பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, August 28, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 19




கிட்டத்தட்ட அறுபதுபேர்கள் அங்கே கூடியிருந்தார்கள். தாய்மார்கள், மதிய உணவு நேரத்தில் வேலையிலிருந்து வந்திருப்பவர்கள், வயதாகி வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், உடலில் பச்சை குத்தியிருந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் அந்த சர்ச்சில் நிகழ்ந்துகொண்டிருந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். உரையாற்றுபவரும் பார்ப்பதற்கு வெற்றிகரமான ஒரு அரசியல்வாதியைப்போலத் தோற்றமளித்தார்.


“என் பெயர் ஜான். நான் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தவன்.” “ஹலோ ஜான்” கூடியிருந்தவர்களும் முகமன் செலுத்தினர்.


“என் மகன் கை முறிந்தபொழுதுதான், முதன்முதலில் நான் குடிப்பழக்கத்தை விடவேண்டுமென்று முடிவு செய்தேன்.  எனக்கு, குடும்பத்துக்கு வெளியே ஒரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது. ஒரு நாள் அந்தப்பெண், தன்னை இனி தொடர்புகொள்ள வேண்டாம் என்று கூறினாள். வெறுப்பில் ஒரு நண்பனுடன் சேர்ந்து மதுக்கடைக்கு சென்றேன். கொஞ்சம் குடித்தேன். அந்த நண்பன் சென்றதும், இன்னொரு நண்பனுடன் சேர்ந்து இன்னும் குடித்தேன். பிறகு என் மகனை பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்றேன். அந்தத் தெரு எப்பொழுதும் நான் வழக்கமாக காரில் செல்லும் தெருதான். மகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிய பொழுது, என்னால் காரை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் ஒரு சைன்போர்டில் மோதிவிட்டேன். மதுவின் மயக்கத்தில் இருந்ததால், என் மகனுக்கு சீட்பெல்ட் போடவும் மறந்திருக்கிறேன். மோதியதில், மகன் காரின் முன் கண்ணாடிவரை தூக்கியெறியப்பட்டுவிட்டான். கார் ஒரே ரத்தமாகக் காட்சியளித்தது. நான் மிகவும் பயந்துவிட்டேன். அந்த நிமிடத்தில் நான் குடிப்பழக்கத்திலிருந்து வெளிவர உதவியை நாடவேண்டும் என்று முடிவெடுத்தேன்.”


“ஒரு க்ளினிக்-க்கு சிகிச்சைக்குச் சென்றேன். எல்லாம் நல்லவிதமாக முடிந்தது. கிட்டத்தட்ட பதிமூன்று மாதங்கள் மதுவைவிட்டு விலகியிருந்தேன். குடிப்பழக்கம் என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று பெருமையாக நினைத்தேன். அதற்கப்புறம் க்ளினிக்-க்கு சிகிச்சைக்கு செல்வதை நிறுத்திவிட்டேன்.”


“ஒரு நாள் நான் அலுவலகத்தில் வேலையிலிருந்தபொழுது என் அம்மாவிடமிருந்து அவசரமாக ஃபோன் வந்தது. அம்மாவுக்கு புற்றுநோய் மிகவும் முற்றியநிலை என்று தெரிய வந்தது. ஃபோனில் பேசியபிறகு நேராக மதுக்கடைக்கு சென்றேன். மீண்டும் குடிக்க ஆரம்பித்துவிட்டேன். தொடர்ந்து குடித்ததால் இரண்டு வருடங்களில் என் மனைவி என்னைவிட்டு விலகிவிட்டாள். ஒருமுறை என் மகனை நான் அழைத்துக்கொள்ள வேண்டிய நிலை வந்தது. குடித்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தேன். என்ன நடந்தது என்று தெரிவதற்குள் கார் எங்கேயோ மோதி நசுங்கிவிட்டது. என்மேல் எந்தக் கீறலும் விழவில்லை. என் மகன் உட்காரவேண்டிய சீட் சுத்தமாக நசுங்கியிருந்தது. நான் திரும்பிவரும்பொழுது இந்த் விபத்து நிகழ்ந்திருந்தால் என் மகன் பிழைத்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பதறிவிட்டேன். குடியை நிறுத்தவேண்டுமென்று மீண்டும் முடிவுசெய்தேன்.”


“குடிப்பழக்கத்திலிருந்து மீள, எனக்கு உதவி செய்ய வந்தவரிடம், குடிப்பழக்கம் என்  கையை மீறிய நிலையில் உள்ளது என்று கூறினேன். அதைப்பற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்று அவர் ஆறுதலளித்தார். நமக்கும் மேல் இருக்கும் ஒருவரிடம் நம்பி உன்னை முழுமையாக ஒப்படைத்தாலொழிய எந்த முயற்சியும் பலனளிக்காது என்று அவர் கூறினார். எனக்கு அவர் கூறியது முட்டாள்தனமாகப்பட்டது. நான் கடவுளை நம்புபவன் கிடையாது. ஆனால், என் நடவடிக்கையில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தால், இருக்கும் சூழ்நிலையில் என் குழந்தைகளின் இறப்புக்கு நானே காரணமாகிவிடுவேன் என்றுமட்டும் புரிந்தது. சரியென்று அவர் சொன்னபடி கடவுளை நம்ப ஆரம்பித்தேன். எனக்கும்மேல் ஒருவன் இருப்பதை ஒத்துக்கொண்டேன்.”


“ஆமாம். அவர் சொன்னதுபோல் மதுவைவிட்டு விலகி இருக்கமுடிந்தது. எனக்கு மேலிருக்கும் சக்தி என்னை மதுவிலிருந்து காப்பாற்றியுள்ளது. ஏழு வருடங்களாக நான் மதுவைவிட்டு விலகி இருக்கிறேன். என்னால் முடிந்திருக்கிறது. காலையில், தெளிவுடன் படுக்கையைவிட்டு எழுகிறேன். ஆரம்பத்தில் இன்றைய நாள் மதுவின்றி கழியுமா என்ற சந்தேகம் இருந்தது. அப்பொழுது எனது ஆலோசகருக்கு ஃபோன் செய்வேன். வாழ்க்கை, திருமணவாழ்வு, வேலை என்று அனைத்தைப்பற்றியும் அவருடன் விவாதிப்பேன். மதுவைப்பற்றி அவருடன் பேசுவதே கிடையாது. அவருடன் பேசி முடித்ததும், எனக்கு நம்பிக்கை வந்துவிடும். தெளிவு பிறந்ததுபோல் உணர்வேன்.”


பங்கேற்பவர்களின் பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன்மூலம் ஆல்கஹாலிக் அனானிமஸ் (A.A) -னால் வெற்றிகாண முடிந்தது என்று அறிவியல் உலகம் கண்டுகொள்வதற்கு பத்து வருடங்கள் தேவைப்பட்ட்து. பழக்க மாற்றங்கள் மூலம் மதுவின் பிடியிலிருந்து வெளிவந்தவர்களில் அதிகமானோர் மீண்டும் மதுப்பழக்கத்துக்கு திரும்புவதில்லை. இருப்பினும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளினால் (பெற்றோருக்கு புற்றுநோய், மணமுறிவு) சிலர் மதுவை நாடுவதும் ஏற்படுவதுண்டு. பழக்க மாற்றங்கள் வெற்றியடையும்பொழுது, பிரச்சனைகள், எப்படி அந்த வெற்றிப்பாதையிலிருந்து அவர்களை தோல்விக்கு இட்டுச்செல்கிறது என்று மீண்டும் கேள்வி எழுந்தது. அறிவியலாளர்கள் மீண்டும் மதுப்புழங்கிகளின் வாழ்வினை ஆராய்ந்தனர். அப்பொழுது பழக்கமாற்றங்களுடன் இன்னொன்றும் சேர்ந்துகொள்வதனை அவர்கள் கண்டுபிடித்தனர்.


கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், A.A -ன் உதவியுடன் மதுவிலிருந்து தப்பியவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. மீண்டும், மீண்டும் விடுபட்டவர்கள் கூறிய இன்னொரு காரணம் – கடவுள்.


ஆமாம். அவர்களின் கருத்துப்படி அவர்கள் மீண்டதற்கான ரகசியம் – கடவுள்.


ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த விளக்கம் வெறுப்பை அளித்தது. இறைவனும், ஆன்மீகமும் அறிவியலால் நிரூபிக்க இயலாத அம்சங்கள். இறைவனிடம் நம்பிக்கை இருப்பவர்களுள் குடிகாரர்களாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். 2005-ல் பெர்க்லி மற்றும் ப்ரௌன் பல்கலைக்கழகங்களும், அமெரிக்க தேசிய சுகாதார அமைப்புடன் இணைந்து ஆன்மீகம் சம்பந்தமாகவும் பேட்டி எடுக்க ஆரம்பித்தனர். மதுவிலிருந்து விலகி இருப்பதற்கும், கடவுளை நம்புவதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று அறிய முற்பட்டனர்.


பேட்டிகளில் கிடைத்த விபரங்களை அட்டவணைப்படுத்தியபொழுது, அந்த விபரங்கள் ஒரு குறிப்பிட்ட பாணியில் அமைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். மதுவிலிருந்து மீண்டவர்கள், வாழ்க்கையில் சில முக்கியமான பிரச்சனைகளை சந்திக்கும்வரை அவர்களால் மதுவினை நாடாமல் இருக்க முடிந்துள்ளது. ஆனால் பெரிய பிரச்சனையை சந்தித்தபொழுது அனேகர் மீண்டும் மதுவை நாடியிருக்கிறார்கள்.


இருந்தாலும் ஜான் போன்றவர்கள், எத்தகைய பிரச்ச்னை வந்தாலும், மதுவை மீண்டும் தொடவில்லை. அவர்களையும் மீறிய சக்தி என்று அவர்கள் நம்பியுள்ளதால், அவர்களால் பிரச்சனையை மதுவில்லாமல் எதிர்கொள்ளமுடிந்துள்ளது.
இதில கடவுள் என்ற ஒன்று அவர்களைக் காப்பாற்றவில்லை. கடவுளின் மேல் இருந்த நம்பிக்கை அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. மது சம்பந்தமாக கடவுல் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை, அவர்களுடைய வாழ்வில் அனைத்து அங்கங்களிலும் பரிணமித்துள்ளது. தங்களால் முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் ஊன்றிவிட்டது. நம்பிக்கை என்ற ஒன்று அவர்கள் வாழ்வில் புதுப்பழக்கங்களை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகிவிட்டது.




- தொடரும்


பூனைக்கு வந்த வாழ்வு :








நாய்க்கு வந்த வாழ்வு :