பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, June 13, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 8 : பகுதி - 2


மூன்று வார இடைவெளிக்குப் பிறகு ஹிப்னடைஸ் அமர்வுக்கு வந்தாலும், கேத்தரின் மிக விரைவில் சமாதி நிலைக்குச் சென்றுவிட்டாள். இன்னொரு பிறவியில் இன்னொரு உடல் எடுத்திருக்கிறாள். “ஒரு பானையில் ஏதோ எண்ணெய் இருக்கிறது. பலவிதமான எண்ணெய்கள் இருக்கின்றன. பொருட்களை சேமித்துவைக்கும் கிடங்கு போல் தோன்றுகிறது. பானைகள் சிவந்த நிறத்தில் இருக்கின்றன. . . . . . செம்மண்ணில் செய்த பானைகள் என்று நினைக்கிறேன். பானைகளின் ஓரங்கள் நீலநிறத்தில் வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. சில மனிதர்களைக் காண்கிறேன். . . . . . . . அவர்கள் குகையில் வசிப்பவர்கள். அவர்கள் பானைகளையும், குடுவைகளையும் அடுக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தலை நன்கு மழிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பழுப்பு நிறத்தில் இருக்கிறார்கள்.“

“நீ அங்கு இருக்கிறாயா?” – நான்.

“ஆமாம். நான் பானைகளை மூடி அடைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு வகையான மெழுகை உபயோகித்து பானைகளின் வாயை நன்கு அடைக்கவேண்டும்.”

“அந்த எண்ணை எதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது?”

“எனக்குத் தெரியாது.”

“உன்னைப் பார்க்க முடிகிறதா? நீ எப்படி தோற்றமளிக்கிறாய்?”

“எனக்கு நீண்ட கூந்தல் உள்ளது. . . . . . . . நன்கு பின்னப்பட்டிருக்கிறது. நீண்ட ஆடை அணிந்திருக்கிறேன். அதன் ஓரங்கள் தங்க நிறத்தில் இருக்கிறது.”

“நீ அந்த துறவிகளிடம், அதாவது தலை மழிக்கப்பட்ட மனிதர்களிடம் வேலை செய்கிறாயா?”

“பானைகளையும், ஜாடிகளையும் மெழுகு வைத்து நன்கு மூடவேண்டும். அதுதான் என்னுடைய வேலை.”

“உனக்கு இந்த பானைகளை எதற்கு உபயோகப்படுத்தவேண்டுமென்று தெரியாதா?”

“ஏதோ சமய சடங்குகளுக்கு உபயோகப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். உறுதியாகத் தெரியாது. அவர்கள் தலையில் ஏதோ எண்ணெய்யைப் பூசிக்கொள்கிறார்கள். நான் ஒரு பொன்னிறப் பறவையைப் பார்க்கிறேன். என் கழுத்தைச் சுற்றியுள்ளது. அதன் வால் மிகவும் தட்டையாக உள்ளது. தலை கீழ் நோக்கியுள்ளது. . . . என் கால்களை நோக்கியுள்ளது.”

“உன் கால்களை நோக்கி பார்த்துக் கொண்டுள்ளதா?”

“ஆமாம். அப்படித்தான் நான் அதனை அணிந்து கொள்ளவேண்டும். கறுப்பாக, பிசுபிசுவென்று எதோ உள்ளது. . . . என்னவென்று தெரியவில்லை.”

“எங்கே உள்ளது?”

“அது பளிங்கினாலான பாத்திரத்தில் உள்ளது. அதையும் உபயோகிக்கிறார்கள். ஆனால் எதற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.”

“நீ எந்த நாட்டில் இருக்கிறாய்? எங்கு வசிக்கிறாய்? என்ன வருடம்? அந்த குகையில் இது சம்பந்தமாக எதையேனும் காண முடிகிறதா?”

“குகையில் எங்கும் வெறுமையாக இருக்கிறது. என்னால் எதனையும் கணிக்க முடியவில்லை.”


நான் அவளைக் காலத்தில் முன்னோக்கி அழைத்து வந்தேன்.

“ஒரு வெண்ணிற ஜாடியைப் பார்க்கிறேன். அதன் கைப்பிடி மேலே உள்ளது. கைப்பிடி தங்கநிறத்தில் ஏதோ பதிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருக்கிறது.”

“ஜாடியில் என்ன இருக்கிறது?”

“மருந்து எண்ணெய். மேலுலகத்துக்கு மனிதன் செல்லும்பொழுது உபயோகப்படுத்தப்படும் எண்ணெய்.”

“நீ மரணமடையப்போகிறாயா?”

“இல்லை. என்னைச் சார்ந்தவர்களும் யாரும் இங்கே மரணமடையவில்லை.”

“மேலுலகத்துக்கு செல்பவர்களை தயார் செய்வதுதான் உன்னுடைய வேலையா?”

“இல்லை. துறவிகளுக்கான வேலை அது. எண்ணெய் மற்றும் ஊதுபத்தி தேவைப்படும்பொழுது தருவதுதான் எங்களுடைய வேலை.”

“உன்னுடைய வயது என்ன?”

“பதினாறு.”

“நீ உன் பெற்றோர்களுடன் வசிக்கிறாயா?”

“ஆமாம். கருங்கல்லால் கட்டப்பட்ட வீட்டில் வசிக்கிறேன். மிகவும் பெரிய வீடு கிடையாது. இங்கு மிகவும் வெப்பமாக உணர்கிறேன்.”

“வீட்டுக்குள்ளே சென்றுவிடு.”

“வீட்டில்தான் இருக்கிறேன்.”

“உன் குடும்பத்தில் யாரெல்லாம் அங்கு இருக்கிறார்கள்?”

“ஒரு சகோதரன், என் அம்மா, மற்றும் இன்னும் ஒரு குழந்தையைப் பார்க்கிறேன். அது எங்கள் வீட்டு குழந்தை அல்ல.”

“குறிப்பிடத்தக்க செய்திகள் இல்லை என்றால், உன்னுடைய நிகழ்கால வாழ்க்கைப் பிரச்சினைக்குத் தொடர்பான இடத்துக்குச் செல். நமக்கு அதுதான் முக்கியம். அந்த அனுபவத்துக்குச் செல்வது உன்னுடைய பாதுகாப்புக்கு தொந்தரவாக இருக்காது. அந்த அனுபவத்துக்குச் செல்.”


மென்மையான குரலில் முணகினாள். “காலம்தான் பதில் சொல்லவேண்டும். . . . . . நான் மக்கள் இறப்பதைக் காண்கிறேன். . . . . ஆம் மக்கள் இறக்கிறார்கள். ஏன் மரணமடைகிறார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை.”

“ஏதாவது நோயினால் மரணமடைகிறார்களா?” முன்பு ஒருமுறை கேத்தரின் நீரில் பரவும் நோயினால் மக்கள் இறப்பதைக் கூறியது நினைவுக்கு வந்தது. அப்பொழுது அவளுடைய தந்தையும், ஒரு சகோதரனும் இறந்துவிட்டனர். கேத்தரின் அந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவள் நோயினால் மரணமடையவில்லை. மக்கள் பூண்டு மற்றும் சில பச்சிலைகளை உபயோகப்படுத்தி நோயை விரட்ட முயற்சி செய்தனர். கேத்தரின் இறந்தவர்களின் உடலை சரியானபடி பதப்படுத்தவில்லை, சடங்குகள் செய்யவில்லை என்று கவலையுற்று இருந்ததும் நினைவுக்கு வந்தது.


இப்பொழுது மீண்டும் அந்த பிறவிக்கு வேறொரு பரிமாணத்திலிருந்து வந்திருப்பது புரிந்தது. “அந்த நோய் நீர் வழியாக பரவுகிறதா?”

“மக்கள் அப்படித்தான் எண்ணுகிறார்கள். ஏகப்பட்ட மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள்.” எனக்கு அவள் வாழ்வு எப்படி முடியுமென்று தெரியும்.

“ஆனால் நீ அந்த நோயினால் இறக்கவில்லை, அல்லவா?”

“ஆம் நான் இறக்கவில்லை.”

“ஆனால் நீயும் நோய்வாய்ப்பட்டிருக்கிறாய். உனக்கும் உடல்நலமில்லை.”

“ஆமாம். மிகவும் குளிராக உணர்கிறேன். தண்ணீர் எனக்கு தண்ணீர் வேண்டும். தண்ணீரினால்தான் இந்த நோய் பரவுகிறது. . . . . . யாரோ இறந்துவிட்டார்கள்.”

“யார்?”

“என் தந்தை. என் ஒரு சகோதரனும் இறந்துவிட்டான். என் அம்மாவுக்கு சரியாகிவிட்டது. இருந்தாலும் மிகவும் உடல் வலுவிழந்துவிட்டாள். இறந்தவர்களின் உடலைப் புதைக்கவேண்டும். ஆனால் புதைப்பதென்பது எங்கள் சமயத்துக்கு எதிரானது. அதனால் மக்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறார்கள்.”


“எதிரானது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?” அவளுடைய நினைவு கூறுதலின் ஒற்றுமையை எண்ணி வியப்படைந்தேன். பலமாதங்களுக்கு முன் அவள் கூறியதை மீண்டும் கூறுகிறாள். மீண்டும் இறந்தவர்களின் உடல்கள் சரியானபடி சடங்குகள் செய்யப்படவில்லை என்று வருத்தப்படுகிறாள்.


“சடலங்களை குகைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அங்கு துறவிகள் உடலை வேறுலகத்துக்கு தயார் செய்வார்கள். சடலத்துக்கு எண்ணை பூசி சரியானபடி சுற்றிவைக்க வேண்டும். குகையில் வைத்திருப்பார்கள். ஆனால் நிலம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. . . . . . தண்ணீர் மிகவும் கெட்டுப்போய்விட்டது என்று கூறுகிறார்கள். தண்ணீரைக் குடிக்க வேண்டாம்” 

“இதை குணப்படுத்துவதற்கு வழியிருக்கிறதா? எந்த மருந்தாவது வேலை செய்கிறதா?”

“எங்களுக்கு பச்சிலைகள் தருகிறார்கள். பல்வேறுபட்ட பச்சிலைகள். அதன் மணம் . . . . . அந்த மணம் . . . . . என்னால் நுகரமுடிகிறது.”

“உன்னால் அந்த மணத்தை நினைவுபடுத்த முடிகிறதா?”

“அது வெண்மையாக இருக்கிறது. கூரைகளில் தொங்கவிட்டிருக்கிறார்கள்.”

“பூண்டு உபயோகிக்கிறார்களா?”

“எங்கும் தொங்கவிடப்பட்டுள்ளன. . . . . . அதன் குணம் ஒரேமாதிரி இருக்கிறது. . . . . . என்னுடைய வாயில், காதுகளில், மூக்கில் செருகிக்கொள்ளவேண்டும். அதன் மணம் தாங்க முடியவில்லை. அதனை செருகிகொண்டால், துர்தேவதைகள் உடலுக்குள் புகமுடியாமல் அது தடுத்துவிடும். ஊதாப்பூ நிற பழங்களும் தருகிறார்கள்.”

“நீ எந்த நாகரீக மக்களுடன் இருக்கிறாய்? உனக்கு பழக்கமான இடமாகத் தெரிகிறதா?”

“எனக்குத் தெரியவில்லை.”

“ஊதாப்பூ நிறப் பழத்தின் பெயர் என்ன?”

“டன்னீஸ். – ஒரு வகையான பெர்ரி பழம்.”

“உன் நோய் குணமடைய அது உதவுகிறதா?”

“அதுதான் தருகிறார்கள்.”

“டன்னீஸ்?” மீண்டும் கேட்டேன். “டன்னீஸ் என்றுதான் கூறுகிறார்களா?” நான் டன்னின் என்று யூகித்தேன். டன்னின் என்பது திராட்சை ரசம் தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் ஒரு வகையான திரவம்.

“ஆமாம். டன்னீஸ் என்றுதான் கூறுகிறார்கள்.”

“நீ ஏன் மீண்டும் இப்பிறவிக்கு வந்திருக்கிறாய்? உன்னுடைய நிகழ்கால வாழ்வுக்கு தேவையானது இங்கு எதுவும் உள்ளதா? உனக்கு இந்த பிறவியில் எதையேனும் உனக்கு பிரச்சனையாக உணர்கிறாயா?”

“அந்த மதம். மதச்சடங்குகள்.” கேத்தரின் முணகினாள். “அப்பொழுது இருந்த மதம், அது அச்சத்தில் கட்டமைக்கப்பட்ட மதம். . . . அச்சம் . . . . . அச்சமூட்டுவதற்கு ஏகப்பட்ட காரணங்களைக் கொண்ட மதம். . . . . ஏகப்பட்ட கடவுள்களைக் கொண்ட மதம்.”

“அந்த கடவுள்களின் பெயரை உன்னால் கூறமுடியுமா?”

“கண்களைக் காண்கிறேன். கரிய நிறம். . . . . ஒருமாதிரி . . . . . நரியைப் போன்ற தோற்றம் கொண்ட சிலை. காவல்தெய்வம். . . . . . ஒரு பெண்தெய்வதத்தைப் பார்க்கிறேன்.”

“அந்த கடவுளின் பெயர் தெரியுமா?”

“ஓசைரிஸ். . . . . சைரிஸ் . . . . . என்பது போன்ற பெயர். ஒரு கண்ணைப் பார்க்கிறேன் . . . . . ஒரே ஒரு கண். சங்கிலியால் உள்ளது. பொன்னாலானது.”

“ஒரே ஒரு கண்ணா?”

“ஆமாம். . . . . கேத்தர் என்பது யார்?”

நான் கேத்தர் என்ற பெயரைக் கேள்விப்பட்டதில்லை. ஓசைரஸ் என்ற கடவுள் எகிப்தின் முக்கிய கடவுள். ஐசிஸ் - ன் கணவருடைய சகோதரன். பிறகு கேதர் எகிப்தின் அன்பு, மகிழ்ச்சி, இன்பத்தின் கடவுள் என்று அறிந்துகொண்டேன். “அதுவும் ஒரு கடவுளா?”

“ஹேதர்! ஹேதர்”. . . . . . மௌனம் “பறவை . . . . . . தட்டையான ஃப்னிக்ஸ் பறவை” மீண்டும் மௌனம்.

“உன்னுடைய பிறவியின் இறுதி கட்டத்துக்குச் செல், உன்னுடைய மரணத்துக்கு முன் இறுதி நாளுக்குச் செல். அங்கு காண்பனவற்றைப் பற்றிக் கூறு.”

மென்மையான குரலில் பதிலளித்தாள் “நான் மக்களையும், கட்டிடங்களையும் காண்கிறேன். செருப்புகளைக் காண்கிறேன். மிகவும் சொரசொரப்பான திரைச்சீலையையும் காணமுடிகிறது.”

“அங்கு என்ன நடக்கிறது? நீ மரணத்தின் விளிம்பு நிலைக்குச் செல். உனக்கு என்ன நடக்கிறது? உன்னால் பார்க்க முடியும்.”

“என்னால் எதனையும் காணமுடியவில்லை. . . . . . எவற்றையும் என்னால் காணமுடியவில்லை.”

“எங்கு இருக்கிறாய்? என்னதான் காண்கிறாய்?”

“எதுவுமில்லை . . . . . . . கும்மிருட்டு . . . . . பிரகாசமான ஒளி. இதம்தரும் ஒளி” இறந்துவிட்டாள். ஸ்தூல நிலைக்குச் சென்று விட்டாள். அவள் மரணத்தைத் தழுவும் அனுபவத்தைக் கடந்து விட்டாள்.

“ஒளியை அடைந்து விட்டாயா?” வினவினேன்.

“நான் செல்கிறேன்.” அமைதியாக மீண்டும் காத்துக்கொண்டிருக்கிறாள்.

“உன்னால் பின்னால் சென்று, அந்த பிறவி நிலையில் கற்றுக்கொண்டவைகளை நினைவுகூற முடியுமா? இன்னும் அவை நினைவில் இருக்கின்றனவா?”

“இல்லை” முணகினாள். காத்துக்கொண்டிருக்கிறாள். திடீரென்று சுறுசுறுப்பாகி தலையை பக்கவாட்டில் அசைக்க ஆரம்பித்தாள். சமாதி நிலையில் இருப்பதுபோல் அவள் கண்கள் மூடியே காணப்பட்டன.

“என்ன நடக்கிறது? என்ன காண்கிறாய்?”

அவள் குரல் தெளிவாக உரைத்தது. “நான் உணர்கிறேன் . .  . . . யாரோ ஒருவர் என்னுடன் பேசுகிறார்.”

“என்ன கூறுகிறார்?”

“பொறுமையைப் பற்றிக் கூறுகிறார். பொறுமை மிகவும் அவசியம்”

“மேலே சொல்.”

கவிதையாக பேசும் வழிகாட்டி ஆன்மாவிடமிருந்து பதில் வந்தது. “பொறுமையும் தகுந்த நேரமும் . . . . . அனைத்தும் வரவேண்டிய காலத்தில் தானாக வந்து சேரும். பெரும்பான்மையானவர்கள் நினைப்பதுபோல் வாழ்க்கை என்பது, அட்டவணை தயாரித்து குறித்து வைத்தபடி குறித்த காலத்தில் நடப்பதுபோல் இருக்காது. வாழ்க்கையின் வேகத்தைக் கூட்ட முயற்சிக்கக் கூடாது. நமக்கு அளிக்கப்படுபவைகளை அளிக்கப்படும் நேரத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் எதிர்பார்க்கக் கூடாது. வாழ்வு முடிவில்லாதது. நாம் இறப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை. வேறு வேறு நிலைகளில் இருக்கிறோம். முடிவே கிடையாது. மனிதன் பல பரிமாணங்களில் இருக்கிறான். காலம் என்பது நாம் நினைப்பது போல் கிடையாது. காலம் என்பது நாம் எவ்வளவு கற்றுக் கொள்கிறோம் என்பதை பொறுத்தது.”

சற்று நேரம் மௌனமானாள். வழிகாட்டி ஆன்மா தொடர்ந்தது. “காலம் வரும்பொழுது உனக்கு அனைத்து விளக்கங்களும் கிடைக்கும். இதுவரை தரப்பட்ட அறிவுரைகளை, நன்கு உணர்ந்து ஏற்றுக் கொள்வதற்கு உனக்குப் போதுமான அவகாசம் கொடுக்கப்படும்.”

“இன்னும் நான் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் உள்ளதா?” வினவினேன்.

“அவர்கள் சென்று விட்டார்கள் என்னால் எதனையும் கேட்க முடியவில்லை.” கேத்தரின் மென்மையாக முனகினாள்.


--தொடரும். 


கற்றலின் எதிர்காலம் இப்படி இருக்குமா?
நியுயார்க்கில் “தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு [ Technology, Entertainment & Design  - TED ] என்ற இலாப நோக்கமற்ற அமைப்பு உள்ளது. சிறந்த யோசனைகளைப் பரவச் செய்தலே அந்த அமைப்பின் முக்கிய நோக்கம். அவர்களின் அந்த யோசனையை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு வருடமும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை சிறந்த யோசனை அளிப்பவர்களுக்கு விருதாக அளித்து ஊக்கமளிக்கிறது. 1984-ல் துவக்கப்பட்ட இந்த அமைப்பு இந்த வருடத்துக்கு சிறந்த யோசனைக்கான பரிசை டாக்டர். சுகதா மித்ரா என்ற கல்வி ஆராய்ச்சியாளருக்கு வழங்கியிருக்கிறது.
டாக்டர். சுகதா மித்ரா கற்றல் தொடர்பான ஆராய்ச்சியாளர். அவர் தனது “தடைச் சுவரில் ஒரு பாதை” என்ற சோதனை மூலம், ஆசிரியர்களோ, போதனைகளோ இல்லாமல் குழந்தைகள் ஆர்வத்தாலும், சுற்றியிருக்கும் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்வதாலும் தாங்களாகவே கற்றுக்கொள்ளக்கூடிய திறமைகளை இயற்கையாகவே கொண்டிருப்பதை நிரூபித்திருக்கிறார். 

1999-ல் சுகதா மித்ரா மற்றும் அவரது குழுவினர்கள் டில்லியில் தங்களுடைய அலுவலகத்தின் சுவரில் பெரிய துளையிட்டனர். அந்த துளையில் ஒரு கணினியை சுவரின் வெளிப்புறத்தில் இருந்து உபயோகிக்கும்வண்ணம் வைத்தனர். அந்த கணினிக்கு இணைய இணைப்பும் கொடுக்கப்பட்டது. சுவரின் மறுபக்கம் ஒரு குடிசைப்பகுதி இருந்தது. எந்தவித பயிற்றுவிப்பாளர்களும் இல்லாமல் அந்த குப்பத்தில் வசித்த குழந்தைகள், தாங்களாகவே ஒருவருக்கொருவர் உதவி செய்து கணினியை உபயோகிக்கக் கற்றுக்கொண்டுவிட்டனர். அவர்கள் கற்றுக்கொள்ளும் விதத்தை சுகதா மித்ரா குழுவினர் ஒரு ரகசியக் கேமராவில் பதிவு செய்தனர். இதிலிருந்து ஆசிரியர்கள் இல்லாமலே குழந்தைகள் கற்றுக்கொள்ள முடிகிறது என்று சுகதா மித்ரா நிருபித்தார்.

தான் நிரூபித்ததை மறுஉறுதிசெய்ய, ஆங்கில அறிவு இல்லாத கள்ளிக்குப்பம் என்ற தமிழ் நாட்டு கிராமத்தில் மீண்டும் இத்தகைய ஆய்வினை மேற்கொண்டனர். மீண்டும் கணினியை தனியே விட்டுவிட்டு அங்கிருந்த குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று சோதனை செய்தார். மரபணு சம்பந்தமான மென்பொருள் பாடங்களையும் அதில் விட்டுச்சென்றார். அந்த குழந்தைகள் மரபணு மற்றும் நியூரான் சம்பந்தமாக பதில்கள் தரக்கூடிய அளவுக்கு தங்களை உயர்த்திக்கொண்டனர். ஆசிரியர்கள் இல்லாமலேயே டில்லியில் உள்ள சிறந்த பள்ளியில் தேர்ச்சி அடையும் அளவுக்கு கற்றுக்கொண்டனர். இதன்மூலம், சுகதா மித்ரா தனது கொள்கையை மறு உறுதி செய்தார்.

நமது மூளையில் ரெப்டிலியன் என்ற பகுதி உள்ளது. பயமுறுத்தப்பட்டால் இந்த பகுதி நமது சிந்திக்கும் திறனைக் குறைத்து விடுகிறது. தற்சமயம் உள்ள கல்வித் தேர்ச்சிமுறை கிட்டத்தட்ட ரெப்டிலியனின் செயல்திறனை குறைக்கும் அளவுக்கு உள்ளது. உற்சாகமூட்டுவதே மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும் திறவுகோல் என்று டாக்டர். சுகதா மித்ரா கூறுகிறார். அவருக்கு மேல் ஆய்வுக்காகவும், நடைமுறைப் படுத்தலுக்காகவும் 2013-க்கான தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு இயக்கத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.  

முழு விளக்கங்களுக்கு வியக்கவைக்கும் கீழ்கண்ட முழு வீடியோவை அவசியம் காணவும். தேவைப்பட்டால் English subtitles –களை தெரிவு செய்ய வசதியும் உள்ளது. நம்மை சிந்திக்க வைக்கக்கூடிய வீடியோ.




வழக்குக்கு தீர்வு கூறுங்கள்:

ஒரு வழக்கறிஞர் உதவியுடன் இன்னொருவர், வழக்கறிஞர் தகுதி பெறுவதற்காக படித்துக்கொண்டிருந்தார். மூத்த வழக்கறிஞர் ஒரு நிபந்தனை விதித்தார். இளையவர் தான் பங்கேற்கும் முதல் வழக்கில் வெற்றிபெற்றால் தனக்கு பத்து இலட்சம் ரூபாய் தந்துவிட வேண்டும் என்று எழுதிவாங்கிக்கொண்டார். இளையவழக்கறிஞர் பட்டம் பெற்றுமுடித்துவிட்டார். ஆனால் அதற்குப்பிறகு அவர் எந்த வழக்கிலும் பங்கேற்காமல் காலம் கடத்திவந்தார்.  

மூத்த வழக்கறிஞர் பொறுக்கமுடியாமல் இளையவழக்கறிஞர் மீது வழக்கு தொடர்ந்துவிட்டார். தனக்கு இளையவழக்கறிஞர் கல்விசெலவுக்கான பத்து இலட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கோர்ட்டுக்கு இழுத்துவிட்டார். இளையவழக்கறிஞர் கோர்ட்டில் தனக்காக வாதாட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. 

தீர்ப்பு, இளையவழக்கறிஞருக்கு சாதகமாக இருந்தால் அவர் மூத்த வழக்கறிஞருக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் மூத்த வழக்கறிஞருக்கு சாதகமாக இருந்தால் அவர் மூத்த வழக்கறிஞருக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தப்படி முதல் வழக்கில் வென்றால் இளையவழக்கறிஞர் மூத்த வழக்கறிஞருக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆனால் கோர்ட்டின் தீர்ப்புபடியோ பணம் கொடுக்கத் தேவையில்லை. நீங்கள் பதில் சொல்லுங்கள். வழக்கில் யாருக்கு வெற்றி? மூத்த வழக்கறிஞருக்கு பணம் கிடைக்குமா கிடைக்காதா? என்னதான் தீர்வு?


15 comments:

  1. பழைய நினைவுகளில் சொன்னதையே சொன்னதும் வியப்பாக உள்ளது...

    /// காலம் என்பது நாம் எவ்வளவு கற்றுக் கொள்கிறோம் என்பதை பொறுத்தது... /// ஆன்மாவின் பதில் அருமை...

    /// உற்சாகமூட்டுவதே மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும் திறவுகோல்... ///

    டாக்டர். சுகதா மித்ரா அவர்களின் ஆய்வும், கூறியதும் சத்தியமான வரிகள்...

    வாதாட வைத்த மூத்த வழக்கறிஞருக்கு வெற்றி என்பதை விட வாழ்த்துக்கள் சொல்லலாம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

      பதிவை போஸ்ட் செய்த மறுநிமிடமே உங்களிடமிருந்து பின்னூட்டம் வந்ததுவிட்டது. முழுவதையும் நன்றாக உணர்ந்து, படித்துவிட்டே எழுதியிருக்கிறீர்கள், என்பது பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது. எனக்குத்தான் பதில் எழுதத் தாமதமாகிவிடுகிறது.

      வழக்கில் கிட்டத்தட்ட சரியான முடிவுக்கு வந்துவிட்டீர்கள்.

      வாழ்த்துக்கள்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. வழிகாட்டி ஆன்மாவென்று எப்படி அவர் உணர்ந்து கொள்கிறார் எண்ட்ரூ புரியவில்லை. ஒவ்வொரு முறையும் வழிகாட்டி ஆன்மா தன்னை வெளிப்படுத்தி கொள்வது சாத்தியமா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.ஜீவன் சிவம். வழிகாட்டி ஆன்மாவின் குரல் கேதரின் குரலைவிட முற்றிலுமாக வேறுபட்டது. மற்றும் மொழிநடையும் மாறுபட்ட மொழி நடையென்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். எனவே ஆசிரியருக்கு கண்டுபிடிப்பது எளிது என்று அறிகிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. //பொறுமையும் தகுந்த நேரமும் . . . . . அனைத்தும் வரவேண்டிய காலத்தில் தானாக வந்து சேரும். பெரும்பான்மையானவர்கள் நினைப்பதுபோல் வாழ்க்கை என்பது, அட்டவணை தயாரித்து குறித்து வைத்தபடி குறித்த காலத்தில் நடப்பதுபோல் இருக்காது.//

    மிக அருமையான கருத்து. இந்த உண்மையை தெரிந்துகொண்டால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

    டாக்டர். சுகதா மித்ரா அவர்களின் ‘கற்றல் தொடர்பான ஆராய்ச்சி’ பற்றிய காணொளியைப் பார்த்தேன். அவரின் ஆராய்ச்சி முடிவுகள் பிரமிக்க வைக்கின்றன என்று தான் சொல்லவேண்டும்.

    அந்த ‘சிக்கலான’ வழக்கின் தீர்ப்பின் முடிவை நீங்களே சொல்லிவிடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!.

      ஆமாம், டாக்டர். சுகதாவின் ஆராய்ச்சி மிகவும் வியக்கத்தக்க முடிவுகளைத் தந்திருக்கிறது. பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

      இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் யாரிடமிருந்தும் சரியான பதில் வராவிட்டால், வழக்கின் முடிவினைத் தெரிவித்துவிடுகிறேன்.

      திரு.தனபாலன் கிட்டத்தட்ட சரியான முடிவுக்கு வந்துவிட்டார்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
    2. நன்றி. யாராவது சரியான பதிலுடன் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்.

      இந்த வழக்கின் தீர்ப்பு இளைய வழக்கறிஞருக்கு சாதகமாகவே இருக்கும். ஏனென்றால் இதுவரை அவர் முதல் வழக்கில் வென்றதில்லை. ஆனால் வழக்கு முடிந்தவுடன் அவர் மூத்தவருக்கு ஒப்பந்தப்படி, பணத்தை செலுத்தியாக வேண்டும். செலுத்த மறுத்தால் மூத்தவர் அவரை மீண்டும் கோர்ட்டுக்கு இழுக்கலாம். இரண்டாம் முறை வெற்றி மூத்த வழக்கறிஞருக்கே.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. நன்றி தனபாலன். நானும் +1 செய்திருக்கிறேன். ஆனால் இது எதற்கு என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை.
    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்

    ReplyDelete

  5. // பெரும்பான்மையானவர்கள் நினைப்பதுபோல் வாழ்க்கை என்பது, அட்டவணை தயாரித்து குறித்து வைத்தபடி குறித்த காலத்தில் நடப்பதுபோல் இருக்காது. //

    இன்றுதான் இந்த பதிவை ஆழ்ந்து படிக்க நேரம் இருந்தது. மீண்டும் ஒருமுறை படிப்பேன்.


    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!

    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்

    ReplyDelete
  7. where is my comment?? I am getting follow up comments! :)))) It may be in spam.

    ReplyDelete
  8. //மிக அருமையாகப் போகிறது. பதிவை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டும். என்றாலும் காதரின் பல மாதங்களுக்குப் பின்னரும் முன்னர் சொன்னதின் தொடர்போடு பேசியது மிக ஆச்சரியமான ஒன்று. வழிகாட்டி ஆவிகள் சொல்வதை நாமும் ஏற்க வேண்டும் என்று தோன்றுகிறது. //

    this is my comment! :))))

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி. கீதா சாம்பசிவம். மன்னிக்கவும், என்னவாயிற்று என்று தெரியவில்லை.

      ஆமாம். வழிகாட்டி ஆன்மாக்கள் கூறுபவைகள் இந்து மதக்கருத்துகளை ஒட்டி வருவதுபோல் தோன்றுகிறது. அதனால் இயல்பாகவே நமக்கும் அதில் ஈடுபாடு ஏற்படுகிறது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  9. // அனைத்தும் வரவேண்டிய காலத்தில் தானாக வந்து சேரும். பெரும்பான்மையானவர்கள் நினைப்பதுபோல் வாழ்க்கை என்பது, அட்டவணை தயாரித்து குறித்து வைத்தபடி குறித்த காலத்தில் நடப்பதுபோல் இருக்காது. வாழ்க்கையின் வேகத்தைக் கூட்ட முயற்சிக்கக் கூடாது. நமக்கு அளிக்கப்படுபவைகளை அளிக்கப்படும் நேரத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் எதிர்பார்க்கக் கூடாது. வாழ்வு முடிவில்லாதது. நாம் இறப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை. வேறு வேறு நிலைகளில் இருக்கிறோம். முடிவே கிடையாது. மனிதன் பல பரிமாணங்களில் இருக்கிறான். காலம் என்பது நாம் நினைப்பது போல் கிடையாது. காலம் என்பது நாம் எவ்வளவு கற்றுக் கொள்கிறோம் என்பதை பொறுத்தது.” //

    இதனால்தான் வள்ளுவரும் பிறவிப்பெருங்கடல் என்றார் போலும்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஐயா! வள்ளுவர் பலதடவைகள் பிறவியைக் குறித்து கூறியிருக்கிறார். பிறவி முடிவில்லாமல் தொடர்வதுபோல் இருக்கிறது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete