடைப்பிடித்துத்தான் மாண்டியின் நகம் கடிக்கும் பழக்கத்தை அந்த உளவியல் வல்லுனர் நிறுத்தினாரா என அறிய காத்திருக்கிறேன்.

    கடல் நாய், கடலில் உலா வரும்(Surfing) காட்சியைக் கண்டுகளித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி! (Seal என்பதை கடல் நாய் என்று சொல்வார்கள். கடல் சிங்கம் என்று சொல்லலாமா எனத் தெரியவில்லை.)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      மாண்டி எப்படி திருந்தினார் என்று விரைவில் தெரிந்துவிடும்.

      sea lion என்பதை நேரடியாக மொழி பெயர்த்துவிட்டேன். தாங்கள் கூறிய பிறகுதான் கடல் நாய் என்பது நினைவுக்கு வந்தது. நன்றி மாற்றிவிட்டேன்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. எனக்குத் தெரிந்து பலர் மதுவிற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டபிறகும், சில காலம்தான் மதுரை நாடாமல் இருந்துள்ளனர். சில மாதங்கள் சென்ற பிறகு மதுவை பழையபடியே நாடிவிட்டனர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே !

      தாங்கள் கூறுவது மிகவும் உண்மைதான். நூலாசிரியரும் அதையே குறிப்பிடுகிறார்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. நகம் கடிக்கும் பழக்கம் என் மனைவிக்கும் உண்டு. ஆனால் அவர்கள் நகத்தைக் கடிப்பதை நான் பார்த்ததே இல்லை. அந்த பழக்கம் என் மகள்கள் இருவருக்கும் இல்லை. ஆனால் என் பேத்திக்கு வந்துள்ளது. நான்கு வயதில் அதுவும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே என் மனைவியுடன் பழகும் வாய்ப்புள்ள அவளுக்கு எப்படி இந்த பழக்கம் வந்திருக்க முடியும்? ஆகவே இது ஜீனில் இருக்க வாய்ப்புள்ளது. எந்த நேரத்தில் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பதே தெரிவதில்லை. கிரிக்கெட் வீரர் விராத் கோலி மைதானத்தில் ஸ்லிப்பில் (slip) நிற்கும்போதே நகம் கடிப்பதை டிவியில் பர்த்திருக்கிறேன். ஆகவே இது ஒருவகை பதற்றத்தில் (tension) இருக்கும்போதும் வருவதுண்டு போலும்! மனித மூளையிலுள்ள விசித்திரத்தில் இதுவும் ஒன்று!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      ஆமாம். இயற்கையின் படைப்பு மிகவும் விசித்திரமானது. மரபணுக்களால், தலைமுறைகள் தாண்டி சில பண்புகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒருவர் வாழும் சுற்றுப்புறத்தைவிட மரபணு அவருடைய பண்புகளில் குறிப்பிடத்தக்க சதவிகிதம் பங்குவகிக்கிறது.

      என்னுடைய நண்பர், அவருடைய தந்தை சக்கரைவியாதியை சொத்தாக கொடுத்துவிட்டதாக புலம்புவார். அவருடைய மகனும் அதையே கூறும் வாய்ப்பு உள்ளது என்று அவர் நினைப்பது கிடையாது.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete