பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, July 31, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 15



“நான் மதத்தைப் பற்றிக்கொண்டேன்.” நண்பர் பதிலளித்தார்.
“நரகம், சாத்தான், பாவங்கள், சபலங்கள்” என்று ஏதேதோ பேசினார். “உண்மையை ஒத்துக்கொள். இறைவனிடம் சரணடைந்துவிடு. உனது வாழ்வு திரும்பவும் கிடைக்கும்.” நண்பர் நம்பிக்கையூட்டினார்.


போனவருடம் மதுவுக்கு அடிமை. இப்பொழுது ஆண்டவனுக்கு அடிமை. கிறுக்கன் உளறுகிறான் என்று வில்சன் நினைத்துக்கொண்டார். நண்பர் சென்றதும் குடித்து முடித்துவிட்டு படுக்கைக்கு சென்றார் வில்சன்.


ஒரு மாதத்துக்குப்பிறகு 1934-டிசம்பரில், மதுப்புழங்கிகளின் மறுவாழ்வுக்கான மருத்துவரை வில்சன் சந்தித்தார். அவர் கொடுத்த மருந்துகள் வில்சனுக்கு மாய உலகத்தைக் காட்டியது. உணர்வு வருவதும் இழப்பதுமான நிலையில் இருந்தார்.மருத்துவரின் மருந்துகளால் மதுவை நிறுத்த முயன்ற வில்சன் பயங்கரமான பிரமை பிடித்தவராக மருண்டு கிடந்தார்.


அன்றிலிருந்து 36 வருடங்கள் கழித்து 1971-ல் இறக்கும்வரை வில்சன் மதுவை நாடியதே இல்லை. தன் வாழ்நாள் முழுவதையும் “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்” நிறுவனத்துக்கு அர்ப்பணித்துவிட்டார். அதனைத் தோற்றுவித்து மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களைக் காப்பாற்ற தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டிருக்கிறார்.


வருடத்துக்கு 20 லட்சம் மக்கள் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸை நாடுகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களை ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் மதுவிலிருந்து காத்திருக்கிறது. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்- ஆல் அனைவரையும் குணப்படுத்தமுடியவில்லை. மேலும் பங்கேற்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், அதன் வெற்றியை சரியாக தீர்மானம் செய்து கூறுவதும் கடினமாக உள்ளது. மதுப்பழக்கத்தைத் தவிர போதை, கடன், உடல்பருமன், புகைப்பிடித்தல், வீடியோகேம் அடிக்ஷன், என்று பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் தோள் கொடுக்கிறது. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-யின் வழிமுறைகள், பலவகைகளில்  மாற்றங்களுக்கு வெற்றிகரமான வழியைக் காட்டுகிறது. அறிவியலின் அடிப்படையில் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ன் வழிமுறைகள் அமைக்கப்படவில்லை. அதனால் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ன் வெற்றிகள் எதிர்பாராததொன்றாகும்.


மதுவுக்கு அடிமையாவது என்பது வெறும் பழக்கத்தினால் மட்டுமே வருவதில்லை. பழக்கத்தின் ஊடே மரபணுக்கூறு, உடலின் தன்மை போன்றவைகளும் மதுவுக்கு அடிமையாவதைத் தீர்மானிக்கிறது. மனோவியல் அடிப்படையிலோ உடல்நிலை அடிப்படையிலோ ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்- மதுப்புழங்கிகளை அணுகுவதில்லை. மனோநிலை, உடல்நிலை அடிப்படையில் அணுகுவதையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


ஆனால் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் மதுப்புழங்கிகளின் பழக்கத்தை மாற்றி மதுவிலிருந்து அவர்களை மீட்க முனைகிறது. இப்படி மாற்றுவதன் மூலம் எத்தகைய பழக்கத்தையும் மாற்றிவிட முடியும் என்று ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் நிரூபித்திருக்கிறது.


ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ஐ தோற்றுவிப்பதற்காக எந்த ஆய்வுக்கட்டுரையையும் படிக்கவில்லை, அல்லது எந்த அறிவியல் அறிஞர்களையோ வில்சன் கலந்தாலோசிக்கவில்லை. மதுப்பழக்கத்திலிருந்து மீண்ட சில வருடங்களுக்குப்பிறகு, ஒரு நாள் இரவு திடீரென்று ஏதோ ஒரு வேகத்தில் 12 விதிகளைக்கொண்ட ஒரு கொள்கையினை அவர் வகுத்தார்.12 என்பதும் பைபிளில் இருக்கும் 12 நம்பிக்கையாளர்களைக் குறிப்பதற்காகவே அவர் எடுத்துக்கொண்டார். அந்த விதிகளும் அறிவியல் முறைப்படி சரியானவைகள் அல்ல. மேலும், அவை சில சமயங்களில் பார்த்தால் விசித்திரமாகவும் தோன்றும் விதிகள்.


உதாரணமாக, மதுப்புழங்கிகள் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ல் 90 நாட்களில் 90 ஆலோசனையில் பங்கேற்கவேண்டும் என்பது ஒரு விதி. இன்னொரு விதி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். தன்னைக் கடவுளிடத்தில் ஒப்படைக்கவேண்டும். 12 விதிகளில் 7 விதிகள் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவைகள். ஒரு சமயத்தில் தீவிர நாத்திகவாதியாக இருந்து ஆத்திகத்தில் சேர்ந்த ஒருவர் எழுதியவைகள் இவை. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ன் ஆலோசனைக் கூட்டத்தில் இப்படித்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று கட்டாயமான வழிமுறைகள் என்றும் கிடையாது.


பொதுவாக அதில் சேர்பவர்கள் தங்களுடைய கதையைக் கூறவேண்டும். அதில் மற்றவர்களும் சேர்ந்துகொள்வார்கள். தொழில்முறை ஆலோசகர்கள் மூலம் அது வழிநடத்தப்படுவதும் கிடையாது. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் பழைய காலத்தில் உறைந்ததுபோல் இருந்தது.


A.A (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்) – எந்த அறிவியல் வழிமுறைகளையும் பயன்படுத்தாததால், அறிவியலாளர்கள் அதன் வெற்றியை ஒத்துக்கொள்ளவில்லை. அதிகம் ஆன்மீகத்தையும் கலந்ததால் அது ஒரு வகையான திரிந்த மதம் என்ற அளவிலேயே ஒப்பு நோக்கப்பட்டது. ஆனால் பதினைந்து வருடங்களில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அது ஆராய்ச்சியாளர்களின் பார்வையை A.A- ன் திசையில் திருப்பியது. ஹாவர்ட், ஏல், சிக்காகோ பல்கலைக்கழகங்கள் என்று பல பல்கலைக்கழகங்கள் A.A- ன் வழிமுறைகளும் அறிவியல் சார்ந்து இருப்பதைக் கண்டுகொண்டுள்ளனர். டோனி டங்கி, உபயோகப்படுத்திய வழிமுறைகளை ஒத்த முறைகளை A.A- யினுடைய விதிகளிலும் இருப்பதை உணர்ந்தனர். பழக்க மாற்றங்களின் பொன்விதிகள் இங்கேயும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அவர்கள் வழிமொழிந்துள்ளனர். மதுப்பழக்கம் உள்ளவர்களை அதிலிருந்து மீட்பதில் A.A- வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில் இங்கேயும் துப்புகளும் வெகுமதிகளும் மதுப்புழங்கிகளுக்குக் கிடைக்கிறது. செயல்முறைகள் மட்டுமே மாறுபடுகிறது.


A.A- துப்புகளையும் வெகுமதிகளையும் கண்டுபிடிப்பதற்கு பங்கேற்பாளர்களை கட்டாயப்படுத்துகிறது. புதிய பழக்கங்களை உண்டுபண்ணுவதற்கும் அது உதவுகிறது. ஹாப்கின்ஸ் பெப்ஸோடன்சை சந்தைப்படுத்தியபொழுது மக்களிடம் ஏக்கத்தை உண்டுபண்ணினார். பழைய பழக்கத்தை மாற்றுவதற்கு புதிதான ஏக்கத்தை உருவாக்கவேண்டும். துப்புகளையும் வெகுமதிகளையும் மாற்றாமல், ஏக்கத்துக்கு புதிய வழிமுறைகளை உண்டுபண்ணினால் இது சாத்தியமாகும்.


A.A- ன் நான்காவது ஐந்தாவது விதிகள் “உங்களிடம் புதைக்கப்பட்டிருக்கும் உண்மைகளைத் தேடுங்கள்.” உங்களிடமும், இறைவனிடமும், அடுத்தவர்களிடமும் தவறுகளுக்காக மன்னிப்புக் கோருங்கள்.” என்பதாக உள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக A.A- யினைக் குறித்து ஆராய்ச்சி செய்த ஸ்காட் என்ற நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இப்படிக் கூறுகிறார். “பார்வைக்கு ஒன்று போல தோன்றும் இந்த விதிகளை முழுமையாகத் தொடர ஏகப்பட்ட தூண்டுகோல்களை மதுப்புழங்கிகள், மதுப்பழக்கத்திலிருந்து மீள ஆரம்பிக்கவேண்டும். உங்களைப்பற்றிய உண்மைகளை ஆராயத்தொடங்கினால், நீங்கள் மதுவுக்கு அடிமையாவதற்கான காரணத்தை உணர்வீர்கள். அடுத்தவர்களிடம் மன்னிப்பு கேட்பதன்மூலம், உங்களிடம் புதைந்துள்ள தீய பழக்கங்களும் விலக ஆரம்பிக்கும்.”


அப்படியென்றால் வெகுமதி? மதுவினை பருகுவதற்கான காரணங்கள் பிரச்சனையிலிருந்து விலகுவது, ஓய்வு, மன உளைச்சல், நண்பர்களுடன் பழகுவது, மனதிலிருப்பதை வெளியே சொல்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்வது என்று எண்ணற்ற காரணங்கள் இருக்கக்கூடும். இவையனைத்துக்கும் மதுதான் துணை என்ற அவசியமில்லை. மேலும் மதுவினால் உடலுக்கு ஏற்படும் உபாதைகள் மது என்ற வெகுமதிக்குள் இருக்கும் ஒரு பாதகம் ஆகும்.


“மது அருந்துவதில் இன்பத்தைத் தேடுவது என்ற ஒரு அம்சமும் உள்ளது.” என்கிறார் உல்ஃப் மில்லர் என்ற ஜெர்மனியைச் சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணர். “ஆனால் மக்கள் மதுவினை நாடுவதற்கு கவலைகளை மறக்க நினைப்பதும் ஒரு காரணமாக உள்ளது. அல்லது ஏதோ ஒரு ஏக்கத்தைத் தணிப்பதும் ஒரு காரணமாக உள்ளது. மதுவினை உட்கொள்ளும்பொழுது இன்பத்தினைத் தூண்டும் பகுதிகள் மூளையில் செயல்படுவதில்லை. வேறு பகுதிகளே செயல்படுகின்றன.” என்றும் அவர் கூறுகிறார்.


குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு, மதுவினால் கிடைக்கக்கூடிய அதே வெகுமதியைத் தருவதற்காக A.A- ஒரு தோழமையுடனான உறவினை ஏற்படுத்தினார்கள். ஒவ்வொரு மது அடிமைக்கும் தோழர் ஒருவர் இருப்பார். வெள்ளிக்கிழமை இரவுகளில் மதுவினைப்பற்றிய சிந்தனையை திசை மாற்றுவதற்கு அவர் உதவுவார். அந்த்த் தோழரிடம் அளவுளாவதன் மூலம் மதுவினை நாடும் மனதி திசை திருப்பவும் முடியும்.
மது அருந்துவதற்குப் பதிலாக அந்த நேரங்களில் வேறோரு செயல் முறையை A.A- வெற்றிஏற்படுத்தியது என்று டோனிகன் கூறுகிறார். தோழமைக் கூட்டங்களில், மனதை அமைதிப்படுத்தி, தனது பிரச்சனைகளின் சுமையைப் பேசுவதன் மூலம் அதனைக் குறைக்கவும் முடிகிறது.

 
கீழ்க்கண்ட படங்களில் இந்தப் பழக்கங்களின் வேறுபாட்டினை இங்கு காணலாம்.



 
தூண்டுதலையும் வெகுமதியையும் மாற்றாமல் செயல்முறைகளில் இங்கே மாற்றம் ஏற்படுகிறது.

 

-தொடரும்




குழந்தைகள் எங்கும் ஒரேமாதிரிதான் :







Thursday, July 24, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 14



தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருந்த புக்கனர் குழு, கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கன் நேஷனல் ஃபுட்பால் ஃபெடரேஷனில், தொடர் வெற்றிகளை சந்திக்கும் குழுவாக மாறத்தொடங்கியது. டங்கியின் பழக்க விதிகளைப் பின்பற்றியது அதற்கு முக்கிய காரணமாக விளங்கியது. நேஷனல் ஃபுட்பால் ஃபெடரேஷன் வரலாற்றில் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு வெற்றியளித்த பயிற்றுவிப்பாளராக டங்கி இன்றும் அறியப்படுகிறார். மேலும் சூப்பர் பவுல் வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கராகவும் அவர் விளங்குகிறார். அவருடைய பயிற்றுவிக்கும் விதிகள் இன்றும் பல விளையாட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அவருடைய வழிமுறைகள், எப்படி பழக்கங்கள் ஒருவரை மாற்றியமைக்கமுடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.


மேற்கூறியவைகள் பின்னாளில் நிகழ்ந்தன. இன்று, இப்பொழுது  நவம்பர் 17, 1996-ல், சான்டியாகோவில் வெற்றிபெறுவது மட்டுமே டங்கியின் விருப்பமாக இருக்கிறது. விளையாட்டுத்திடலுக்கு வெளியே இருந்த டங்கி, இன்னும் எவ்வளவு நேரத்துக்கு விளையாட்டு நீடிக்கும் என்று தெரிவிப்பதற்காக அரங்கிலிருந்த, கடிகாரத்தை நோக்கினார். 8 நிமிடம், 16 வினாடிகள் மீதமிருப்பதாக கடிகாரம் காட்டியது. எப்பொழுதும்போல பக்கனர் குழு கிடைத்த அனைத்து சாதகமான நிலைகளையும் தொடர்ந்து இழந்துகொண்டே இருந்தனர். எதிரணியைச் சேர்ந்த ஸ்டேன் ஹம்பயர், பந்தைக் கையில் எடுத்தபடி வெற்றியை நோக்கி ஓடினார்.

டங்கி எதிரணியான ஹம்பயரை நோக்கவில்லை. தனது குழுவினரை நோக்கினார். பல மாதங்களாக பயிற்சியினை அவர்கள் எப்படி செயலாக்குகின்றனர் என்று கவனித்தார். அமெரிக்க ஃபுட்பால் விளையாட்டின்பொழுது, எதிரணியிரடமிருந்து பந்தைக் கைப்பற்றி, அவர்களின் கையில் சிக்காமல் ஏமாற்றி பந்தை எடுத்துச் செல்லவேண்டும். ஒரே திசையில் செல்வதுபோல் போக்குகாட்டி, வேறுதிசையில் பந்தை திறமையுடன் ஏமாற்றி எடுத்துச்சென்றுவிடவேண்டும். காலம் காலமாக இப்படித்தான் விளையாடுவது வழக்கம்.


ஆனால், டங்கி இப்படி அவர்களுக்கு பயிற்றுவிக்கவில்லை. கொஞ்சம் வழக்கத்தை மாற்றியமைத்தார். டங்கியின் அணியில், ஒவ்வொருவருக்கும் இப்படித்தான் விளையாடவேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தார்கள். அதாவது, இந்த இடத்திலிருந்து பந்து வந்தால் என்னசெய்வது, இன்னொரு இடத்திலிருந்து பந்து வந்தால் என்ன செய்வது என்று கச்சிதமாக கற்பிக்கப்படிருந்தது.  அவர்கள் அணியினர் அனைவருக்கும், முறைகளும் வழிகளும் பரிச்சயமானவைகளாக இருந்தது. இந்த நேரத்தில், இந்த மாதிரியான கட்டத்தில் தம் அணியில், மற்றவர் என்ன செய்வார் என்று அவர்களுக்கு பிழையில்லாமல் கணிக்கும் அளவுக்குத் தெரியும்.


டங்கி இந்த முறையைத் தேர்ந்தெடுத்ததால், அணியில் தப்பாக இன்னொருவர் புரிந்து கொள்வது இல்லாமல் இருந்தது. டங்கியின் அணியினர் செய்யவேண்டியது, அடுத்த அணியினரைவிட வேகமாக விளையாடவேண்டியதுதான். அமெரிக்கன் ஃபுட்பாலில் ஒவ்வொரு வினாடிகளும் முக்கியமானவைகள். நூற்றுக்கணக்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்காமல், குறிப்பிட்ட சில வழிமுறைகளை மட்டுமே டங்கி தன் விளையாட்டுக் குழுவுக்கு பயிற்சியளித்திருந்தார். ஆனால் அந்தப் பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்து, கிட்டத்தட்ட, கண்களை மூடிக்கொண்டே அதனை செய்யுமளவுக்கு அவர்களுக்குத் திறமை வந்துவிட்டது. அணியின் திட்டம், சரியானபடி செயலாக்கப்படும்பொழுது, அவர்களால் அடுத்த அணியினரை மிஞ்சுமளவுக்கு வேகமாக ஓடமுடியும்.


இதுவரை டங்கியின் அணியினர், திட்டங்களை சரிவர செயல்படுத்தியதில்லை. ஆனால் இப்பொழுது முதல்முறையாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரீகன் அப்ஷா என்ற டங்கி அணியின் ஆட்டக்காரர் மூன்று புள்ளிகள் எடுத்தபிறகு டங்கியின் பயிற்சியின்படி விளையாட ஆரம்பித்தார். நேரத்தை வீணடிக்காமல் பயிற்சியில் பயின்றதை விரைவாக செயல்படுத்தினார். அதனை உணர்ந்த மற்ற ஆட்டக்காரர்களும் திட்டப்படியே செயலாற்றினர்.


என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்காமல், பழக்கத்தின் காரணமாக டங்கி அணியினர் விரைவாக செயல்பட்டு ஆட்டத்தில் வெற்றியை நோக்கி முன்னேறினர். டங்கி அணியினரது ஆட்டம் பார்வையாளர்களுக்கு பிடிபடவில்லை. என்ன செய்யவேண்டும் என்று எதிரணியினர் சிந்தனை செய்யும் நேரத்தை தங்களுக்கு சாதகமாக்கி, தொடர்ந்த பயிற்சியினால், இந்த இடத்தில்தான் இருக்கவேண்டும் என்று சரியாக நிர்ணயித்தபடி, டங்கி குழுவினரின் ஆட்டம் தொடர்ந்தது. பந்து இங்கு செல்லும் என்று எதிராட்டக்காரர்கள் முடிவெடுத்தபொழுது அதற்கு மாறாக எதிர்திசையில் பந்தைக்கொண்டுசென்று, பழக்கத்தின் காரணமாக பக்கனர் குழுவினர் ஒவ்வொருவரும் தனது பங்கை கச்சிதமாக சரியாக செய்தனர். நிலை தடுமாறாமல் அவர்கள் பந்தை எடுத்துச்சென்றவிதம், ஒரு தானியங்கி இயந்திரம் தடையின்றி இயங்குவதுபோல இருந்தது.


பத்து நிமிடங்களில், டங்கியின் பயிற்சியில் இருந்த பக்கனர் குழுவினர், பல ஆண்டுகளுக்குப்பிறகு ஆட்டத்தில் முதல் நிலை வகித்தனர். ஐந்து நிமிடங்களில் இன்னொரு புள்ளி எடுத்து முன்னேற்றத்தைத் தொடர்ந்தனர். இறுதியில் 25-க்கு 17-புள்ளிகள் என்ற விகிதத்தில் ஆட்டத்தில் பக்கனர் குழுவினர் வெற்றியடைந்தனர்.


ஆட்டம் முடிந்ததும் பக்கனர் குழுவின் தலைவர் லிஞ்ச்-ம் பயிற்றுவிப்பாளர் டிங்கியும் பேசிக்கொண்டே திடலைவிட்டு வெளியில் வந்தனர்.
“இன்று ஆட்டம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.” லிஞ்ச் கூறினார்.
“ஆமாம். நாம் நம்மை நம்ப ஆரம்பித்திருக்கிறோம்.” டிங்கி பதிலளித்தார்.



பயிற்றுவிப்பாளர் பழக்கங்களை ஒருமைப்படுத்தி அணியினரை வெற்றிபெறச் செய்தது எப்படி என்று அறிய நாம் விளையாட்டு உலகத்தைவிட்டு சற்று வெளியேவரவேண்டும். 1934-ல் நியூயார்க்கின் கிழக்குப்பகுதியில் உலகிலேயே முதல்முறையாக பழக்கமாற்றங்களின் வெற்றி என்னும் முனைப்புடன் பழக்கங்களைத் துவக்கிய இடத்துக்கு செல்லவேண்டும்.


அங்கு பல வருடங்களுக்கு முன்பு, கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் பில் வில்சன் என்பவர் அமர்ந்திருந்தார். அவர் மதுவுக்கு அடிமையானவர். முதல் உலகப்போரில் அமெரிக்காவைப் பிரதிநிதித்து போரிட்டவர். நியூபெட்ஃபோர்ட், மாசாசூசெட்ஸ் என்ற படைவீரர்கள் பயிற்சி இடத்தில் முதல்முறையாக அவர் மதுவைத் தொட்டவர். அங்கு இயந்திரத்துப்பாக்கியை எப்படி உபயோகிப்பது என்று பயிற்சி பெற்றவர். அப்பொழுது அவருக்கு வயது 22. அதற்கு முன் அவர் மதுவைத் தொட்டதில்லை. கடுமையான பயிற்சிகள் பிறகு விருந்துகள் என்று இருந்தபொழுது அவருக்கு மது எப்பொழுதும் தாராளமாகக் கிடைத்தது. மதுவே வாழ்க்கையை முழுமையாக்குகிறது என்று எண்ணுமளவுக்கு அவர் மதுவுக்கு அடிமையானார்.


1930-ல் ஐரோப்பாவிலிருந்து நாடு திரும்பியபொழுது, அவரது மதுப்பழக்கத்தினால், அவருடைய திருமணவாழ்வில் முறிவு ஏற்பட்ட்து. தொடர்ந்து ஏகப்பட்ட பண இழப்புகள் வேறு. அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு 3 பாட்டில்கள் மது அருந்தும் அளவுக்கு அவர் மோசமாக இருந்தார்.


ஒருமுறை வில்சன் அவரது நண்பரை வீட்டுக்கு அழைத்தபொழுது, நண்பருக்கும் மதுவினை ஊற்றிக்கொடுத்தார். நண்பரோ, தான் மது அருந்துவதை நிறுத்தி இரண்டு மாதங்களாகிறது என்று மறுத்துவிட்டார். வில்சனுக்கு நண்பரின் கூற்று வியப்பையளித்தது. மதுவினால் தனது வாழ்வு முற்றிலும் அலைக்கழிக்கப்படுவதை அப்போது வில்சன் உணர்ந்திருந்தார். மதுப்பழக்கத்தை விட்டொழிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து தோற்றுவிட்டதை அவருடைய நண்பரிடம் கூறினார். மருந்து மாத்திரைகள், குழுக்களின் உதவி என்று அனைத்திலும் முயற்சி செய்து வில்சன் எதிலும் வெற்றிபெறமுடியவில்லை. நண்பரிடம், உன்னால் மட்டும் எப்படி இதை சாதிக்கமுடிந்தது என்று வில்சன் வினவினார். 

                         
“நான் மதத்தைப் பற்றிக்கொண்டேன்.” நண்பர் பதிலளித்தார்.



-தொடரும்




சிந்திக்க சில கேள்விகள் :


இந்தக் கேள்விகளுக்கு நேரம் அதிகம் எடுக்காமல் பதிலளிக்க வேண்டும். மிகவும் சுலபமான கேள்விகள்தான். அனேகருக்கு முன்பே தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.


1. நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். மொத்தம் எட்டு பேர் பங்கேற்கின்றனர். பந்தயத்தில் இரண்டாவதாக ஓடுபவரை தற்போது முந்திவிட்டீர்கள். தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள்?


2. இப்பொழுது அந்தப் பந்தயத்தில் கடைசியில் வருபவரை முந்தியிருக்கிறீர்கள். தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள்?


3. இப்பொழுது ஒரு மனக்கணக்கு.

முதலில் 1000- எடுத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் 40 -ஐக் கூட்டுங்கள்.
விடையில் 1000 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 30 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 1000 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 20 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 1000 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 10 –ஐக் கூட்டுங்கள்.
விடை என்ன?


4. பொன்னனின் பெற்றோருக்கு ஐந்து புத்திரர்கள்.

முதல் மகனின் பெயர் தருமன்.
இரண்டாவது மகனின் பெயர் பீமன்
மூன்றாவது மகனின் பெயர் அர்ச்சுனன்
ஐந்தாவது மகனின் பெயர் சகாதேவன்
நான்காவது மகனின் பெயர் என்ன?


5. ஊமை ஒருவன் டூத்பிரஷ் வாங்க கடைக்கு சென்றான். கையை ஆட்டி சைகை செய்து, கடைசியில் எப்படியோ பிரஷ் வாங்கிவிட்டான். அடுத்த்து குருடன் ஒருவன் சன் கிளாஸ் வாங்க கடைக்கு சென்றான். அவன் எப்படி வெளிப்படுத்தி சன் கிளாஸ் வாங்குவான்?


பதில்கள் வெளிவராமல் இருக்க பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது




Thursday, July 17, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 13

துப்பு, செயல், வெகுமதி என்ற இந்த அடிப்படையான சூத்திரத்தைக்கொண்டு யார் வேண்டுமானாலும் அவர்களுக்குத் தேவையான பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும். உடற்பயிற்சியில் இறங்க வேண்டுமா? அதற்கான துப்பு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன், உடற்பயிற்சிக்கான ஷூக்களை கண் எதிரில் படும்படி வைத்திருங்கள். உடற்பயிற்சி முடிந்ததும் உங்களுக்கு ஒரு வெகுமதியையும் தயார் செய்துகொள்ளுங்கள். அது ஒரு சுவை மிகுந்த ஜூஸ் ஆகக்கூட இருக்கலாம். ஆனால் அந்த வெகுமதி உண்மையில் உங்களிடம் ஒரு ஏக்கத்தை உண்டாக்கும் அளவுக்கு இருக்கவேண்டும். அந்த ஜூஸை நினைத்தாலோ அல்லது உடற்பயிற்சிக்குப் பின் கிடைக்கும், சாதித்தோம் என்ற நினைவை நினைத்தாலோ உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற உத்வேகம் வரவேண்டும். காலம் செல்லச் செல்ல நீங்கள் உடற்பயிற்சி என்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுவிடுவீர்கள். ஏக்கம் பழக்க வளையத்தை, சுழற்சியை உறுதிபடுத்துகிறது.


நிறுவனங்களில் ஏக்கங்கள் ஏற்படுவதற்கான அறிவியல் உண்மைகள் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. தினம் தினம் நாம் சில செயல்களை செய்துவந்தாலும் அனைத்து செயல்களும் தானாகவே பழக்கமாகிவிடுவதில்லை. நீரை அதிகம் பருகவேண்டும்; உணவில் உப்பைக் குறைக்கவேண்டும்; அதிக காய்கறிகளை உண்ணவேண்டும்; எண்ணையில் வறுத்த பண்டங்களை உண்பதைக் குறைக்கவேண்டும்; வெயிலில் செல்லுமுன் சன் க்ரீமை பூசிக்கொள்ளவேண்டும், பூசிக்கொள்ளாவிட்டால் கான்சர் வர வாய்ப்புகள் அதிகம் போன்ற உண்மைகளை நம்மில் பெரும்பாலோனோர் அறிவர். நம்மில் 90 சதவிகித்த்தினர் தினம் பல் துலக்குகின்றனர். ஆனால் அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் சன் க்ரீமை உபயோகிப்பதில்லை. ஏன்?


ஏனெனில் சன் க்ரீமை தடவிக்கொள்ளவேண்டுமென்ற ஏக்கம் நம்மிடம் உருவாகவில்லை. சில நிறுவனங்கள் பற்பசையைப்போல சன் க்ரீமிலும், பற்பசையில் உள்ளது போன்ற புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வேதிப்பொருளை சேர்த்துப்பார்த்தனர். அது சன் க்ரீமை உபயோகிப்பவர்களுக்கு ஒரு வெகுமதியாக அமையும் என்று எதிர்பார்த்தனர். இதனைப்போன்று பல்வேறுபட்ட பொருட்களில், தேவையில்லாத ஆனால் ஏக்கத்தைத் தூண்டும் பொருட்களை சேர்த்துள்ளனர்.

பற்பசையைப் பொறுத்தவரை நுரைத்தல் என்பது அவசியமில்லாத ஒன்று. அதற்கு எந்தவிதமான தூய்மைப்படுத்தும் குணமும் கிடையாது. ஆனால் பற்பசையில் அது வேண்டுமென்றே தோற்றுவிக்கப்படுகிறது. மக்கள் அதனை ஒரு வெகுமதியாகப் பார்க்கிறார்கள். நுரைப்பது பற்களைத் தூய்மைப்படுத்துவதாக நம்புகிறார்கள். பற்பசையில் நுரைப்பதற்காக “சோடியம் லாரெ சல்பேட்” -sodium laureth sulfate என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது – என்று சின்க்ளைர் என்ற “Oral-B” பற்பசையின் நிறுவன அதிகாரி கூறுகிறார்.


ஏக்கங்களே பழக்கங்களைத் தொடர்வதற்கான முக்கிய இயக்க சக்தியாகிறது. ஒரு பழக்கம் உண்டாவதற்கு, எப்படி அதற்கேற்றபடி ஏக்கத்தை உருவாக்குவது என்று அறிந்துகொண்டால் எளிதாக பழக்கத்தை உருவாக்கிவிடமுடியும். தினம் தினம் மக்கள் பல்துலக்குவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும், அதனை செய்ய வேண்டும் என்று தோன்றும் ஏக்கங்களே முக்கிய காரணம்.


அதனைப்போலவே மாலையில் வீட்டுக்குத் திரும்பியவுடன், வீட்டை சுத்தம் செய்துவிட்டு, சிலர் ஃபிப்ரீஸ் ஸ்ப்ரே செய்யத் தோன்றுவதையும், அந்த ஏக்கமே இயக்குகிறது.


சாண்டியாகோ நகரில் இருந்த விளையாட்டுத்திடலில், நவம்பர் 17, 1996 ஞாயிற்றுக்கிழமை, காலம் மாலையை நெருங்கிக்கொண்டிருந்த்து. அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டு புக்கனர் குழுவுக்கும், சார்ஜர் குழுவுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த விளையாட்டு முடிய இன்னும் எட்டு நிமிடங்கள், பதினெட்டு வினாடிகள் இருந்தன. புக்கனர் குழு கிட்டத்தட்ட பதினாறு வருடங்களாக தொடர்ந்து தோற்றவண்ணமே இருந்தது. அந்தக் குழுவின் புது பயிற்றுவிப்பாளராக டோனி டங்கி சேர்ந்திருந்தார். புக்கனர் குழுவை ஒரு “மிதியடி குழு” என்று செய்தித்தாள்கள் எழுதிக்கொண்டிருந்த காலம் அது.


டங்கி தனது குழுவினர் விளையாடுவதைக் கவனித்துக்கொண்டிருந்தார். இறுதியாக சூரியனை மூடியிருந்த மேகம் விலகியதைப்போல அவர் உணர்ந்தார். விளையாட்டு நிகழும்போது அவருக்குத் தன் உணர்வை வெளிக்காட்டும் வழக்கம் கிடையாது. தனது திட்டங்கள் வெற்றிபெறுவதை அவர் கண்கூடாகக் கண்டார்.

டோனி டங்கி பயிற்றுவிப்பாளர் வாய்ப்புக்காக பல வருடங்களாகக் காத்திருந்தார். கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் துணைப்பயிற்றுவிப்பாளராக உழைத்தார். நான்கு முறைகள் நேஷனல் ஃபுட்பால் லீக் – பயிற்றுவிப்பாளர் பதவிக்கு இன்டர்வியூ-க்கு சென்று வந்திருக்கிறார். நான்கு முறையும் தோல்வியையே சந்தித்துள்ளார். தேர்ச்சியடையாமல் போனதற்கு டங்கியுடைய பயிற்றுவிக்கும் கொள்கைகளும் ஒரு காரணமாகக் கூறலாம்.


ஒவ்வொருமுறை தேர்வின் பொழுதும், ஆட்டக்காரர்களின் பழக்கங்களே, அவர்களை வெற்றியடைய வழிவகுக்கும் என்ற அவர் கொள்கையை யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆட்டத்தின்பொழுது முடிவு எடுக்கும் முறையை, ஆட்டக்காரர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இயல்பாகவே ஆட்டக்காரர்கள் முடிவெடுக்கவேண்டும், ஆனால் அது பழக்கத்தினால் அமையவேண்டும் என்று அவர் விரும்பினார். சரியாக, தெளிவாக இப்படித்தான் விளையாடவேண்டும் என்ற பழக்கத்தினை ஆட்டக்காரர்களிடம் ஏற்படுத்திவிட்டால், வெற்றி நிச்சயம் என்று அவர் கருதினார்.


“வெற்றியாளர்கள் அசாதாரண செயல்களையே செய்வார்கள் என்று கூறமுடியாது. சாதாரணமான செயல்களையே செய்வார்கள்.  ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள், எதிராளிகளுக்கு அவகாசம் தராத அளவுக்கு விரைவாக தன்னிச்சையாக நிகழும். அவர்களது செயல்கள் பழக்கத்தில் வந்ததாக இருக்கும்.” என்று கருதுவதாக டங்கி பேட்டியில் கூறினார்.


“அப்படியென்றால் அவர்களுக்கு விளையாட்டில் புதிய பழக்கத்தைக் கற்றுத்தரப் போகிறீர்களா?”

“இல்லை. புதிய பழக்கத்தைக் கற்றுத்தரப் போவதில்லை.” பல்லாண்டு காலமாக நேஷனல் ஃபுட்பால் லீக் – க்காக திறமையை வளர்த்து குழுவில் சேர்ந்துள்ளனர் விளையாட்டாளர்கள். ஒரு பயிற்றுவிப்பாளர் சொல்வதற்காக அந்த்த் திறமையை அவர்கள் கைவிட்டுவிடமுடியாது.


புதிய பழக்கங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, முன்னமேயே உள்ள பழக்கங்களை சரியாகக் கொண்டுவரவே டங்கி விரும்பினார். பழக்க வளையமானது தூண்டுகோல் (துப்பு), செயல்முறை, வெகுமதி என்ற மூன்று படிகளைக் கொண்டது. டங்கி அதில் நடுவில் இருந்த செயல் முறையையே சரியாக மாற்றியமைக்க விரும்பினார். ஆரம்பமும் முடிவும் (துப்பும், வெகுமதியும்) முன்னமேயே தெரிந்திருந்தால் புதிதாக ஒரு பழக்க வளையத்தை ஒருவருக்கு உண்டாக்குவது எளிது என்று டங்கிக்கு அனுபவத்தின் மூலம் தெரியும். ஒரு தீய பழக்கத்தை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது என்றும் டங்கி அறிந்திருந்தார். ஒரு பழக்கத்தை முற்றிலுமாக நீக்குவதற்கு பதிலாக, பழைய தூண்டுகோலையும் வெகுமதியையும் மாற்றாமல் ஒரு புதிய செயலை அறிமுகப்படுத்த அவர் விரும்பினார்.


டங்கியின் பழக்கத்திற்கான விதியின்படி, தூண்டுகோலையும், வெகுமதியையும் மாற்றாமல், செயல் முறையில் மட்டும் மாற்றங்கள் செய்வதன்மூலம் பழக்கத்தை மாற்றிவிடமுடியும். எந்தவிதமான பழக்கத்தையும் இந்த முறையில் மாற்றியமைக்கமுடியும்.


டங்கியின் மேற்கண்ட பொன்விதியினால் மதுப்பழக்கம், உடல்பருமன், மனதை அலைக்கழிக்கும் சீர்கேடுகள் என்று பல அழிவு நடவடிக்கைகளை மாற்றியமைக்கமுடியும்.  எந்தவிதமான செயலையும் உண்டுபண்ணாமல், புகைப்பிடிக்கும் பழக்கத்தை மாற்றிவிட முயல்வது தோல்வியையே தரும். நிக்கோட்டினுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு புகைபிடிக்கவேண்டுமென்ற உணர்வு தோன்றியவுடன், ஏதாவது செயலில் ஈடுபடவேண்டிய அவசியம் உள்ளது. அப்படி செயலில் ஈடுபடாவிட்டால் அவர்களால் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியே வருவது கடினம்.


நான்குமுறை தேர்வாளர்களுக்கு தன்னுடைய செயல்முறைகளையும், கொள்கைகளையும் எடுத்துரைத்தபின், டங்கி தோல்வியையே சந்தித்தார். அவருக்கு பதிலாக வேறொருவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இறுதியாக 1996-ல் பக்கனர் குழுவுக்கு, அவர் நேர்காணலுக்கு வந்தார். அந்த தேர்வாளர்களிடமும், டங்கி தன் கொள்கைகளையும் விதிமுறைகளையும் எடுத்துரைத்தார். ஒரு வழியாக பக்கனர் குழுகுவுக்கு பயிற்றுவிப்பாளராக டங்கி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


-தொடரும்



நம்புங்கள் சென்னையில்தான் இது நிகழ்கிறது :




முன்பே தெரிந்திருந்தாலும் இன்னொருமுறை பார்க்கவும் முடியும்.