பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, June 26, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 10



பேராசிரியர் ஸ்கட்ஸ் இந்த சமயத்தில் குரங்கின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்தார். அவர் மூளையின் செயல்பாடுகளை ஒரு வரைபடமாக வரைந்தார். அப்பொழுது மூளையின் இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பாணியிலான வரைபடம் கிடைப்பதை அறிந்தார். கணினியில் எதுவும் தோன்றாதவரை குரங்கு அமைதியாக இருந்தது. அப்பொழுது அதனுடைய மூளையின் இயக்கங்களும் இயல்பானதாக இருந்தது. கணினியில் வடிவங்கள் தோன்றியவுடன் குரங்கு கைப்பிடியைப் பிடித்த்து. அப்பொழுதும் அதன் மூளையின் இயக்கத்திற்கான வரைபடத்தில் எந்தவிதமான மாற்றமுமில்லை. அதற்கு ஜூஸ் கிடைத்தவுடன் மூளையின் வரைபடம் மூளை செயல்படுவதற்கான உச்சகட்டத்தை அடைந்தது தெரிந்தது. அதாவது எனக்கு வெகுமதி கிடைத்தது என்று மூளை மகிழ்ச்சியுடன் கூறுவதுபோல் அது காணப்பட்டது.


சில வரைபட விளக்கங்களை கீழே காணலாம்.





ஜூஸ் கிடைத்தவுடன் மூளை உச்சகட்ட மகிழ்ச்சி அடைகிறது




கொஞ்சம் கொஞ்சமாக குரங்குக்கு ஒரு பழக்கம் உருவாகிக்கொண்டிருந்தது. பலமுறைகள் அதே ஆராய்ச்சியை ஸ்கட்ஸ் குரங்கிடம் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். குரங்கின் மூளையின் செயல்பாடுகளுக்கான வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்படுவதை ஸ்கட்ஸ் கண்டறிந்தார். குரங்கு பழக்கத்துக்கு அடிமையானபிறகு, மூளையின் செயல்பாடுகள் கணினியில் வடிவம் தோன்றியவுடனே உச்சகட்டத்தை அடைய ஆரம்பித்துவிட்டது. அதாவது வடிவம் தோன்றியவுடனே தனக்கு வெகுமதி கிடைத்துவிட்டது என்று குரங்கு உணர ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது மூளையின் வரைபடம் புதிய பாணியில் வர ஆரம்பித்தது.





வடிவம் தோன்றியதும் மூளை உச்சகட்ட மகிழ்ச்சி அடைகிறது




கணினியில் தோன்றும் வடிவங்கள், கைப்பிடியை இழுக்கவேண்டிய தூண்டுகோலாக ஆரம்பத்தில் இருந்தது. காலம் செல்லச் செல்ல அந்த வடிவங்கள் மூளையின் மகிழ்ச்சிக்கு உண்டான தூண்டுகோலாக ஆகிவிட்டது. வடிவம் தோன்றியவுடனே ஜூலியோ வெகுமதிக்கு தயாராகிவிட்டது.


ஸ்கட்ஸ் சோதனைகளை சிறிது மாற்றியமைத்தார். ஆரம்பத்தில் வடிவம் தோன்றியதும், கைப்பிடியைத் தொட்டால் நிச்சயம் ஜூஸ் கிடைத்தது. இப்பொழுது வடிவம் தோன்றியதும் கைப்பிடியைத் தொட்டால், சிலமுறை ஜூஸ் கிடைக்கும், சிலமுறை ஜூஸ் நிச்சயமில்லை என்ற முறையில் சோதனையை மாற்றினார். 


சோதனையை மாற்றியதும், ஜூஸ் கிடைக்காத சமயத்தில் ஜூலியோவினால் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபமாகக் கத்த ஆரம்பித்தது. உறும ஆரம்பித்தது. மூளையில் ஏற்படும் மகிழ்ச்சியில், ஏமாற்றங்கள் வந்தவுடன், வெகுமதி கிடைக்காததால் ஜூலியோ எரிச்சலடைந்தது. ஒரு போதைப்புழங்கிபோல வெகுமதிக்கு ஏங்க ஆரம்பித்தது.


பழக்கத்துக்கு ஆளான குரங்குகினை, ஜூஸ் வராத நேரத்தில் அதன் கவனத்தை ஆய்வாளர்கள் திசை திருப்ப முயற்சித்தனர். ஆய்வகத்தின் கதவைத் திறந்து, அதன் நண்பர்களுடன் விளையாட அனுமதித்தனர். ஆனால் அவர்களால் ஜூலியோவை திசை திருப்ப முடியவில்லை. சோதனையின் ஆரம்பகட்டத்தில் இருந்த குரங்குகள், எளிதாக திசை திருப்பப்பட்டு, ஏமாற்றத்தை உணராமல் விளையாட ஆரம்பித்தன. ஆனால் பழக்கத்துக்கு ஆளான குரங்குகள், கணினியையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தன. வடிவம் தோன்றியவுடன் கைப்பிடியை இழுத்தவண்ணமே இருந்தன. சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள் தோற்றாலும் மீண்டும் மீண்டும் விளையாடுவதற்கு இது ஒப்பானது.





பழக்க வளையம், பழக்க சுழற்சி


இதனால் பழக்கங்கள் ஏன் ஒருவரை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு இருக்கிறதென்பதை ஓரளவுக்கு உணரமுடிகிறது. பழக்கங்கள் நமது நரம்பு மண்டலத்தில் ஒரு ஏக்கத்தை உருவாக்குகிறது. அந்த ஏக்கம் சிறிதுசிறிதாக நரம்பு மண்டலத்தில் தோற்றுவிக்கப்படுவதால், ஆரம்பத்தில் அதன் தாக்கத்தை நாம் உணர்வதில்லை. சில துப்புகளையும், வெகுமதிகளையும்கொண்டு நரம்பு மண்டலத்தில் அவை பதியவைக்கப்படுகின்றன. “சின்னமன்”  (Cinnamon) என்ற பிரபலமான கடைகள், அந்த உணவின் நறுமணத்துக்கு பெயர்பெற்றவை. பெரிய மால்களில், அதன் நறுமணம் பிறவகை மணங்களால் தடைபடாத இடத்தில், இந்தக் கடைகள் இருப்பதைக் காணலாம். தடைபடாத அந்த நறுமணத்தை உணர்ந்ததும், அதனை சாப்பிட்டாகவேண்டும் என்ற உணர்வு வந்துவிடுகிறது. அந்த வாசனையைக்கொண்டு ஒரு பழக்க சுழற்சி இங்கு மக்களிடம் உருவாக்கப்படுகிறது.


“டோநட் (Donut) - ஐப் பார்த்தவுடன் அதனை சாப்பிட்டாகவேண்டும் என்று நமது மூளையில் இயற்கையில் தோன்றுவதில்லை. ஆனால் ஒருமுறை அதனை சாப்பிட்டவுடன், அதில் இனிப்பு உள்ளது என்று அறிந்தவுடன், பிறகு அதன் நறுமணத்தை உணர்ந்தாலே, மூளை இனிப்புக்கு ஏங்க ஆரம்பிக்கிறது. நமது மூளை நம்மை டோநட்-ஐ நோக்கித் தள்ளுகிறது. அப்பொழுது டோநட்-ஐ சாப்பிடாவிட்டால் மூளை ஏமாற்றம் அடைகிறது.” என்று ஸ்கட்ஸ் கூறுகிறார்.


இதனைப் புரிந்துகொள்வத்ற்கு குரங்குகளின் மீது நடத்தப்பட்ட சோதனையை மீண்டும் காண்போம். முதலில் குரங்கு திரையில் ஒரு வடிவத்தைக் காண்கிறது. காலப்போக்கில் வடிவத்தைக் கண்டவுடன், அது கைப்பிடியை இழுக்கவேண்டும் என்று உணர்ந்துகொள்கிறது. கைப்பிடியை இழுக்கிறது. அதன் விளைவாக அதற்கு ஜூஸ் கிடைக்கிறது.


உண்மையில், ஆரம்பத்தில் கைப்பிடியை இழுத்தால், ஜூஸ் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளும் விஷயம்தான். எப்பொழுது குரங்குக்கு துப்பு கிடைத்தவுடன், ஜூஸ் வேண்டும் என்று ஏங்க ஆரம்பிக்கிறதோ, அப்பொழுதுதான் அது பழக்கமாகிவிட்டது என்று கூறமுடியும். ஏக்கம் இருக்கும்வரை குரங்கு தன்னிச்சையாக செயல்படும். அது பழக்கத்துக்கு அடிமையாக இருக்கும்.


கீழ்க்கண்டவாறு பழக்கம் தோற்றுவிக்கப்படுகிறது. முதலில் ஒரு துப்பு, தூண்டுகோல் தொடர்ந்து ஒரு செயல்முறை, பிறகு ஒரு வெகுமதி. புகைப்பிடிக்கும் ஒருவருக்கு சிகரெட் பாக்கெட்டைப் பார்ப்பது ஒரு தூண்டுகோலாகிறது. அவரது மூளை நிக்கோட்டினுக்கு ஏங்குகிறது. அவரையும் அறியாமலே அவருடைய கை சிகரெட்டை நோக்கி செல்கிறது.
ஃபோனில் வரும் செய்தியை எடுத்துக்கொள்ளுங்கள். செய்தி வந்தவுடன், செய்தியைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு அதிகமாகிவிடுகிறது. செய்தி என்னவோ தெரிந்த செய்தியாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் செய்தி வந்தவுடன் பார்த்துவிடவேண்டும் என்ற முனைவைத் தவிர்க்கமுடிவதில்லை. யாராவது ஃபோனை ஆஃப் செய்து வைத்துவிட்டால், செய்தி வருவது தெரியாததால், ஒருவரால் தொடர்ந்து தன் வேலையை செய்துகொண்டிருக்க முடிகிறது. மணிக்கணக்கில் ஃபோனைப்பற்றி சிந்திக்காமல் வேலை செய்யவும் முடிகிறது.










பழக்க வளையம், பழக்க சுழற்சி



போதைப்புழங்கிகள், புகைக்கு அடிமையானவர்கள், அதிகமாக உண்பதற்கு அடிமையானவர்கள் போன்றவர்களின் மூளையில் ஏற்படும் நரம்பியல் மாற்றங்களையும், வேதியியல் மாற்றங்களையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பழக்கங்களுக்கு அடிமையானவர்களின் மூளை, ஏக்கங்கள் ஏற்படும்போது மூளையின் உத்தரவின்றி தன்னிச்சையாக செயல்கள் நிகழ்வதைக் கண்டறிந்தனர். பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் (குடும்பத்தை இழப்பது, வேலையை இழப்பது, தன்மானத்தை இழப்பது) எதனைப்பற்றியும் கருதாமல் அவர்கள் செயல்படுவதைக் கண்டறிந்தனர்.
இருப்பினும் அத்தகைய ஏக்கங்கள், ஒருவரை முழுமையாகக் கட்டுப்படுத்துவதில்லை. 


வரும் அத்தியாயங்களில் கூறியுள்ளபடி அவற்றைத் திசை திருப்பவும் முடியும். ஏக்கங்களை மறக்கடிக்கவும் முடியும். அப்படி மறக்க வைப்பதற்கு முதல் தேவையாக, அத்தகைய தன்னிச்சையான ஏக்கம் இருப்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி உணராவிட்டால் ஃபோனில் செய்தி வந்ததும் ஃபோனைத் தேடுவதுபோல நாம் பழக்கத்தின் வழியே செயல்படுதல் நேரிடும்.


ஏக்கம் ஒரு பழக்கம் ஏற்பட்டுவிட்ட பிறகு, அதனை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை, 2002-ல் நியூ மெக்ஸிகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்பவர்கள் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அத்தகைய நபர்கள் 266 பேர் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். வாழ்க்கையில் திடீரென்று ஏற்பட்ட மன உளைச்சலைத் தவிர்க்கவோ, கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிக்கவோ என்று ஏதோ ஒரு காரணத்தைக்கொண்டு அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும், அவர்கள் உடற்பயிற்சியினை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்ததற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருந்தது. அவர்களுக்கு உடற்பயிற்சி ஒரு பழக்கமாகத் தொடர்வது, வெகுமதிக்கான ஏக்கத்தைத் தீர்க்கவே அவர்கள் உடற்பயிற்சியைத் தொடர்வது தெரியவந்தது.



-தொடரும்




நாம் என்ன செய்திருப்போம்:

கண்டு நெகிழ, திகைக்க ஒரு காணொளி.












http://www.youtube.com/watch?v=KMYrIi_Mt8A

Monday, June 23, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?


நண்பர் சொக்கன் சுப்ரமணியன் வேண்டுகோளுக்கிணங்க என் பதில்களை எழுதியிருக்கிறேன்.

http://www.unmaiyanavan.blogspot.com.au/ 

 
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அப்படி இருந்துவிட்டால் கொண்டாட மாட்டேன். வருத்தப்படுவேன்

 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
எப்பொழுதும் குழந்தையின் உற்சாகத்துடன் இருப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும்.

 

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக? 
காலையில், மகன் பள்ளிக்கு புறப்படும் முன் அவன் செல்லப்பிராணி (எலி)
அவனை தூக்கிக்கொள்ள சொல்லி அடம் பிடித்தபொழுது.

 

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
காலாற நடக்கலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். படிக்கலாம். வீட்டை சுத்தம் செய்யலாம். தூங்கலாம்.  செய்ய வேலையா இல்லை.
 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன

பரவாயில்லையே. இருபத்தைந்து வயதிலேயே வீடு, பிசினஸ், கல்யாணம்னு செட்டில் ஆயிட்டீங்களே.
 
உண்மையான பதில் இங்கே.
மகிழ்ச்சியாக இருங்கள்.
சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
மதம்

 
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
மனைவியிடம்
 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
நல்ல நண்பர்களை புரிந்து கொள்ள உதவியதால், மகிழ்ச்சியாக இருப்பேன்.
 

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
உடனே சொல்லாவிட்டாலும், மறுமணம் செய்துகொள்ள சொல்லுவேன்.

 
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
காலாற நடக்கலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். படிக்கலாம். வீட்டை சுத்தம் செய்யலாம். தூங்கலாம்.  செய்ய வேலையா இல்லை.

Thursday, June 19, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 9



ஸ்டிம்சன் மற்றும் அவரது குழுவினரும் P&G –ன் தலைமையகத்துக்குத் திரும்பியபிறகு, தங்களது சந்தைப்படுத்துவதற்கான இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்று மறுபரிசீலனை செய்தனர். ஃபிப்ரீஸ் விற்பதற்கான முக்கியமான கூறு, அந்த வனவிலங்கு அதிகாரிக்குக் கிடைத்த மனநிம்மதியே என்று அவர்கள் நினைத்தனர். மக்களுடைய வெளியில் சொல்லமுடியாத துர்நாற்றத்தை நீக்குவதே ஃபிப்ரீஸின் முக்கியமான பணி என்று மக்கள் மனதில் நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டனர். குழுவினர்கள் அனைவருக்கும் ஹாப்கின்ஸ் விதிகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. விளம்பரத்தை எளிமையாக வைத்திருக்க வேண்டும். ஒரு தூண்டுதல் இருக்க வேண்டும். அதற்கான வெகுமதி கிடைக்கவேண்டும்.

குழுவினர் இரண்டு தொலைக்காட்சி விளம்பரத்தைத் தயாரித்தனர். முதல் விளம்பரத்தில் ஒரு பெண் உணவகத்தில் சாப்பிடும்பொழுது, மக்கள் புகைப்பதால் தன்மீது புகைநாற்றம் என்று முறையிடுகிறாள். அவள் நண்பன் ஃபிப்ரீஸை உபயோகிக்குமாறு கூறுகிறான். இங்கு தூண்டுகோல், புகை நாற்றம். வெகுமதி, நாற்றம் நீக்கப்பட்ட உடைகள். இன்னொரு விளம்பரத்தில் வீட்டில் நாய் சோஃபாவில் படுத்துவிடுவதால், சோபா நாய்போல நாற்றமடிக்கிறது என்று நினைக்கிறான்.  நாய், நாய்போல் நாற்றமடிப்பது இயல்பு. ஃபிப்ரீஸ் இருக்கும்வரையில் என் சோஃபா நாய்போல் நாற்றமடிக்கத் தேவையில்லை என்று கூறுகிறான். இங்கு தூண்டுகோல், நாயின் நாற்றம். வெகுமதி சோஃபா, நாயின் நாற்றமின்றி இருப்பதாக அமைகிறது.

ஸ்டிம்சனும், குழுவினர்களும் 1996-ல் விளம்பரங்களை வெளியிட்டு மக்களுக்கு மாதிரிகளையும் அளித்தனர். கடைகளில் ஃபிப்ரீஸ், கண்படும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. விளம்பரம் தொலைக்காட்சியில் வந்தபிறகு மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும் என்று அறிய ஸ்டிம்சன் குழுவினர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஒரு வாரம், இரண்டு வாரங்கள், ஒரு மாதம், இரண்டு மாதங்கள் கழிந்தன. சிறிய அளவில் விற்கத்தொடங்கிய ஃபிப்ரீஸ் இன்னும் கொஞ்சமாகக் குறைந்து கடைகளில் ஃபிப்ரீஸ் வைத்தது வைத்தபடியே இருந்தது. அதிகாரிகள் கலவரமடைந்தனர். வீட்டுக்கு வீடு சென்று மீண்டும் மாதிரிகளை இலவசமாக கொடுக்க ஆரம்பித்தனர். மாதிரிகளைக் கொடுத்தபிறகு, வீடுகளுக்குச் சென்று அவற்றின் செயல்திறனைப் பற்றி விபரங்களைச் சேகரித்தனர்.

“அந்த ஃபிப்ரீஸ் ஸ்பிரேதானே, ஆமாம் நினைவில் உள்ளது. ஓரிரு முறை உபயோகித்தேன். பிறகு தொடவில்லை. இருங்கள் எங்கே இருக்கிறது என்று பார்க்கிறேன்.” மேசைக்கு கீழே இருந்த ஃபிப்ரீஸை எடுத்த வீட்டுப்பெண்மணி “இன்னும் அப்படியேதான் இருக்கிறது. வேண்டுமென்றால் திருப்பி எடுத்துக்கொள்ளுங்கள்.” என்று வந்தவர்களிடம் திருப்பிக் கொடுத்தார்.

ஃபிப்ரீஸ் ஒன்றுக்கும் உதவாத பொருளாகக் காணப்பட்டது. ஸ்டிம்சனுக்கு இது ஒரு பேரிடியானது. நிறுவனத்தில் அவரது எதிரிகள், ஸ்டிம்சனுடைய தோல்வியை மகிழ்வுடன் எதிர்பார்த்திருந்தனர். சிலர் ஒட்டுமொத்தமாக ஃபிப்ரீஸை தூக்கிவிட முயற்சி செய்துகொண்டிருப்பதாகவும், ஸ்டிம்சன் கேள்விப்பட்டார்.
P&G-ன் மேலதிகாரிகள், அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். ஃபிப்ரீஸினால் ஏற்பட்ட நஷ்டத்தைக் குறைக்கத் திட்டமிட்டனர். ஸ்டிம்சனுடைய தலைமை அதிகாரி, இன்னும் ஒருமுறை வாய்ப்பளிக்குமாறு நிறுவனத்தினரைக் கேட்டுக்கொண்டார். ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு என்னதான் நடக்கிறது என்று ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார். ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கும் நுகர்வோர்களுக்கான மனோவியல் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு நிகழ்வுகளை ஆராயுமாறு கூறினார். நிறுவனத்தின் மேலதிகாரிகளும் இன்னும் ஒரு சந்தர்ப்பம் அளிக்க ஒத்துக்கொண்டனர்.

புதிய ஆராய்ச்சியாளர்களும், ஸ்டிம்சனுடைய குழுவில் இணைந்துகொண்டனர். மீண்டும் வீடு வீடாகச் சென்று பேட்டிகள் எடுத்தனர். ஃபீனிக்ஸ்-ல் ஒன்பது பூனைகளை வளர்க்கும் ஒரு பெண்ணின் வீட்டுக்குச் சென்றனர். வீட்டுக்குள் நுழையும்முன்னே பூனைகளின் நாற்றம் அவர்களைப் பாதித்தது. வீட்டுக்குள் நுழைந்தால், வீடு மிகவும் சுத்தமாக வேக்கும் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. வீட்டை தினமும், அந்த பெண் வேக்கும் செய்யும் பழக்கமுடையவள். வீட்டுக்குள் தூசி வந்துவிடக்கூடாது என்று சன்னல்களைக்கூட அவள் திறப்பதில்லை. வீட்டுக்குள் நுழைந்ததும் ஒரு ஆராய்ச்சியாளருக்கு, பூனை நாற்றத்தினால் வாந்தியே வந்துவிட்டது.

“பூனைகளின் நாற்றத்தைக் குறைக்க என்ன செய்கிறீர்கள்?” ஆராய்ச்சியாளர் கேட்டார்.
“அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.”
“பூனைகளின் நாற்றத்தை எப்பொழுதாவது உணர்வீர்களா?”
“மாதத்திற்கு ஒருமுறைபோல உணர்வதுண்டு.”
ஆராய்ச்சியாளர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “இப்பொழுது உணர்கிறீர்களா?” “இல்லை.”

ஆராய்ச்சியாளர்கள் சென்ற ஒவ்வொரு வீட்டிலும் இதனைப்போன்ற நிகழ்ச்சிகளே தொடர்ந்தது. மக்கள் அவர்கள் வசிக்கும் வீட்டில் உள்ள நாற்றத்திற்குப் பழகிவிடுகின்றனர். மனம் என்பது வினோதமானது. மிகவும் நாற்றமான சூழ்நிலையில் இருப்பவர்களும், ஒரு காலக்கட்டத்தில் அதற்கு பழகிவிடுகின்றனர். அதனால்தான் ஃபிப்ரீஸை யாரும் உபயோகிப்பதில்லை என்று ஸ்டிம்சன் உணர்ந்தார். பொருளை விற்பதற்கான தூண்டுகோல், அது தேவைப்படுபவர்களிடம் மறைந்து ஒளிந்துகொண்டதை அவரால் உணரமுடிந்தது. துர்நாற்றத்துக்கு அவர்கள் பழகி இருந்ததால் ஃபிப்ரீஸின் உதவி அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை.

ஸ்டிம்சனுடைய குழு P&G-ன் தலைமையகத்திற்குச் சென்று சன்னல்கள் இருந்த அந்த அறையில் அவசரக் கூட்டம் நடத்தினர். ஒன்பது பூனைகளை வைத்திருந்த அந்த பெண்மணியுடன் நடந்த பேட்டியின் பிரதி அவர்கள் கைகளில் இருந்தது. ஸ்டிம்சன் தலையைப் பிடித்துக்கொண்டார். ஒன்பது பூனைகளுடைய இந்த பெண்ணிடமே ஃபிப்ரீஸை விற்க முடியவில்லை என்றால், வேறு யாரிடம் இந்த பொருளை விற்க முடியும். மிகவும் தேவையானவர்களிடமே இதனை விற்க முடியாவிட்டால், சாதாரண மக்களிடம் எந்த தூண்டுகோலைப் பயன்படுத்தி நம்மால் விற்கமுடியும்? என்ன வெகுமதி அளிக்க முடியும்?

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் உல்ஃப்ரேம் ஸ்கட்ஸ்-ன் மேசை மீது எப்பொழுதும் பொருட்கள் கண்டபடி பரப்பி வைக்கப்பட்டிருக்கும். மற்றவர்கள் அவர் மேசையை ஒரு அலிபாபா குகை என்று குறிப்பிடுவார்கள். எந்த பொருளையும் அங்கு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. அவர் மேசைமீது பூஞ்சை பூத்து, நுண்ணுயிர்களும் உயிர்வாழும். அவர் மேசையை துடைக்க விரும்பினால், ஒரு துடைக்கும் காகிதத்தை நீரில் நனைத்து, அழுத்தமாக துடைத்துவிடுவார். அவ்வளவுதான். அவரது ஆடைகள் ஒரே புகைநாற்றமடிக்கும். அல்லது பூனையின் நாற்றமடிக்கும். அவர் அதனை புரிந்துகொள்ளவில்லையோ, கண்டுகொள்ளவில்லையோ தெரியாது.


இருந்தாலும் பேராசிரியர் ஸ்கட்ஸ் கடந்த இருபது வருடங்களாக பழக்கங்கள், தூண்டுகோல்கள், வெகுமதிகள் குறித்து நடத்திய ஆராய்ச்சிகள் அந்த துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் சில தூண்டுகோல்களும், வெகுமதிகளும் மட்டுமே பழக்கங்களை ஏற்படுத்துவதில் வெற்றியடைகின்றன என்று அவர் தெளிவாக விளக்கங்களை அளித்துள்ளார். பெப்சோடன்ட் ஏன் பெருவெற்றி அடைந்தது என்று அறிவியல்பூர்வமாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும் சிலர் மட்டும் எப்படி உடற்பயிற்சியை மேற்கொண்டு அதிக எடையில் இருந்தவர்கள் சரியான எடைக்கு திரும்ப முடிந்தது என்பதற்கும் பதில் கூறியுள்ளார். முடிவாக, ஃபிப்ரிஸின் விற்பனைக்கும் உத்தரவாதம் அளித்து வெற்றிபெற செய்துள்ளார். 


1980 களில் குரங்கின் மூளையை ஆராய்ந்த குழுவின் ஒரு அங்கத்தினராக பேராசிரியர் ஸ்கட்ஸ் இருந்தார். குரங்கினை சில கைப்பிடிகளை இழுக்கச் செய்து, அப்பொழுது அவற்றின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை அவர்கள் ஆராய்ந்தனர். புதிய வேலைகளுக்கு, மூளையின் எந்தப்பகுதி காரணகர்த்தா ஆகிறது என்று கண்டுபிடிப்பதே அவர்கள் திட்டமாக இருந்தது.


பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, வெகுமதிகளும், தூண்டுகோள்களும் எப்படி வேலை செய்கின்றன, மூளையில் எந்தவிதத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று ஸ்கட்ஸ் குழுவினர் ஆராய்ந்தனர். எலிகளின் மூளையில் பொருத்தப்பட்ட உணர்வு கருவிகளைப் போலவே இங்கே குரங்கின் மூளையிலும் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. 

ஜூலியோ என்ற ஒரு குரங்குக்கு பெர்ரிஜூஸ் மிகவும் பிடிக்கும். அந்த குரங்கு, ஒரு கணிணியின் முன் நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டது. கணிணியில் வண்ண வண்ண வடிவங்கள், குறிப்பிட்ட இடைவேளைக்கு தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது. கணிணியின் முன் ஒரு கைப்பிடி இருந்தது. ஆரம்பத்தில் குரங்கு கணிணியை கண்டுகொள்ளவில்லை. ஒருமுறை வடிவம் தோன்றியபொழுது, குரங்கு கைப்பிடியைத் தொட்டது. அப்பொழுது மேலிருந்து பெர்ரிஜூஸ் குரங்குக்கு கிடைத்தது. மீண்டும் கணிணியில் வடிவம் தோன்றியபொழுது குரங்கு மீண்டும் கைப்பிடியைத் தொட்டது. அப்பொழுதும் அதற்கு பெர்ரிஜூஸ் மேலிருந்து கிடைத்தது. ஆரம்பத்தில் கணிணியின்மீது அக்கறை இல்லாமல் இருந்த குரங்கு, பெர்ரிஜூஸ் கிடைப்பது தெரிந்ததும், கணிணி மானிட்டரை விடாமல் பார்க்க ஆரம்பித்தது. வடிவம் கணிணியில் தோன்றும்பொழுதெல்லாம் கைப்பிடியைப் பிடித்தால் ஜூஸ் கிடைக்குமென்பதை அது நன்கு புரிந்துகொண்டது. ஆர்வத்துடன் மானிட்டரையே அது உற்று நோக்கியவண்ணம் இருந்தது. வடிவம் தோன்றினால் மறவாமல் கைப்பிடியை பிடித்தது.


-தொடரும். 




மழை பொழிவதற்கு இன்னுமொரு காரணம் :