பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Friday, March 15, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 2

               கேத்தரின் ட்ரீட்மெண்டுக்காக என் க்ளினிக்கு வாரம் ஒரு முறை வந்தாள். கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் மிகவும் தீவிரமான மனநல சிகிச்சை அவளுக்கு கொடுத்திருந்தேன். ஒரு நோயாளி என்ற பார்வையில் கேத்தரின் குணமாகி நல்ல நிலைக்கு வர வேண்டுமென்று மிகவும் ஆர்வத்துடன் வந்தாள். அவளுக்கு நான் சொல்வதை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலும், நல்ல உள்ளுணர்வும் இருந்தன. 

அந்த ட்ரீட்மெண்ட் சமயத்தில் அவளுடைய சிந்தனைகளையும், உணர்வுகளையும் அவளுக்கு வரக்கூடிய கனவுகளையும் பற்றி ஆராய்ந்தோம். அவளுடைய நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி அமைந்திருப்பதை அவளால் உணர முடிந்தது. அவளுடைய தந்தை கடலில் வேலை செய்து கொண்டிருந்ததால் அடிக்கடி வீட்டுக்கு வர முடியாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அவளது தந்தை குடித்துவிட்டு கோபமாக இருந்தது அதிகமாக நினைவில் இருந்தது. அவளுக்கும் ஸ்டூவர்டுக்கும் இருந்த உறவு சுமுகமாக இல்லாமல் இருப்பதை அவளால் உணர முடிந்தது. அதற்காக அடங்கிப் போகாமல், சரியானபடி அவளுடைய கோபத்தை ஸ்டூவர்டிடம் வெளிப்படுத்தவும் அவள் தயங்கியதில்லை. அவள் ஓரளவுக்கு குணமாகியிருப்பாள் என்று நினைத்தேன். நோயாளிகளுக்கு முதலில், ஏன் சில நிகழ்ச்சிகள் அவர்களை கொந்தளிக்க வைக்கின்றன என்று புரிய வைக்க வேண்டும். பழைய அனுபவங்களின் பிரதிபலிப்பால் அவர்களுக்கு அந்த மனநிலை ஏற்படக்கூடும். எந்த காரணத்தினால் அமைதியில்லாத மனநிலை ஏற்படுகின்றது என்று புரிந்ததும், அதனை ஒரு மூன்றாவது மனிதனாக பார்த்து, அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்வார்கள். முடிந்த அளவு வெற்றியும் அடைவார்கள். ஆனால் கேத்தரின் விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.  

பதற்றமும், மூச்சுத்திணறலும் இன்னமும் அவளைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்தவில்லை. மீண்டும் மீண்டும் வரும் கனவுகளும் அவளை அதிகம் பயமுறுத்திக்கொண்டே இருந்தன. அவளுக்கு இன்னமும் இருளைக் கண்டாலும், தண்ணீரைக் கண்டாலும் மிகவும் பயமாக இருந்தது. அவள் எப்பொழுது நிம்மதியாக உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. அவளது இதயத் துடிப்பும் சீராக இல்லை. மாத்திரைகளையும் சாப்பிட மிகவும் பயந்தாள். மாத்திரை சாப்பிட்டால், மாத்திரை தொண்டையில் சிக்கிவிடுமென்று பயந்தாள். மாத்திரை எதுவும் சாப்பிடவில்லை. நாங்கள் எந்தப் பாதையில் பயணம் சென்றாலும் முடிவில் அது முட்டுச்சுவரை சந்திக்கும் நிலை இருந்தது. எந்த அளவுக்கு அவளை குணப்படுத்துவது கடினமாக இருந்ததோ அந்த அளவுக்கு, அவளை எப்படியாவது குணப்படுத்தியே தீரவேண்டும் என்ற வெறியும் எனக்கு அதிகமாக இருந்தது. எப்படியாவது நான் கேத்தரினுக்கு உதவி செய்தே ஆகவேண்டும் என்று தீர்மானித்தேன்.  

அப்பொழுது வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி நடந்தது. கேத்தரின் விமானத்தில் செல்வதற்கு மிகவும் பயப்படுவாள். ஆனால் 1982-ல் ஸ்டூவர்டுடன், சிகாகோவிற்கு ஒரு மருத்துவ மாநாட்டுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் கேத்தரின் ஸ்டூவர்டை, ஒரு எகிப்து ஆர்ட் எக்சிபிஷனுக்கு அழைத்து சென்றாள். ஒரு வழிகாட்டியுடன் அவர்கள் ஒரு குழுவாக சென்றார்கள். கேத்தரினுக்கு எகிப்து கலை பொருட்கள், சிற்பங்கள் மேல் ஆர்வம் அதிகமாக இருந்தது. பழங்கால எகிப்து வரலாறு, கலைப்பொருட்கள் பற்றி அவளுக்கு பரிச்சயம் எதுவும் கிடையாது; பாடங்களிலும் படித்தது கிடையாது. ஆனாலும் அந்த கலைக்கூடத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அவளுக்கு முன்னமேயே பார்த்திருந்ததுபோல் ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. அந்த குழுவிடைய டூர் கைடு, அந்த மியூசியத்தில் இருந்த கலைப்பொருட்கள் குறித்து அனைவருக்கும் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். ஒரு சமயத்தில் கேத்தரின், டூர் கைடு விளக்கத்தை மறுத்து வேறு விளக்கம் கொடுத்தாள். கேத்தரினின் விளக்கம்தான் மிகவும் சரியாக இருந்தது. டூர் கைடுக்கும் கூட இது  மிகவும் ஆச்சரியமாக இருந்தது. டூர் முடிந்தவுடன் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து கேத்தரின் வியப்படைந்தாள். அவளுக்கு எப்படி எகிப்து கலைப்பொருட்கள் பற்றி தெரியவந்தது? தன்னுடைய விளக்கம்தான் சரி என்று எப்படி உறுதியாக நம்பி டூர் கைடுக்கு மறுப்பாக விளக்கம் கொடுத்தாள்? ஒரு வேளை குழந்தையாயிருக்கும்போது நடந்தது  எதையாவது மறந்துவிட்டாளா?

என்னிடம் அடுத்த அப்பாயிண்ட்மெண்டுக்கு வரும்போது மியூசியத்தில் நடந்தவைகளை கேத்தரின் என்னிடம் கூறினாள். ஒரு மாதத்துக்கு முன் ஹிப்னடைஸ் செய்ய கேட்டபோது கேத்தரின் பயந்துபோய் மறுத்துவிட்டாள். ஆனால் இந்த மியூசியம் நிகழ்ச்சிக்குப் பிறகு, வேறு வழியில்லாமல் கேத்தரின் சம்மதம் தெரிவித்தாள்.  

ஹிப்னடைஸ் என்பது நோயாளிகளின் ஆழ்மனதில் தூங்கிக்கொண்டு இருக்கும் நினைவுகளை வெளிக்கொணரக்கூடிய ஒரு அருமையான முறை. ஹிப்னடைஸ்-ல் ரகசியம் எதுவும் இல்லை. அது மனதை ஒருமுகப்படுத்தி ஒரே புள்ளியில் சிந்தனையை குவிக்கும் முறை. நன்கு பயிற்சி பெற்ற நிபுணர் ஹிப்னடைஸ் செய்யும்போது நோயாளியின் உடல் சமாதி நிலைக்கு வரும். அச்சமயத்தில் உடல் முழுசக்தியையும் உபயோகப்படுத்தி ஞாபகத்திறனை அதிகரிக்கும். நான் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு, ஹிப்னடைஸ் ட்ரீட்மெண்ட் செய்து அவர்களின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் நினைவுகளைத் தட்டி எழுப்பி, தேவையில்லாத பயம், தவறான பழக்கவழக்கங்கள் போன்ற தொல்லைகளிருந்து அவர்களை மீட்டிருக்கிறேன் 

சில சமயங்களில் இரண்டு, மூன்று வயதில் நடந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்ச்சிகளைக்கூட எனது நோயாளிகளால் நினைவுக்கு கொண்டுவர முடிந்திருக்கிறது. அவர்களும் பாதிக்கப்பட்ட நினைவுகளிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். அதனால் கேத்தரினுக்கு ஹிப்னடைஸ் ட்ரீட்மெண்ட் உதவியாக இருக்குமென்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். 

கேத்தரினை ஹிப்னடைஸ் செய்ய அவளை படுக்கையில் சிறு தலையணையுடன் சிறிது கண்களை மூடியபடி படுக்குமாறு பணித்தேன். முதலில் மூச்சுப்பயிற்சியில் கவனம் செலுத்தினோம். ஒவ்வொரு முறை மூச்சு வெளியேறும் பொழுதும், அவள் மனதில் இருந்த பதற்றத்தையும், இறுக்கத்தையும் குறைக்கச்செய்தேன். ஒவ்வொரு முறை மூச்சு உள்ளிழுக்கும்பொழுது அவளின் பதற்றம் இன்னும் குறைந்தது. சில நிமிடங்கள் மூச்சுப்பயிற்சிக்குப் பிறகு அவளிடம் அவளது தசைகள் (muscles) அமைதி நிலைக்கு மாறுவதை மனக்கண் முன் தோற்றுவிக்குமாறு உத்தரவிட்டேன். முகம், தாடை, கழுத்து, தோள்கள், கைகள், முதுகு மற்றும் வயிறு, இறுதியாக கால்கள் என்று அவள் தசைகள் முழுவதையும் அமைதியாக சாந்த நிலைக்கு மாற்றினேன். முழு உடலும் கட்டிலில், அமிழ்ந்து விட்டதுபோல் அவள் உணர்ந்தாள். 

அவள் உடலுக்குள் தலையின் மேற்பகுதியில் ஒரு வெண்மையான, பிரகாசமான, ஒளியை மனதில் தோற்றுவிக்குமாறு உத்தரவிட்டேன். அதன் பிறகு, அந்த பிரகாசமான ஒளி அவள் உடலில் ஒவ்வொரு நரம்பிலும் ஒவ்வொரு உறுப்புகளிலும் பரவுமாறு செய்து, அவளை மிகவும் ஆழமான, அமைதியான சாந்த நிலைக்கு அழைத்துச் சென்றேன். அவள் மிகவும் ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியான சாந்தமான நிலையில் இருந்தாள். என் உத்தரவின் படி, பிரகாசமான ஒளி அவள் முழு உடலுக்குள்ளும் அவள் உடலைச்சுற்றியும் இருப்பதை உணர்ந்திருந்தாள். நான் பத்திலிருந்து ஒன்று வரை எண்களை கூறக் கூற அவள் மிக மிக ஆழ்ந்த அமைதி நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் என்னுடைய உத்தரவுகளைத் தவிர வேறெந்த ஒலியையும் உணர முடியவில்லை. நான் ஒன்று என்று கூறியவுடன், அவள் ஹிப்னடைஸித்தில் சமாதி நிலையை அடைந்திருந்தாள். இந்த முழுப்பயிற்சியையும் செய்து முடிக்க கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் ஆனது. 

சிறிது நேரத்துக்குப் பிறகு, அவளுடைய வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த நிகழ்ச்சிகளை கண்டறிய, அவளுடைய நினைவுகளை பின்னோக்கி அழைத்துச்சென்றேன். சமாதி நிலையிலிருந்தபடி அவள் எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தாள். ஆறு வயதில் பல் மருத்துவரிடம் செல்ல பயந்ததை நினைவு கூர்ந்தாள். ஐந்து வயதில் நீச்சல் குளத்தில் தள்ளிவிடப்பட்ட பயங்கரமான நிகழ்ச்சியை கூறினாள். நீச்சல் குளத்தில் தண்ணீரில் மூழ்கி புரையேறியதையும் அவளால் கூற முடிந்தது. அதைக் கூறும் சமயம் அவளுக்கு ஹிப்னடைஸ அறையிலேயே புரையேற ஆரம்பித்துவிட்டது. அவளிடம் புரையேறி பிறகு சரியாகி விட்டதை உணர்த்தினேன். புரையேறுவது நின்று மீண்டும் சரியாக மூச்சு விட்டாள்.  

அவளுக்கு மூன்று வயதிருக்கும்போது நடந்த மற்றொரு பயங்கரமான நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள். அவளுடைய படுக்கை அறை. மிகவும் இருட்டாக இருக்கிறது. அவளுடைய தந்தையும் அவள் அறையில் இருப்பதை உணர்கிறாள். தந்தையிடம் மதுவாடை தெரிகிறது. அவர் அவளை உடல் முழுவதும் தொடுவது பிடிக்காமல் அழ ஆரம்பிக்கிறாள். பயத்தில் கத்தும் அவளை, அவள் தந்தை கையால் அவள் வாயை மூடுகிறார். அவளால் மூச்சு விட முடியவில்லை. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு என்னுடைய ஆபிஸில், கேத்தரின் ஹிப்னடைஸ படுக்கையில் தேம்ப ஆரம்பித்துவிட்டாள். நான் கேத்தரினின் நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டதால் அவள் மனநோய் சீக்கிரம் குணமாகிவிடும் என்று உறுதியாக நம்பினேன். நான் கேத்தரினிடம், அவள் தற்சமயம் அந்த இருட்டான அறையை விட்டு வந்துவிட்டாள்; அவளின் பயந்த அனுபவம் இப்போது இல்லை என்று மென்மையாக கூறினேன். அவளுடைய தேம்பல் நின்றது. அவளை ஹிப்னடைஸம் முடிந்து பழைய நிலைக்கு திரும்பவும் அழைத்து வந்தேன். அழைத்துவரும்போது ஹிப்னடைஸ் நிலையில் இருந்தபோது நிகழ்ந்தவைகளை நினைவில் நிறுத்துமாறு உத்தரவிட்டு இயல்பு நிலைக்கு அழைத்து வந்தேன்.  

அன்றைய அப்பாயின்ட்மெண்டின் மீதி நேரத்தை அவளுக்கு அவள் தந்தையுடன் நேர்ந்த பயங்கரமான அனுபவத்திலிருந்து வெளி வருவதற்கு செலவழித்தோம். அவள் தற்பொழுது அவளுக்கும் அவள் தந்தைக்கும் உள்ள நேசம், விருப்பு, வெறுப்பு, பயம், தூரம் பற்றி அதிகம் உணர முடிந்தது. அவளிடம் கிடைத்த உண்மைகளை உபயோகித்து பதற்றத்திலிருந்து வெளிவருவதற்கு ஆலோசனைகள் கூறினேன். எனது ஆபிஸிலிருந்து வெளியேறும்போது அவள் மிகவும் மனக்கலக்கத்துடனிருந்தாள். நிகழ்ந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபடவில்லை. தற்காலிக மனகலக்கத்தை விட நடந்த உண்மைகளை உணர்ந்து கொண்டது மிகவும் உபயோகமானது என்பது எனக்குத் தெரியும்.  
 
கேத்தரின் ஆழ்மனதில் புதைந்திருந்த வலி மிகுந்த மர்மங்களை வெளிக்கொணர்ந்த களேபரத்தில், அவளுக்கு எகிப்து மியூசியத்தில் நேர்ந்த அனுபவத்தின் காரணத்தைக் கண்டறிவதை முற்றிலுமாக மறந்துவிட்டேன். இருந்தாலும் அவள் குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த பயங்கரமான நிகழ்ச்சிகளை வெளிக்கொணர்ந்ததால் அவளுடைய மனநிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுமென்று எதிர்பார்த்தேன்.  

ஆனால் அடுத்த வாரம், அவள் கொடுத்த தகவல்படி அவள் மனநிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக பழைய நிகழ்வுகளை அறிந்ததும், சரியான ஆலோசனையில் அவளுக்கு குணமாகியிருக்கவேண்டும். எப்படி, என்ன தவறு நடந்திருக்க முடியுமென்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஒரு வேளை அவளுக்கு மூன்று வயதுக்கு முன்பு ஏதாவது நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? அவளுடைய மூச்சுத்திணறல், தண்ணீரைக் கண்டு பயம், இருட்டான அறையைக் கண்டு பயம் அனைத்திற்கும் முடிந்தவரை காரணங்களை கண்டுபிடித்து விட்டோம். ஆனால் அவளுடைய பயங்கரமான கனவுகள் நிற்பதாக தெரியவில்லை. எப்பொழுதும் உள்ள கட்டுக்கடங்காத பதற்றநிலையும், ஊடுறுவக்கூடிய பயந்த நிலையும் மாறவேயில்லை. கேத்தரினை ஹிப்னடைஸ் சிகிச்சை மூலம் மூன்று வயதுக்கு முன்பும் அழைத்துச்செல்ல முடிவு செய்தேன். 


தொடரும் -
 

கொசுறு :
முற்றிலும் நேர்மையானவராக இருக்கக் கூடாது; நேராக வளர்ந்த மரங்களே முதலில் வெட்டப்படும். முதலில் பாதிக்கப்படுபவர்கள் நேர்மையான மனிதர்களே!
விஷமில்லாத பாம்பாக இருக்கலாம்; ஆனால் விஷமிருப்பது போல் பாவனை செய்யாமல் இருக்கக் கூடாது.
ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே; அது உன்னை அழித்துவிடும்.
அனைத்து நட்புகளும் ஏதோ ஒருவிதத்தில் சுயநலமே! சுயநலம் இல்லாத நட்பு இல்லை. இது ஒரு கசப்பான உண்மை.
எந்த வேலையைத் துவக்கினாலும் --- என் செய்ய வேண்டும்? என்ன முடிவு கிடைக்கலாம்? வெற்றி பெற முடியுமா? --- என்ற கேள்விகளுக்கு திருப்திகரமான பதில் கிடைத்தபின் வேலையைத் துவங்கு.
அதைரியப்படுத்தும் விஷயங்களை முளையிலேயே கிள்ளி எறி.
இளமையும், அழகான பெண்களும் உலகின் மிகப்பெரிய சக்திகள்.
எந்த வித வேலையை துவங்கிய பிறகும், தோல்வியை எண்ணி தளராதே; விட்டுவிடாதே. ஆத்ம திருப்தியுடன் வேலை செய்பவர்களே மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.
மலர்களின் நறுமணம் காற்றின் திசை மட்டுமே; இனியவர்களின் பண்புகள் எத்திசையும் செல்லும்.
இறைவன் சிற்பங்களில் இல்லை; உணர்வுகளே இறைவன்; ஆன்மாவே கோயில்.
மேன்மை பிறப்பினால் வருவதல்ல; செய்கைகளே ஒருவனை மேன்மையாக்குகிறது.
உன் தகுதிக்கு குறைவானவர்களிடமோ, மேலானவர்களிடமோ நட்பு கொள்ளாதே. அத்தகைய நட்பு இன்பத்துக்கு வழி வகுக்காது.
உங்கள் மகனை ஐந்து வயதுவரை செல்லமாக வளருங்கள்; அடுத்த ஐந்து வருடங்கள் திட்டி வளருங்கள்; பதினாறு வயதுக்கு மேல் நண்பர்களாகப் பழகுங்கள். அவர்களே உங்களுக்கு மிகச் சிறந்த நண்பர்கள்.
குருடனுக்கு கண்ணாடி; முட்டாளுக்கு புத்தகங்கள்.
கல்வியே மிகச் சிறந்த ஊன்றுகோல்; கல்விமானுக்கு எங்கும் மதிப்பு; கல்வி இளமையையும், அழகையும் வெல்லக் கூடியது.
------ சாணக்கியர் (கி.மு 370-283) இந்திய தத்துவவாதி, ஆசிரியர், அரசவை ஆலோசகர்.
 
துணுக்கு :
 
அப்பா, தம்பி என்கிட்டே வம்பு பண்றான்; ஆனால் அம்மா என்னை திட்றாங்க - பெண் அழுதாள்.
ஏன்? என்னாச்சு சொல்லு.
தம்பி நான் செய்றதெல்லாம் காப்பி பண்றான்; அம்மாகிட்ட சொன்னா, அம்மா என்னை திட்றாங்க.
ஏன் ஒன்ன திட்றாங்க?
தெரியலை. தம்பிகிட்ட முட்டாளாட்டம் பிஹேவ் பண்ணாதேன்னு திட்றாங்க. 
 

 

 

4 comments:

 1. ஒரு அமைதியான நதியின் நீரோட்டம் போல் கதை அருமையாக போகிறது. இது தமிழாக்கம் எனத் தெரியாதவண்ணம் ஆற்றொழுக்க நடையில் எழுதியுள்ளீர்கள்.அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்!

  கொசுறுவில் தந்தவை எல்லாமே முதல் தரம். அவைகளை ஒவ்வொன்றாக ஒவ்வொரு பதிவின் போதும் தந்திருக்கலாம்.

  ReplyDelete
 2. வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி ஐயா !

  "குருடன் கிழித்தது, கோமணத்துக்கு ஆச்சு" என்பது கிராமத்தில் பேச்சு வழக்கம். அனைவர்களுடைய ஆசியுடன் ஓரளவுக்காவது தேறியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி. இந்த முறை எளிதான நூலைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அடுத்தமுறை அனைவருக்கும் சற்று உபயோகமுள்ள நூலை மொழியாக்கம் செய்ய முயற்சிக்கிறேன். தொடர்ந்து படித்து வரவும்.

  ஒரே மாதிரி படித்து போரடிக்காமல் இருப்பதற்காக கொசுறு மற்றும் துணுக்கு எழுதுகிறேன். பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  அன்புடன்
  பக்கிரிசாமி நீலகண்டம்

  ReplyDelete
 3. அடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

  அருமையான கொசுறுகள்...

  ReplyDelete
 4. தொடர்வதற்கு நன்றி திரு.தனபாலன்.

  உங்கள் வார்த்தைகள் மிகவும் உற்சாகமளிக்கின்றன! வெள்ளி வரை பொறுத்திருங்கள்.

  அன்புடன்

  பக்கிரிசாமி நீலகண்டம்

  ReplyDelete