பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Wednesday, July 10, 2013

பிறவி மர்மங்கள்: 10-2 (உண்மை நிகழ்வுகள்)


ஹிப்னாடிச சிகிச்சை தொடர்ந்தது.

“யார், யாரிடம் நீ நம்பிக்கையில்லாமல் இருக்கிறாய்?”
“எனக்கு ஸ்டுவர்ட்டிடம் நம்பிக்கையில்லை. பெக்கியிடம் நம்பிக்கையில்லை. அவர்கள் எனக்கு தீங்கு செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.”
“உன்னால் இவ்வகையான எண்ணங்களிலிருந்து வெளிவரமுடியாதா?”
“முற்றிலும் வெளிவர முடியாது. ஆனால் சில விஷயங்களில் வெளிவர இயலும். ஸ்டுவர்ட்டுக்கு நான் அஞ்சுவது தெரியும். அதனை உபயோகித்து அந்த நிலையிலேயே நிறுத்திவைக்க முயற்சிசெய்கிறான்.”
“அப்புறம் பெக்கி?”
“நான் நம்பிக்கைக் கொண்டிருப்பவர்களிடம், என்னை நம்பிக்கையிழக்க வைக்க முயற்சி செய்கிறாள். எனக்கு நல்ல விஷயங்களாக தெரிபவைகளை, அவள் தீயவிஷயங்களாகக் காண்கிறாள். அத்தகைய எண்ணங்களை எனக்குள் செலுத்த முயற்சிக்கிறாள். நான் அனைவரிடமும் நம்பிக்கையுடன் பழக முயற்சிக்கிறேன். ஆனால் பெக்கி என்னுள் சந்தேகங்களை விதைக்கிறாள். அதுதான் என்னுடைய பிரச்சினை. என் எண்ணங்களை அவள் மாற்றுவதற்கு நான் அனுமதிக்கக்கூடாது.” 

ஆழ்மன நிலையில் இருக்கும்பொழுது கேத்தரினால், பெக்கியிடமும், ஸ்டுவர்டுடமும் இருக்கும் குறைகளை சரியாக கணிக்க முடிகிறது. ஆழ்மன நிலையில் இருக்கும் கேத்தரின் ஒரு மிகச்சிறந்த மனோதத்துவ நிபுணராக பணிபுரிய முடியும் என்று நினைக்கிறேன். கருணையுடனும் சரியான உள்ளுணர்வுகளுடனும் அவளால் சிந்திக்க முடிகிறது. இயல்பு நிலை கேத்தரினுக்கு இத்தகைய சக்திகள் இல்லை. நான் இயல்பு நிலை கேத்தரினுக்கும், ஆழ்மன நிலை கேத்தரினுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும்.
“நீ யாரை நம்பலாம்? யார் யாருடன் நீ பழகுவது உனக்கு நன்மை பயக்கும்? யார் அவர்கள்?”
“உங்களை நம்பலாம்.” முணகினாள். எனக்கு இது தெரியும். ஆனால் அவளது தினசரி வாழ்க்கையில் பழகும் மனிதர்களுடன், அவள் நம்பிக்கையுடன் பழகுவது மிகவும் முக்கியம்.
“ஆமாம். நீ என்னுடன் நம்பிக்கையுடன் பழகலாம். ஆனால் நீ உன் வாழ்வில் நெருக்கமானவர்களிடமும், தினசரி பழகுபவர்களிடமும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.” நான் அவள், அவளைச் சார்ந்து சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். என்னைச் சார்ந்து இருப்பது மட்டுமே அவளுக்கு நன்மை அளிக்காது.
“நான் என் சகோதரியை நம்ப முடியும். அடுத்தவர்களைப் பற்றித் தெரியவில்லை. ஸ்டூவர்ட்டை ஓரளவுக்கு நம்பலாம். அவன் என்னிடம் அக்கறை கொண்டிருக்கிறான். ஆனாலும் அவனுக்கு அதில் குழப்பம் இருக்கிறது. அந்த குழப்பத்தில், அவனையும் அறியாமல் எனக்கு தீங்கு செய்துவிடுகிறான்.”
“ஆமாம் உண்மை. இவர்களைத் தவிர வேறு யாரிடமாவது நம்பிக்கை கொள்ளலாமா?”
“நான் ராபர்ட்-ஐ நம்பலாம்.” பதிலளித்தாள். ராபர்ட் மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு டாக்டர். ராபர்ட்டும் கேத்தரினும் நல்ல நண்பர்கள்.
“ஆமாம். வரும் காலங்களில் நீ உன் நம்பிக்கைக்கு பாத்திரமான புதியவர்களைச் சந்திக்கவும்கூடும் இல்லையா?”
“ஆமாம்.” ஒத்துக்கொண்டாள்.
பொதுவாக கேத்தரினுடைய ஆருடம் கூறும் திறமை எனக்கு வியப்பை அளித்தது. கடந்த கால அனுபவங்களையும் மிகவும் துல்லியமாகக் கூறுகிறாள். மேல்நிலை, வழிகாட்டி ஆன்மாக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு உண்மைகளுடன் கடந்த காலங்களைப் பற்றிக் கூறுகிறாள். அதைப்போல எதிர்காலங்களைப் பற்றியும் வழிகாட்டி ஆன்மாக்களுக்குத் தெரியுமா? அப்படி தெரிந்தால் அவர்களால் அதனைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? மனதில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஓடின.
“ஆழ்மன நிலையில் தொடர்பு கொண்டு நிகழும் உண்மைகளைக் கூறுவதுபோல் எதிர்காலங்களைப் பற்றியும் உன்னால் கூறமுடியுமா? கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் பார்த்துவிட்டோம்.”
“நிச்சயம் முடியும்.” ஒத்துக்கொண்டாள். “ஆனால் இப்பொழுது என்னால் எதனையும் காணமுடியவில்லை.”
“நிச்சயமாக முடியுமா?” ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“அப்படித்தான் நினைக்கிறேன்.”
“எந்தவித அச்சமும் இல்லாமல் உன்னால் எதிர்காலம் பற்றி கூற முடியுமா? பிரச்சினை எதுவும் இல்லாத எதிர்கால நிகழ்வுகள் குறித்து உன்னால் எதையாவது கூற இயலுமா? எதிர்காலத்தை பார்க்க முடிகிறதா?”
“என்னால் பார்க்க முடியவில்லை. அவர்கள் எனக்கு அனுமதி தரமாட்டார்கள்.” விரைவில் பதில் வந்தது. ‘அவர்கள்’ என்று வழிகாட்டி ஆன்மாக்களைப் பற்றிக் கூறுகிறாள் என்பது புரிந்தது.
“உன் அருகில் இருக்கிறார்களா?”
“ஆமாம்.”
“உன்னுடன் பேசுகிறார்களா?”
இல்லை. நடப்பவைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.” அவளது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவளுக்கு எதிர்காலத்தில் நுழைய அனுமதி இல்லை. அதனால் அவளுக்கு எந்த விதமான நன்மையும் இல்லாதிருக்கலாம். மேலும் அவளுடைய பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய சாத்தியங்களும் இருக்கிறது. இத்தகைய அனுபவங்களுக்கு நாங்கள் தயாராகவும் இல்லை. அதனால் மேலும் இது தொடர்பான கேள்விகளை கேட்பதை நிறுத்திவிட்டேன்.
“உன் அருகில் இருக்கும் ஆன்மா கிடியோன் தானே?”
“ஆமாம்.”
“அவருக்கு என்ன தேவை? ஏன் உன் அருகில் இருக்கிறார்? உனக்கு அவரைத் தெரியுமா?”
“இல்லை தெரியாது.”
“உன்னை அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாக்கிறார் அல்லவா?”
“ஆமாம்.”
“வழிகாட்டி ஆன்மாக்களையும் காணமுடிகிறதா?”
“அவர்களைக் காணவில்லை.”
“சில சமயங்களில் அவர்கள் எனக்கென்று தகவல்கள் அனுப்புகிறார்கள். உனக்கும் எனக்கும் உதவி செய்யக்கூடிய தகவல்களும் அனுப்புகிறார்கள். அவர்கள் பேசாமல் இருக்கும்பொழுதும் உனக்குத் தகவல்கள் கிடைக்கிறதா? உன் எண்ணங்களில் அந்த தகவல்களை விதைக்கிறார்களா?”
“ஆமாம். அப்படித்தான் நிகழ்கிறது.”
“உன்னால் எந்த அளவுக்கு செல்லமுடியும் என்று கண்காணிக்கிறார்களா? எதுவரை நீ நினைவில் நிறுத்தவேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்கிறார்களா?”
ஆமாம்.”
“அப்படியென்றால் பிறவிகளைப் பற்றி நீ கூறுவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் இல்லையா?”
“ஆமாம்.”
“உனக்கும் எனக்கும் கற்பிப்பதற்கும், உன் பயத்தையும், பதற்றத்தையும் போக்குவதற்காக இருக்கக் கூடும்.”
அவர்கள் நம்மிடம் தொடர்பு கொள்வதற்கு ஏகப்பட்ட வழிகள் உள்ளன. எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். . . . . அவர்களுடைய இருப்பை உணர்த்துவதற்காக.” கேத்தரின் குரலொலிகளைக் கேட்பதற்கும், காட்சிகளைக் காண்பதற்கும், ஆருடம் கூறுவதற்கும், பல்வேறு பட்ட தகவல்களைத் தருவதற்கும் உள்ள காரணம் ஒன்றுதான். அவர்களின் இருப்பை உணர்த்துவதற்காகத்தான். இருப்பை உணர்த்துவது மட்டுமன்றி, எங்களுக்கு உதவி செய்து எங்களையும் இறைவனின் நிலைக்கு உயர்த்துவதும் அவர்களின் நோக்கம்.
“அவர்கள் உன்னை தேர்ந்தெடுத்த காரணம் தெரியுமா?”
“இல்லை.”
“உன்னை ஏன் தொடர்பு கருவியாக தேர்ந்தெடுத்தார்கள்?” இது ஒரு இக்கட்டான கேள்வி. இயல்பு நிலை கேத்தரின் இந்த ஆடியோ டேப்புகளைக் கேட்கப் போவது இல்லை.
எனக்குத் தெரியாது.” மென்மையாக முணுமுணுத்தாள்.
“இந்த அனுபவம் உனக்கு அச்சமூட்டுகிறதா?”
“சில நேரங்களில்.”
“எப்பொழுதும் இல்லையா?”
“இல்லை.”
“நமக்கு இது மிகவும் நம்பிக்கையளிக்கிறது. நமது ஆன்மா நிரந்தரமானது. எனவே மரணத்தைப் பற்றி நமக்கு பயம் தேவையில்லை.”
ஆமாம்.” ஒத்துக்கொண்டாள். “நான் நம்பிக்கை கொள்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.” அவள் வாழ்க்கையில் முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்டாள். “விஷயம் அறிந்தவர்கள் கூறும் அறிவுரைகளை நம்புவதற்கு நான் கற்றுக் கொள்ள வேண்டும்.”
“நிச்சயமாக. ஆனால் சில சமயங்களில் நம்ப முடியாதவர்களும் இருப்பார்களே.”
ஆமாம். நான் குழப்பத்தில் இருக்கிறேன். ஆனால் நான் எனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே நம்ப வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.” மீண்டும் மௌனமானாள். அவளது தெளிவான சிந்தனை எனக்கு வியப்பை அளித்தது.
“ஒருமுறை நீ குழந்தையாக இருந்தபொழுது தோட்டத்தில் குதிரையுடன் இருந்தாய். நினைவிருக்கிறதா? உனது சகோதரியின் திருமணத்தின்பொழுது.”
“சிறிதளவு.”
“அந்த பிறவியில் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறதா?”
“ஆமாம்.”
“மீண்டும் அங்கு சென்று என்ன தெரிந்து கொள்ளவேண்டும் என்று பார்க்கலாமா?”
“இப்பொழுது செல்ல முடியாது. ஒவ்வொரு பிறவியிலும் ஏகப்பட்ட நிகழ்வுகள் உள்ளன. . . . . ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். . . . . . ஆமாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது முடியாது.” 

மீண்டும், அவளது தந்தைக்கும் அவளுக்குமான பிரச்சினையை களைய முற்பட்டேன். “உனக்கும் உன் தந்தைக்கும் உள்ள உறவு சுமூகமாக இல்லை. உன் வாழ்வை அது மிகவும் பாதித்திருக்கிறது.”
ஆமாம்.” பதில் வந்தது.
“அந்த விஷயங்களையும் நாம் பரிசீலிக்கவேண்டும். தந்தைக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு குறித்து நீ இன்னும் கற்றுக்கொள்ளவேண்டும். உக்ரேனில் சிறுவயதில் தந்தையை இழந்த சிறுவனை நினைத்துப் பார். அதிஷ்டவசமாக உனக்கு அத்தகைய இழப்பு இல்லை. தந்தை இருப்பதால் சில துன்பங்களை நீ வாழ்நாளில் சந்திக்கவில்லை.”
“வேறு மாதிரியான துன்பங்கள். . . . . .சிந்தனைகள்.” அவள் முடித்தாள்.
“எந்தவிதமான சிந்தனைகள்?” அவள் வேறு ஒரு புதுவிஷயத்தைப் பற்றி பேசுவது எனக்குப் புரிந்தது.
அனஸ்தீசியா சம்பந்தமாக. எனக்கு அவர்கள் அனஸ்தீசியா கொடுத்தபொழுது. உனக்குக் கேட்கிறதா? உன்னால் கேட்க முடிகிறது?” அவளது கேள்விகளுக்கு அவளே பதில் கூறிக்கொண்டாள். “என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரிகிறது. எனக்கு தொண்டை ஆபரேஷன் நடக்கும்பொழுது, நான் மூச்சுத்திணறி இறப்பது பற்றி பேசிக்கொள்கிறார்கள்.” 

கேத்தரின் முதன்முதலாக என்னை சந்திக்க வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவளுக்கு தொண்டையில், குரல்வளை சம்பந்தமாக ஆபரேஷன் நடந்து முடிந்திருந்தது என் நினைவுக்கு வந்தது. ஆபரேஷனுக்கு முன்பு அவள் பதற்றத்துடன் இருந்தது தெரியும். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு அவளது கலவரத்தைப் போக்குவதற்கு நர்ஸுகளின் உதவி தேவைப்படும் அளவுக்கு அதிர்ச்சியுடன் இருந்தாள். இப்பொழுது பார்த்தால், ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும்பொழுது, அதாவது, கேத்தரின் அனஸ்தீசியா மயக்கத்தில் இருக்கும்பொழுது டாக்டர்களின் கலந்துரையாடல்கள் அவளை பயமுறுத்தி இருக்கின்றன என்று தெரிகிறது. நான் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, ஆபரேஷன் தியேட்டரில் நிகழும் சாதாரண பேச்சு வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தது. அந்த நேரங்களில் நாங்கள் கூறும் நகைச்சுவைகள், திட்டும் வார்த்தைகள், விவாதங்கள் நினைவுக்கு வந்தன. ஆபரேஷன் தியேட்டரில் மயக்கத்தில் இருக்கும் நோயாளிகளின் ஆழ்மனதில் அவை பதிய நேர்ந்தால் எப்படி இருந்திருக்கும்? அப்படி பதிந்திருக்கும் நினைவுகள், ஆபரேஷனுக்குப் பிறகு எந்த அளவில் அவர்களைப் பாதித்திருக்கும்? ஆபரேஷனுக்குப் பிறகு நோயாளிகள் குணமடைவதை அத்தகைய கலந்துரையாடல்கள் எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்? அவை நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் அல்லவா? எதிர்மறையான விவாதங்களைக் கேட்டு நோயாளிகள் யாரும் இறந்திருப்பார்களா? மருத்துவர்களே, பிழைப்பது கடினம் என்று பேசுவதைக் கேட்ட நோயாளிகள் தன்னம்பிக்கையை இழந்து பிழைப்பதற்கான ஊக்கத்தையும் இழக்கக் கூடுமே.  

“அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” வினவினேன்.
“ஒரு குழாயை என் வாய் வழியாக உட்செலுத்த வேண்டும். குழாயைத் திருப்பி எடுக்கும்பொழுது என்னுடைய குரல்வளை வீங்கி விடும் என்று பேசிக்கொண்டார்கள். என்னால் கேட்க முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை.”
“ஆனால், உன்னால் கேட்க முடிந்திருக்கிறது.”
“ஆமாம். அதனால்தான் நான் ஏகப்பட்ட துன்பங்களுக்கு ஆளாக நேரிட்டது.” அன்றைய சிகிச்சைக்குப் பிறகு கேத்தரினுக்கு, எதையும் விழுங்குவதற்கு பயப்படும் நிலைமை முற்றிலுமாக நீங்கியது. தண்ணீரைக் குடிக்கவும் பயந்து கொண்டிருந்த அவளது நிலைமை மாறிவிட்டது. “எனக்குள் இருந்த பதற்றம் . . . . . . மூச்சுத் திணறி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்.”
“இப்பொழுது நலமாக எண்ணுகிறாயா?”
“ஆமாம். அவர்கள் செய்யும் தவறை உங்களால் சரிசெய்ய முடியும்.”
“என்னால் முடியுமா?”
“ஆமாம். உங்களால் முடியும். . . . . . அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. என் குரல் வளையில் குழாயை செலுத்தினார்கள். பிறகு அவர்களிடம் என்னால் எதுவும் கூற இயலவில்லை.”
“இப்பொழுது நீ நலமாக உணருகிறாய் அல்லவா?”
“ஆமாம்.” சிறிது நேரம் மௌனமானாள். சில நிமிடங்களில் தலையைப் பக்கவாட்டில் அசைக்க ஆரம்பித்தாள். அவள் எதையோ உற்றுக் கேட்பதுபோல் இருந்தது.
“நீ ஏதோ செய்திகளை கேட்பதுபோல் உள்ளது, என்ன செய்திகளைக் கேட்கிறாய்? வழிகாட்டி ஆன்மாக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.”

யாரோ என்னிடம் கூறினார்கள்.” தெளிவின்றி பதில் வந்தது.
“உன்னுடன் யாராவது உரையாடுகிறார்களா?”
“அவர்கள் சென்றுவிட்டார்கள்.”
“அவர்களை மீண்டும் அழைக்க முயற்சி செய். அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் உனக்கும் எனக்கும் உதவி செய்யக்கூடும்.”
அவர்கள், அவர்களாக விரும்பினால் மட்டுமே வரமுடியும். நாம் விரும்பும் தருணங்களில் அவர்களை அழைக்க முடியாது.” உறுதியாக பதில் வந்தது.
“உனக்கு எந்த அதிகாரமும் இல்லையா?”
“கிடையாது.”
“சரி. அனஸ்தீசியா கொடுத்த நிலையில் உனக்கு மீண்ட ஞாபகங்கள் மிகவும் முக்கியமானவைகள். உனது பதற்றத்துக்கும், மூச்சுத் திணறலுக்கும் ஆதி அந்த நிகழ்ச்சிதான்.”
“அது உங்களுக்கு முக்கியமானது. எனக்கு அல்ல.” மறுத்து பதிலளித்தாள். அவளுடைய பதில் என் எண்ணங்களை தட்டி எழுப்பியது. அவளது மூச்சுத் திணறல் குணமடைந்து இருந்தாலும், இந்த உண்மை அவளைவிட எனக்குத்தான் மிகவும் முக்கியமானது. அவளது எளிமையான பதில் பல்வேறுபட்ட அர்த்தங்களைத் தந்தது. இந்த உண்மையின் வீச்சு, மனித மனங்களையும், உறவுகளையும் பற்றி புதுவிதமான மதிப்பீடுகளைத் தருகிறது. உடல்நிலையை சரிசெய்வதைவிட, உதவி செய்வது மிகவும் முக்கியமானது.
“உனக்கு நான் உதவி செய்வதற்காக, அது எனக்கு முக்கியமானதா?” வினவினேன்.
ஆமாம். அவர்கள் செய்த தவறை நீங்கள் சரிசெய்ய முடியும். இதுவரை நீங்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்.” ஓய்வெடுக்க ஆரம்பித்தாள். நாங்கள் இருவரும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டோம்.  

என்னுடைய மகளுக்கு மூன்றாவது பிறந்தநாள் வந்தது. என் மகள் ஏமி, ஒடோடி வந்து என் கால்களைக் கட்டிக் கொண்டாள். என் முகத்தை நோக்கி “அப்பா, எனக்கு உங்களை நாற்பதாயிரம் வருடங்களாக மிகவும் பிடித்திருக்கிறது.” மழலையாகக் கூறினாள். குழந்தையின் பிஞ்சு முகத்தைப் பார்த்தேன். என் வாழ்நாளின் அதிகபட்ச சந்தோஷத்தை அடைந்ததுபோல் தோன்றியது.

 

-----தொடரும்.

 

 

 

கவனக்கலை (ஒரே நேரத்தில் பல செயல்களை புரியும் கலை):

அஷ்டாவதானி, தசாவதானி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எத்தனை பேர் நேரில் பார்த்திருக்கக்கூடும் என்று தெரியவில்லை. 

இவ்வகை கலைகளைப்பற்றி சற்று மேலும் விளக்கங்களுக்கு
 


 
மேடையில் ஒரு கலைஞர் செயல்படுத்துவதைக் காண கீழ்க்கண்ட வீடியோவைக் காணவும். மிகவும் அருமையான வீடியோ. 


 

 

தர்க்க வகைப் புதிர்:

பழங்களுடன் ஆப்பிள்கள், ஆரஞ்சுகள், ஆப்பிள்கள் மற்றும் ஆரஞ்சுகள் என்று எழுதப்பட்ட மூன்று பெட்டிகள் உள்ளன. ஆனால் ஒரு பெட்டியில்கூட குறிப்பிடப்பட்ட பழங்கள் இல்லை. அனைத்து பெட்டிகளிலும் லேபிள்கள் தவறாக ஒட்டப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு ஏதாவது ஒரு பெட்டியிலிருந்து, ஒரு பழத்தை மட்டும் எடுக்க அனுமதி உண்டு. அப்படி எடுத்து பார்த்துவிட்டு மூன்று பெட்டிகளிலும் சரியானபடி லேபிள்களை ஒட்டவேண்டும். எப்படி ஒட்டுவது? சிறிது முயற்சி செய்தால் விடை கூறிவிட முடியும்.

16 comments:

 1. கற்றது கையளவு; கல்லாதது உலகளவு என்பது நிரூபிக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. july 10ஆம் தேதியே போட்டிருக்கீங்க. நேற்றுக் கூட வந்து பார்த்தேன். என்ன காரணமோ பதிவே தெரியலை. இப்போத் தான் தெரியுது. படிச்சுட்டு வரேன். :))))

  ReplyDelete
  Replies
  1. தயவு செய்து www.packirisamy.blogspot.com.au என்று முயற்சி செய்து பாருங்கள்.

   Delete
 3. // இயல்பு நிலை கேத்தரினுக்கு இத்தகைய சக்திகள் இல்லை. நான் இயல்பு நிலை கேத்தரினுக்கும், ஆழ்மன நிலை கேத்தரினுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும்.//

  எத்தனை அரியதொரு முயற்சி. இப்படி எல்லாம் உண்டு என்பதே இன்று தான் தெரியும்.

  //இல்லை. நடப்பவைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.” அவளது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவளுக்கு எதிர்காலத்தில் நுழைய அனுமதி இல்லை. அதனால் அவளுக்கு எந்த விதமான நன்மையும் இல்லாதிருக்கலாம். மேலும் அவளுடைய பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய சாத்தியங்களும் இருக்கிறது.//

  எதிர்காலம் குறித்து அறிந்தோமானால்,?????? சுவாரசியம் மட்டும் போகாது. இன்னும் எத்தனையோ! :)))))

  //நமக்கு இது மிகவும் நம்பிக்கையளிக்கிறது. நமது ஆன்மா நிரந்தரமானது. எனவே மரணத்தைப் பற்றி நமக்கு பயம் தேவையில்லை.”//

  நம் தத்துவமே இது தானே. என்றாலும் இன்றளவும் பயந்து கொண்டு தான் இருக்கிறோம்.


  //மருத்துவர்களே, பிழைப்பது கடினம் என்று பேசுவதைக் கேட்ட நோயாளிகள் தன்னம்பிக்கையை இழந்து பிழைப்பதற்கான ஊக்கத்தையும் இழக்கக் கூடுமே. //

  நல்லதொரு கருத்து. ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து அழகாகச் சொல்லி இருக்கிறார்.


  //அவர்கள், அவர்களாக விரும்பினால் மட்டுமே வரமுடியும். நாம் விரும்பும் தருணங்களில் அவர்களை அழைக்க முடியாது.”//

  எல்லையற்ற ஒன்றை நாம் அழைக்க முடியுமா? முடியாது என்பதும், அதன் பரந்து விரிந்து எல்லையற்று இருக்கும் தன்மையையும் காட்டி இருக்கிறது இந்த உரையாடல்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். தங்கள் கருத்துக்களிலிருந்து, மிகவும் உணர்ந்து படித்திருப்பது புரிகிறது.

   தாங்கள் கூறுவது போல, மரணத்துக்கு பயந்து கொண்டிருக்கும் முதியவர்களை சந்தித்திருக்கிறேன். அச்சப்படுவதைவிட, கிடைத்திருக்கும் வாழ்க்கையை திருப்திகரமாக உபயோகப்படுத்துவது நல்லது என்று நினைக்கிறேன்.

   ஆங்கிலத்தில் "Life is not measured by the years you live or how much time you spent, but by how well you brought joy into the lives of others." என்று கூறுவது நினைவுக்கு வருகிறது.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. ஒரே பிரம்மிப்பாக இருக்கிறது. நான் யார் என்று கேள்வி கேட்க சொல்லி தன்னை உணர்ந்து கொள்ள அறிவுறுத்திய ரமணரின் போதனைகள் ஞாபகம் வருகிறது. மனதின் சக்திகளை நாம் உணர்ந்து கொள்ள எந்த முயற்சியும் செய்வதில்லை. ஆனால் நம்மை உணர ஆரம்பித்தால்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திரு. ஜீவன்சிவம். தாங்கள் கூறுவது உண்மைதான். மனிதன் இயற்கையாக தன்னிடம் உள்ள சக்திகளை உணர்ந்து கொள்ள முயற்சி செய்வது கிடையாது. இயற்கையை எதிர்த்து அதிக தூரம் சென்றுவிட்டான் என்று கருதுகிறேன். தான் இயற்கையின் ஒரு பகுதி என்பதை மறந்துவிட்டான் என்றே எண்ணுகிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. மயக்க மருந்து கொடுத்தபின் நோயாளிகளுக்கு உணர்வு/நினைவு இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கே ‘கேத்தரின் அனஸ்தீசியா மயக்கத்தில் இருக்கும்பொழுது டாக்டர்களின் கலந்துரையாடல்கள் அவளை பயமுறுத்தி இருக்கின்றன என்று தெரிகிறது.’ என்பதைப் படித்தவுடன் ஆச்சரியமாக இருந்தது. தொடர் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது உங்களின் மொழி பெயர்ப்பின் துணையோடு. வாழ்த்துக்கள்!

  சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அவர்களைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது படித்த தகவல் புதியவை. பகிர்வுக்கு நன்றி.


  கவனகர் கனக சுப்புரத்தினம் அவர்கள் கவனக்கலைபற்றிய புத்தகத்தை ஏற்கனவே படித்திருக்கிறேன். அவரது தந்தையார் கவனகர் திரு இராமய்யா அவர்களது நிகழ்ச்சியை ஏற்கனவே பொதிகை தொலைக்காட்சியில் (அப்போது சென்னை தொலைக்காட்சி) பார்த்து வியந்ததுண்டு. நீங்கள் கொடுத்த இணைப்பைப் பார்த்துவிட்டு அந்த நிகழ்ச்சி பற்றி எழுத எண்ணியதால் தாமதமாகிவிட்டது.
  ஒரே வரியில் சொன்னால். மிக மிக அருமை!

  தர்க்கப் புதிருக்கான விடையை தேடிக்கொண்டிருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா! நானும் நான்கு நாட்களாக ஊரில் இல்லை. இன்றுதான் சாவகாசமாக பதில் எழுத நேரம் கிடைத்தது.

   சதாவதானி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யாரையும் பற்றி படித்து கிடையாது. மிகவும் அதிசயமான கலையாகத்தான் உள்ளது. ஆனால் அந்த வீடியோவை வெறும் 8000 தடவை மட்டுமே மக்கள் பார்த்துள்ளதாகத் தெரிகிறது

   புதிருக்கு விடை:

   ஆப்பிள்கள் மற்றும் ஆரஞ்சுகள் என்ற பெட்டியிலிருந்து முதலில் பழங்களை எடுங்கள். அதில் ஆப்பிள் வந்தால், அந்தப் பெட்டியில் ஆப்பிள்கள் மட்டுமே இருக்க வேண்டும். எனவே அதில் ஆப்பிள்கள் என்ற லேபிளை ஒட்டுங்கள். தற்போது இரண்டு பெட்டிகள் மீதம் உள்ளன. இரண்டிலும் தவறான லேபிள்கள் உள்ளன . எனவே ஆரஞ்சு என்று உள்ள பெட்டியில் “ஆப்பிள்கள் மற்றும் ஆரஞ்சுகள்” லேபிளையும், ஆப்பிள்கள் என்று உள்ள பெட்டியில் “ஆரஞ்சுகள்” லேபிளையும் ஒட்டிவிட்டால் தீர்வு கிடைத்துவிடும்.

   அதில் ஆரஞ்சு வந்தால், அந்தப் பெட்டியில் ஆரஞ்சுகள் மட்டுமே இருக்க வேண்டும். எனவே அதில் ஆரஞ்சுகள் என்ற லேபிளை ஒட்டுங்கள். தற்போது இரண்டு பெட்டிகள் மீதம் உள்ளன. இரண்டிலும் தவறான லேபிள்கள் உள்ளன. இனி நீங்களே தீர்க்க முடியுமென்று நினைக்கிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 6. புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
  பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
  கல்லா மனிதராய் பேயாய் கனங்களாய்
  வல்லசுரராகி முனிவராய் தேவராய்
  செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
  எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
  - மாணிக்கவாசகர் (திருவாசகம்)

  என்று எல்லா பிறவிகளையும் சொல்கிறார் மாணிக்கவாசகர். ஹிப்னாடிச சிகிச்சையில் கடந்த பிறவிகள் ஞாபகத்தின்போது மனித்த பிறவி மட்டுமே ஞாபகம் வருவதேன்? மற்ற பறவை விலங்குகளாய் எடுத்த பிறவிகள் ஞாபகம் வராதது ஏன்? – இது ஒரு மொழிபெயர்ப்பு தொடர் என்றபோதும் உங்கள் கருத்து என்ன என்று அறிய ஆசைப்படுகிறேன். ( தவறாக எண்ண வேண்டாம்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!

   நமது இந்தியத் தத்துவத்தின்படி, புல், புழு, மரம், பறவை, பாம்பு என்று பல பிறவிகளைக் கடந்துதான் இறுதியாக மனிதப்பிறவி ஒருவருக்குக் கிடைக்கிறது. அந்த, மனிதப் பிறவியிலேயே கேத்தரின் எண்பத்து மூன்று தடவை பிறந்ததாகக் குறிப்பிடுகிறாள். தாங்கள் கூறுவதுபோல் பல படிகளைக்கடந்துதான் மனிதப் பிறவியை அடைந்த்தாக கேத்தரின் குறிப்பிட்டிருந்தால், நமது தத்துவங்களுக்கு முழுவடிவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். நான் டாக்டர் வைஸ்ஸைவிட மாணிக்கவாசகரை அதிகம் ஒத்துக்கொள்கிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 7. BSNL BROADBAND connectivity பிரச்சினை காரணமாக இரண்டுமுறை எனது கருத்துரை பதிவாகி விட்டது. இரண்டாவதாக வந்ததையும் இதனையும் நீக்கி விடவும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா! நீக்கிவிட்டேன்.

   Delete
 8. அடுத்த பதிவை இன்னமும் போடலைனு நினைக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி உரல் போட்டு வந்து பார்த்துட்டேன். பதிவு எதுவும் அப்டேட் ஆகலை. :))))

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும். தங்களுடைய பின்னூட்டம் வந்தபொழுது, பதிவேற்றம் செய்யவில்லை. வியாழக்கிழமைகளில் சிட்னி நேரம் சுமாராக இரவு 8 மணிக்குத்தான் எப்பொழுதும் பதிவிடுவேன். சென்ற முறையும் வியாழனன்றுதான் பதிவிட்டேன். ஃபோனிலிருந்து பதிவிட நேர்ந்தது. எப்படி புதன் கிழமையைக் காட்டியது என்று எனக்குப் புரியவில்லை. தொடர்வதற்கு நன்றி.

   Delete