பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, April 24, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 1


ஒரு செயல் பழக்கமாக எப்படி மாறுகிறது?

1993-ஆம் ஆண்டு இறுதியில், சாண்டியாகோவில் உள்ள ஆய்வகத்தை நோக்கி தன்னுடைய முன்பதிவின்படி மருத்துவர்களை சந்திக்க அவர் நடந்துகொண்டிருந்தார். பழக்கங்களை பற்றிய, இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளால் எழுதப்பட்ட கொள்கைகள், தம்மால் மாற்றியமைக்கப்பட போகிறது என்பது அவருக்குத் தெரியாது. அந்த முதியவர் நன்றாக உடையணிந்து, ஆஜானுபாகுவாக ஆறடி உயரத்துக்குமேல் இருந்தார். அவருடைய அடர்த்தியான நரைத்த தலைமுடிகள், பள்ளிப்படிப்பு பொன்விழாவுக்காகக் கூடும் அனைவரும் பொறாமைபடத்தக்க வகையில் இருந்தது. மூட்டு வலியினால் அவதிப்பட்டதால், மனைவியின் கையைப் பிடித்தபடி  தாங்கித்தாங்கி பொறுமையாக ஆய்வகத்தின் நடைபாதையில் வந்துகொண்டிருந்தார். அவர் நடந்ததைப் பார்த்தால், அடுத்த காலடி, தன்னை எங்கு கொண்டு செல்லுமோ என்று தயங்கியபடியே வருவதைப்போல் தோன்றியது.

கிட்டத்தட்ட ஒருவருடத்துக்குமுன் யூஜின் பாலி (Eugine Paulie), மருத்துவகோப்பின்படி  E.P  என்றழைக்கப்படுபவர், தனது வீட்டில் இரவு உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரது மனைவி, அவரிடம் மைக்கேல் வரப்போவதாகக் கூறினார்.
“யார் மைக்கேல்?” யூஜின் கேட்டார்.
“உங்களுடைய மகன்.” மனைவி பெவர்லி தொடர்ந்தார். “நாம் வளர்த்த குழந்தை.”
முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் “யார் அது?” யூஜின் மீண்டும் கேள்வியை எழுப்பினார்.

மறுநாள் யூஜினுக்கு வயிற்றுவலியும், வாந்தியும் ஏற்பட்டது. 24 மணிநேரத்தில் நீர்ச்சத்துக்களை இழந்த நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் யூஜின் சேர்க்கப்பட்டார். உடல் வெப்பம் 40 டிகிரி செல்ஷியஸைத் தாண்டியது. மருத்துவமனையிலிருந்த நர்ஸ் அவருடைய கையில், ஸலைனுக்கு குழாயைப் பொருத்த முயன்றபோது, யூஜின் கலவரப்பட்டு குழப்பத்தில் அவற்றைத் தூக்கிவீசிவிட்டார். மயக்கமருந்து கொடுத்தே அவரை கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. அதன்பிறகு ஒரு நீண்ட ஊசியின் உதவியினால் தண்டுவடத்தின்வழியாக மூளைக்குச் செல்லும் “செரிபுரோ ஸ்பைனல்” எனப்படும் திரவத்தில் சிலசொட்டுகளை மருத்துவர்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர்.

அந்த திரவம், தண்டுவடத்தையும் மூளையையும் தொற்றுக் கிருமிகளிலிருந்தும்
காயங்களிலிருந்தும் காப்பதற்காக இயற்கையில் அமைந்திருக்கிறது. திரவத்தை ஆராய்ந்த மருத்துவர்கள் பிரச்சனை இருப்பதை, உடனடியாகக் கண்டுபிடித்துவிட்டனர். உடல்நலம் நன்றாக இருப்பவர்களுக்கு அந்த திரவம் தெளிவாகவும், சீராகவும், சுலபமாக ஓடக்கூடிய தன்மையையும் கொண்டிருக்கும். ஆனால் யூஜினிடமிருந்து பெறப்பட்ட திரவம் தெளிவில்லாமல் கலங்கலான கலவையாக சிரமப்பட்டு நகர்ந்தது. நுண்நோக்கியில் நுண்துகள்களின் கலவைபோல அவை காட்சியளித்தன. ஆய்வக முடிவுகள் யூஜின் ஒப்பீட்டளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத, மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒருவகை வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிவித்தது. அந்த வைரஸ் பொதுவாக தோலில் கொப்பளங்களை ஏற்படுத்தும். உடலில் வெப்பநிலையையும் அதிகரிக்கும். அரிதாக சிலசமயங்களில் மூளைக்குள் ஊடுருவி, மூளையின் நுட்பமான இடங்களை அழித்துவிடும். மூளையில் நமது சிந்தனைகள், கனவுகள் உருவாகும் இடம், சிலரின் கருத்துப்படி நமது ஆன்மா உறையும் இடத்தைப் பாதித்துவிடும்.

யூஜினுடைய மருத்துவர்கள், இதுவரை பாதிக்கப்பட்டதை சரிசெய்ய முடியாதென்றும், அந்த வைரஸ் இனிமேலும் பரவாமல் தடுக்க முயல்வதாகவும் யூஜினுடைய மனைவி பெவர்லியிடம் கூறினர். அதிகமான அளவுக்கு ஆன்டிவைரஸ் மருந்துகள் யூஜினுக்குச் செலுத்தப்பட்டது. யூஜின் பத்து நாட்கள் கோமா நிலையிலிருந்து மரணிக்கும் தருவாய்வரை சென்றுவிட்டார். சிறிதுசிறிதாக ஆண்டிவைரஸ் வேலை செய்ய ஆரம்பித்து வைரஸ் மறைய ஆரம்பித்தது. இறுதியில் கோமாவிலிருந்து யூஜின் மீண்டபோது அவரால் உணவு விழுங்கக்கூட மறந்துவிட்ட நிலை ஏற்பட்டது. அவரால் வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியங்களை அமைக்க முடியவில்லை. சில சமயங்களில் மூச்சுவிடக்கூட மறந்துவிட்டதுபோல் மூச்சுவிடத் திணறுவார். எப்படியோ உயிருடன் மீண்டுவிட்டார்.

ஒருவழியாக, ஆய்வுகளுக்குத் தேவையான அளவு யூஜின் உடல் நலம் பெற்றுவிட்டார். யூஜின் உதவியுடன் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மூளை, ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டாலும் யூஜினுடைய நரம்புமண்டலமும், உடலும் அதிக அளவுக்கு பாதிக்கப்படாமல் இருந்தது மருத்துவர்களை வியப்படையச் செய்தது. உடலின் பாகங்களை அவரால் விரும்பியவாறு அசைக்க முடிந்தது. வெளிச்சம், சத்தம் போன்றவைகளை அவரால் உணரமுடிந்தது. அவரது மூளையை ஸ்கேன் செய்தபோது மூளையின் மையத்தில் அச்சத்தக்க அளவு நிழல்களாக தென்பட்டது. வைரஸ் அவரது மண்டையோடு மற்றும் தண்டுவடம் சந்திக்கும் இடத்தில் இருந்த திசுக்களின் கூட்டத்தை முற்றிலும் அழித்துவிட்டது. ஓரு மருத்துவர் யூஜினுடைய மனைவியிடம் “நீங்கள் பழகிய, பழைய கணவராக இவர் இருக்கப்போவதில்லை. உங்கள் கணவர் மறைந்துவிட்டார் என்று எண்ணிப் பழகுவதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

சிலநாட்களில் யூஜின் மருத்துவமனையில் வேறு ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்றதும் ஒருவாரத்தில் பிரச்சனையில்லாமல் உணவு விழுங்கும் திறனை அவர் மீண்டும் பெற்றார். இரண்டு மூன்று வாரங்களில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார். அவரால் உணவுகளிலும் உப்பு, காரம் போன்ற சுவைகளைப் பகுத்தறிய முடிந்தது. தொலைகாட்சியையும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்தார். தொலைக்காட்சி சீரியல்கள் ஒரே மாதிரியாக இருந்து போரடிப்பதாக சொல்லவும் ஆரம்பித்தார். வந்த வாரங்களில் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவதற்குள், மருத்துவமனையின் வராண்டாவில் தானாகவே நடக்கவும் முற்பட்டார். கேட்காமலேயே, அங்கு வேலை செய்யும் நர்ஸ்களுக்கு வார இறுதியில், என்னென்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறும் அளவுக்கு அவரிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

“நான் இதுவரை, என் அனுபவத்தில் வைரஸ் பாதிப்புக்குப் பின், இந்த அளவு ஒருவர் முன்னேற்றம் அடைந்ததைப் பார்த்ததில்லை. உங்களுடைய நம்பிக்கை நான் அதிகமாக்க விரும்பவில்லை. இருந்தாலும் யூஜினுடைய மீட்சி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.” ஒரு டாக்டர் யூஜினுடைய மனைவி பெவர்லியிடம் கூறினார்.

பெவர்லி பயந்துகொண்டே இருந்தார். மறுவாழ்வு மருத்துவமனையில், நோய் தன்னுடைய கணவரை முற்றிலுமாக வேறொரு மனிதரைப்போல் மாற்றியிருப்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இன்று என்ன கிழமை என்றுகூட யூஜினினால் நினைவில் நிறுத்த முடியவில்லை. டாக்டர்கள், நர்ஸ்களின் பெயர்களை எத்தனை முறை கேட்டாலும் யூஜினினால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் தங்களை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. “ஏன் அவர்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்கிறார்கள்?” என்று ஒருநாள் யூஜின் பெவர்லியிடம் கேட்டார். அந்த அளவுக்கு அவருடைய நிலைமை இருந்தது.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும் அவருடைய பிரச்சனை இன்னும் பூதாகரமாகியது. யூஜின் அவருடைய நண்பர்கள் யாவரையும் மறந்துவிட்டார். உரையாடல்களை உணர்ந்துகொள்ளவோ, பங்கேற்கவோ மிகவும் சிரமப்பட்டார். சில நாட்களில், காலையில் எழுந்தவுடன், சமையலறைக்குச் சென்று தனக்கு ரொட்டி, முட்டை மற்றும் பன்றி இறைச்சி இணைத்து சான்ட்விட்ச் செய்துகொள்வார். சாப்பிட்டுவிட்டு மீண்டும் படுக்கைக்குச் சென்று ரேடியோவைக் கேட்க ஆரம்பித்துவிடுவார். நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சமையலறைக்குச் சென்று சான்ட்விட்ச் செய்து சாப்பிட்டுவிட்டு பழையபடியே படுக்கைக்குச் சென்று ரேடியோ கேட்பார். இந்த சுழற்சியை, மீண்டும் நாற்பது அல்லது ஐம்பது நிமிடங்களுக்குப் பிறகு தொடர ஆரம்பிப்பார்.

அதிர்ச்சியடைந்த பெவர்லி, மறதி சம்பந்தமான கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவநிபுணர்களின் உதவியை நாடினார். யூஜினுடைய கையைப் பிடித்து பெவர்லி, பல்கலைகழகத்தின் மைதானம் வழியே, மெதுவாக நடந்து கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு சிறிய ஆய்வக அறையை அடைந்தார். அங்கு கணிணியில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு இளம்பெண்ணீடம் யூஜின் உரையாட ஆரம்பித்தார். “அதிக வருடங்கள் எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருந்ததால் சொல்கிறேன். இந்தத் துறையின் வளர்ச்சி என்னை அசரவைக்கிறது. நான் இளவயதில் இருந்தபொழுது இதெல்லாம் ஒரு ஆறடி உயரத்துக்கு இருக்கும். இதனை வைப்பதற்கு ஒரு முழு அறையே தேவைப்படும்.” அந்தப்பெண் உபயோகித்துக்கொண்டிருந்த ஒரு கணினியைக் காண்பித்துக் கூறிக்கொண்டிருந்தார். “நம்பவே முடியவில்லை”. தொடர்ந்தார்.

ஒரு ஆராய்ச்சியாளர் அறையில் நுழைந்தார். தன்னை யூஜினிடம் அறிமுகப்படுத்திக்கொண்டபின் யூஜினுக்கு என்ன வயதாகிறது என்று வினவினார். “எனக்குக் கிட்டத்தட்ட 59 அல்லது 60 வயதிருக்கலாம்.” உண்மையில் யூஜினுக்கு 70 வயதாகிறது. ஆராய்ச்சியாளர் யூஜினுடைய பதில்களைக் கணினியில் பதிவு செய்ய ஆரம்பித்தார். யூஜின் மீண்டும் சொன்னவைகளையே திரும்பவும் சொல்ல ஆரம்பித்தார். “ நான் இளவயதில் இருந்தபொழுது . . . . . தேவைப்படும்.”

அந்த ஆராய்ச்சியாளருக்கு 52 வயதாகிறது. பெயர் டாக்டர். லாரி ஸ்கொயர். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக ஞாபகமறதி சம்பந்தமாக ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் ஒரு பேராசிரியர். அவர் முக்கியமாக மூளை எப்படி நிகழ்ச்சிகளை நினைவில் நிறுத்தி வைக்கிறது என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். யூஜினுடன் அவர் இப்பொழுது செய்யும் ஆராய்ச்சி அவருக்கு ஒரு புதிய விளக்கத்தை அளிக்கப்போகிறது. அவருக்கு மட்டுமல்ல. அவரைப்போல ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்களுக்கும் பழக்கங்கள் சம்பந்தமான புரிந்துணர்வை மாற்றியமைக்கப்போகிறது. தன்னுடைய வயதைக்கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத ஒருவர், எப்படி சிக்கலான பழக்கங்களை தொடர்ந்து செய்யமுடிகிறது என்று டாக்டர்.ஸ்கொயருடைய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தப்போகின்றன. நான் அனைவருமே யூஜினைப்போல, நம்முடைய பழக்கங்களுக்கு, மூளைநரம்புகளின் செயல்முறைகளையே நம்பியிருக்கிறோம். ஸ்கொயர் மற்றும் ஏனைய நிபுணர்களின் ஆராய்ச்சிகள், நாம் தினசரி செய்யும் வழக்கமான செயல்கள், நன்கு சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகளாலானவைகள் போன்று தோன்றினாலும், உண்மையில் அந்த முடிவுகள் நம்முடைய மூளை நரம்புகளின் செயல்பாட்டால் தன்னிச்சையாக இயங்கும், நமது எண்ணங்களின் தாக்கங்களே ஆகும். அநேகர் இதனை அடையாளம் கண்டுகொள்வதும் இல்லை. உணர்வதும் கிடையாது.

டாக்டர் ஸ்கொயர், யூஜினை ஆராய்ச்சியின் காரணமாக சந்திப்பதற்கு முன்பே, யூஜினுடைய மூளையின் ஸ்கேன்களை வாரக்கணக்கில் நன்கு புலனாய்வு செய்திருக்கிறார். மூளையில், தலையின் மையப்பகுதியில் ஐந்து கன செ.மீ அளவுக்குள் மட்டுமே பழுதடைந்துள்ளதாக அந்த ஸ்கேன் தென்பட்டது. பொதுவாக மனிதனுடைய பழைய நினைவுகளுக்கும், சில உணர்வுகளுக்கும் காரணமான, உள்நோக்கிய நெற்றிப்பொட்டில் மடிப்புகள் பகுதியை அந்த வைரஸ் முற்றிலுமாக அழித்திருந்ததும் ஸ்கேனில் தெரிந்தது. பொதுவாக ஒரு அறுவைசிகிச்சை நிபுணரின் துல்லியத்துடன், வேறுபாடின்றி அனைத்து திசுக்களையும் அந்த வைரஸ் அழித்துவிடும். அதனால் ஸ்கொயருக்கு யூஜினுடைய மூளையில் கண்ட பாதிப்பு எந்த வியப்பையும் அளிக்கவில்லை. இருப்பினும் முன்பு ஒருமுறை பார்த்த ஒரு நோயாளியின் மூளையில், எப்பொழுதும் காணும் வைரஸ்ஸால் பாதிப்படைந்த மூளையைப்போல், யூஜினுடைய மூளையும் ஒன்றுபோல காணப்பட்டதே ஸ்கொயருக்கு வியப்பளித்தது.

- தொடரும்  


கண்டு மகிழ ஒரு காணொளி:

https://www.youtube.com/watch?v=1sXENI8tpJE

மேலே கண்ட காணொளியைப் போன்று ஒரு பேசும் கிளியின் கதையை இந்தத் திரைப்படத்தில் காணுங்கள். குழந்தைகள் இதனை விரும்பிப் பார்ப்பார்கள். அருமையான திரைப்படம்.

http://putlocker.bz/watch-paulie-online-free-putlocker.html

Thursday, April 17, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - முன்னுரை 2/2


காலையில் கண்விழித்த உடன் என்ன செய்வோம்? காலைக்கடன்களை முடிப்போமா அல்லது மெயில் பார்ப்போமா, காபி குடித்துவிட்டு பல் துலக்குவோமா அல்லது பல் துலக்கிவிட்டு காபி குடிப்போமா? ஷூ லேஸ் கட்டும்பொழுது இடதுகால் முதலிலா அல்லது வலது கால் முதலிலா? அலுவலகத்தில் என்னென்ன செய்வோம்? வேலை முடிந்து வீடு திரும்பியதும் என்னென்ன செய்வோம்?


“நமது வாழ்வு முழுமையும் செய்யும் எந்த ஒரு செயலும் ஒரு முழுமையான வடிவு இருக்கும்வரை சிறுசிறு துண்டுகளாக, ஆனால் அதிகமாக பழக்கங்களால் ஆக்கப் பட்டிருக்கிறது.” என்று 1892-ல் வில்லியம் ஜேம்ஸ் கூறினார். தினசரி நாம் செய்யும் எந்த ஒரு செயலும், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவுகளாகத் தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அவை பழக்கங்களால் உருவான செயல்கள். நமது சிறுசிறு செய்கைகளுக்கும் தனியான அர்த்தம் இல்லாததுபோல் தோன்றலாம். ஆனால் காலப்போக்கில் நாம் எந்த உணவு உண்கிறோம், குழந்தைகளுடன் எப்படி பழகுகிறோம், எப்படி செலவழிக்கிறோம், உடல்நலனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம், நமது சிந்தனை ஓட்டத்தையும், வேலை செய்யும் விதத்தையும் எப்படி அமைத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே ஒருவரது உடல்நிலை, ஆக்கத்திறன் வருமான நிலைப்பாடு, மகிழ்ச்சி அமைகிறது. 2006-ல் டுயூக் பல்கலைகழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையின்படி, 40 சதவிகிதத்திற்கு மேலாக மக்களுடைய தினசரி இயக்கங்களும், செயல்களும் பழக்கவழக்கங்களினால்தான் வருகின்றன; முடிவெடுப்பதால் வருவதில்லை.


வில்லியம் ஜேம்ஸ் முதல், அரிஸ்டாட்டில் இருந்து ஓபரா வரை மனிதனுடைய பழக்கவழக்கங்கள் ஏன் தொடர்கின்றன என்பதனை அறிய தங்களுடைய வாழ்நாளையே கழித்திருக்கின்றனர். ஆனால் கடந்த இருபது வருடங்களாகத்தான் விஞ்ஞானிகளும், விளம்பரத்துறையினரும் பழக்கவழக்கங்கள் எப்படி ஏற்படுகின்றன, முக்கியமாக எப்படி மாறுகின்றன என்பதை அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.


இந்த நூல் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வில், பழக்கங்கள் எப்படி உருவாகின்றன என்பதைப் பற்றி ஆராய்கிறது. நமது மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பழக்கங்கள் எப்படி உருவாகிறது, பழைய பழக்கங்களை விட்டொழித்து புதிய பழக்கங்களை எப்படி உருவாக்குகிறது என்றும், அதற்கான வழிமுறைகளையும் விளக்குகிறது. உதாரணமாக பிரஷ் உதவியுடன் பல்துலக்குவது என்னும் காரியத்தை ஒரு விளம்பரதாரர் எப்படி ஒரு நாடு முழுவதற்கும் எடுத்துச் சென்று செயல்பட வைத்தார். பிராக்டர் அண்டு கேம்பல் கம்பெனி “Febreze” என்ற வாசனை ஸ்பேரேயினை, உபயோகிப்பாளரின் பழக்கத்தில் மாற்றங்களை உண்டு பண்ணி ஒரு பில்லியன் டாலர் வியாபாரமாக மாற்றினர் என்றும் காணலாம் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் என்ற தொண்டு நிறுவனம் மதுவுக்கு அடிமையானவர்களின் பழக்கத்தை எப்படி மாற்ற உதவுகிறது என்றும், டோனி என்ற பயிற்றுவிப்பாளர் கடைசி நிலையில் இருந்த அமெரிக்க ஃபுட்பால் அணியினை, பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, எப்படி தொடர்ந்து வெற்றிகளை பெறச்செய்தார் என்றும் காணலாம்.


நூலின் இரண்டாம் பகுதி வெற்றி பெறும் நிறுவனங்களில் பழக்கங்களை ஆராய்கிறது. பால் ஆஃப் நெயில் – என்ற நிறுவன பிரதிநிதி, டிரஸரி செக்கரட்டரி ஆவதற்கு முன், படு வீழ்ச்சியில் இருந்த அலுமினியக் கம்பெனி ஒன்றை, எப்படி டௌ ஜோன்ஸ்-ல் மிகச்சிறந்த பங்காக மாற்றினார் என்றும் காணலாம். இந்த பகுதி, அந்த கம்பெனியின் பழக்கத்தை மாற்றி, எப்படி அவர் அந்த வெற்றியை அடைந்தார் என்று ஆராய்கிறது. ஸ்டார் பக்ஸ் நிறுவனம், பள்ளி இறுதியைக்கூட முடிக்காத ஒருவரிடம், பழக்க மாற்றங்களை ஏற்படுத்தி எப்படி, அவரை மிகச்சிறந்த மேலாளர் நிலைக்கு உயர்த்தியது என்று தெரியப்படுத்துகிறது. சரியாக நிர்ணயிக்கப்பட்ட பழக்க வழிமுறைகள் இல்லாத காரணத்தால் ஒரு மருத்துவமனையில், மிகவும் திறமை வாய்ந்த மருத்துவர்களும்கூட, சொல்ல முடியாத அளவுக்கு எப்படி தவறுகளை இழைக்க நேரிடுகிறது என்று விளக்குகிறது.


மூன்றாவது பகுதி சமூகத்தின் பழக்க முறைகளை ஆராய்கிறது. மார்ட்டீன் லூதர் கிங், மக்களோடு இணைந்துவிட்ட சமூக பழக்கங்களை மாற்றியதன் மூலம் எப்படி பொதுஉரிமை இயக்கத்தில் வென்றார் என்று விளக்குகிறது. அதே முறைகளை உபயோகித்து, ரிக் வாரன் என்ற இளம் பாதிரியார் நாட்டின் மிகப்பெரிய சர்ச் ஒன்றினை கலிஃபோர்னியாவில் எப்படி உருவாக்கினார் என்றும் விளக்கமளிக்கிறது. இறுதியாக தன்னுடைய பழக்கங்களினால்தான் கொலை செய்ய நேர்ந்தது என்று நம்பும்படியாக விளக்கமளித்த பிரிட்டனைச் சேர்ந்த கொலைக் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுமா போன்ற, மனதை உறுத்தும் தார்மீகக் கேள்விகளையும் ஆராய்கிறது.


பழக்கங்கள் எப்படி உருவாகின்றன என்பதனைப் புரிந்து கொண்டால், பழக்கங்களை நாம் விரும்பிய வண்ணம் மாற்றி அமைக்க முடியும் என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு அத்தியாயமும் அமைக்கப் பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி ஆய்வுகள், முன்னூறுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், நிறுவன நிர்வாகிகளின் பேட்டிகள், மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் முடிவுகளைக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு வரையறைக்குள் திட்டவட்டமாக பழக்கம் என்று நிர்ணயிக்கப்பட்ட பழக்கங்களை இந்நூல் முன்னிருத்தி ஆராய்ச்சி செய்கிறது. ஒரு சமயத்தில் நாம் விரும்பி மேற்கொண்ட முடிவுகள், பழக்கங்களாக மாறிவிடுகின்றன. அத்தகைய பழக்கங்களை இந்நூல் ஆராய்கிறது. அதாவது எவ்வளவு சாப்பிட வேண்டும், வேலைக்குச் சென்றவுடன் முதல் காரியமாக என்ன செய்ய வேண்டும், உடற்பயிற்சிக்கு முன் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் நாம்தான் முடிவெடுக்கிறோம். ஆனால் காலஓட்டத்தில் நம்மை அறியாமலேயே அந்த முடிவுகள் நம் பழக்கங்களாகிவிடுகின்றன. இயற்கையாகவே நமது மூளையின் நரம்பு மண்டலத்தில் அவை பதியப்பட்டு விடுகின்றன. எப்படி அவை உருவாகி பதியப்படுகின்றன என்று புரிந்து கொண்டால், நாம் விரும்பிய வண்ணம் புதிய பழக்கங்களை பழைய பழக்கங்களின் கட்டமைப்பைவிட பலமாக பதிய வைத்து, வேண்டப்படாத பழக்கங்களை மாற்ற முடியும்.


எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டராக ஈராக்கில் பாக்தாத் நகருக்கு சென்றிருந்த பொழுதுதான் எனக்கு பழக்கங்களைப் பற்றிய அறிவியலில் ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்க இராணுவத்துறையில்தான் உலக வரலாற்றில் பழக்கங்களுக்கான மிகப் பெரிய ஆராய்ச்சிகள் நடைபெறுவதை பாக்தாத்தில் இருந்தபொழுது நேரிடையக உணர்ந்தேன். இராணுவத்தில் எப்படி சிந்திக்க வேண்டும், எப்படி சுடவேண்டும், அவசர நேரங்களில் எப்படி அடுத்தவர்களுடன் உரையாடுவது போன்ற அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. யுத்த களத்தில் இடப்படும் ஒவ்வொரு கட்டளைக்கும், இராணுவத்தினர் ஒரு தானியங்கி இயந்திரம்போல செயல்படுகிறார்கள். திட்டமிடும் முறை, தளங்களைக் கட்டுதல், தாக்குதல்களை சமாளிப்பது போன்ற அனைத்து விஷயங்களுக்கும், இராணுவமானது பலமுறை ஒத்திகை செய்யப்பட்ட நடவடிக்கைகளேயே நம்பியிருக்கிறது. யுத்தத்தின் ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்கள் பெருகிப்பரவியதால் இராணுவத்தினர்களிடம் மரணம் அதிகமாக சம்பவித்தது. இராணுவத்தின் மேலதிகாரிகள், எத்தகைய பழக்கங்களை இராணுவத்தினருக்கும், ஈராக்கியர்களுக்கும் உருவாக்குவதன் மூலம் இராணுவ வீரர்களின் மரணத்தை தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம் என்றும் ஈராக்கில் நீண்டகால அமைதியை தருவிப்பதற்க்கும் ஆராய முற்பட்டனர்.


நான் ஈராக்கில் இரண்டு மாதங்களாக பணியாற்றிக்கொண்டிருந்தபோது, குஃபா என்ற இடத்தில் (பாக்தாத்தில் இருந்து குஃபா கிட்டத்தட்ட 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது) ஒரு இராணுவ அதிகாரி, இராணுவ வீரர்களிடம் புதிய பழக்கங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அது முன்னேற்பாடுகள் ஏதுமின்றி தயார் செய்யப்பட்ட ஒரு முயற்சி என்றும் அறிந்தேன். சமீபகாலங்களில் நிகழ்ந்த கலவரங்களின் வீடியோக்களை ஆராய்ந்து, அதிலிருந்து கிடைக்கப்பட்ட தகவல்களின் மூலம், அந்த கலவரங்களில் ஒரு திட்டவட்டமான அணுகுமுறை, பழக்கங்கள் இருப்பதை அந்த அதிகாரி கண்டறிந்தார். திறந்த வெளிகளில் மக்கள் அதிகமாக கூடுகின்றர். பலமணி நேரங்களில் அந்த மக்கள் கூட்டம் மிகவும் அதிக அளவை எட்டுகிறது. பார்வையாளர்களும், உணவு விற்பனை செய்பவர்களும் அந்த கூட்டத்தில் சேர்ந்து கொள்கின்றனர். கூட்டத்தினை நோக்கி யாராவது ஒருவர் ஒரு கல்லையோ, ஒரு பாட்டிலையோ தூக்கி எறிவதில் கலவரம் தொடங்குகிறது. சில நிமிடங்களில் கலவரம் உச்சத்தை அடைகிறது.


அந்த இராணுவ அதிகாரி, குஃபா என்ற தொகுதி ஆளுனரிடம் ஒரு வித்தியாசமான வேண்டுகோளை முன்வைத்தார். நடமாடும் உணவகங்களை கூட்டங்கள் கூடும் பகுதியில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்குமாறு வேண்டினார். ஆளுனரும் அதற்கு ஒத்துக்கொண்டார். சில வாரங்களுக்குப் பிறகு குஃபாவில் ஒரு பள்ளிவாசலுக்கு முன் ஒரு சிறிய கூட்டம் கூடியது. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தின் அளவு கணிசமாக அதிகரித்தது. ஈராக்கிய போலீசார் பிரச்சனை வருவதற்கான சாத்தியத்தை உணர்ந்து அமெரிக்க இராணுவ உதவியை நாடினர். கூட்டத்தினர் கோபத்துடன் கோஷமிடுவதும் அதிகரித்தது. பொழுதுசாயும் நேரத்தில், கூட்டத்தினர் பசியால் அலைமோதி உணவகங்களைத் தேடினர். ஆனால் நடமாடும் உணவகங்கள் கண்ணில் தென்படவில்லை. கூட்டம் கலைய ஆரம்பித்துவிட்டது. கோஷமிட்டவர்களின் வெறியும் தணிய ஆரம்பித்துவிட்டது. இரவு எட்டுமணிவாக்கில் முழுக்கூட்டமும் கலைந்துவிட்டது.


நான் குஃபாவிற்குச் சென்றபொழுது அந்த இராணுவ அதிகாரியைச் சந்தித்தேன். பொதுவாக கூட்டத்தின் பழக்கங்களை யாரும் பொருட்படுத்துவதில்லை, என்று அவர் கூறினார். ஆனால் அவர் தன்னுடைய பணிநாள் முழுவதையும், பழக்கங்களை உருவாக்கும் மனோதத்துவத்தில் செலவிட்டதாகக் கூறினார்.


அந்த அதிகாரி இராணுவத்தில் துவக்கத்தில் வேலை பார்த்தபோது தங்களுடைய ஆயுதத்தைத் தயார்ப்படுத்தும் பழக்கங்கள், போர்முனையில் தூங்கும் பழக்கங்கள், போரின்போது குழப்பத்திலும் கவனம் சிதறாமல் இருக்கும் பழக்கங்கள், வேலை பளு அதிகமான நேரத்திலும், முற்றிலும் களைப்படைந்த நேரத்திலும் முடிவெடுக்கும் பழக்கங்கள் போன்றவற்றை ஆராய்ந்ததாகக் கூறினார். செல்வம் சேமிக்கும் பழக்கங்கள், உடற்பயிற்சி பழக்கங்கள் மற்றும் உடனிருப்பவர்களிடம் உரையாடும் பழக்கங்கள் போன்ற பழக்கங்களை உருவாக்கும் முறைகளைப் பற்றிய பயிற்சிகளுக்கு சென்றதாகவும் கூறினார். அவர் பணியில் உயர்பதவியை அடைந்தபோது, அவருக்கு கீழே வேலை செய்யும் அதிகாரிகள் அதிக விஷயங்களுக்கு தன்னிடமே அனுமதி கேட்டதால், சுயமாகவே சரியான முடிவுகளை எடுப்பதற்கு தேவையான பழக்கங்களை உருவாக்கியதாகவும் கூறினார். மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்ய முடியாதவர்களும்கூட ஒரு குழுவாக வேலை செய்வதற்கான உத்திகளை சரியான நடைமுறைகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியுள்ளார் என்றும் தெரிந்து கொண்டேன். இப்பொழுது ஈராக்கில் கூட்டங்களையும், வேறுபட்ட சமூக பழக்கவழக்கங்கள் கொண்டவர்களையும் அதே கொள்கையின் கீழ் பழக்கங்களை மாற்ற முடிவதை செயல்படுத்தியுள்ளார். சமூகம் என்பது நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கொண்ட ஒரு அமைப்பு. அந்த அமைப்பின் பழக்கங்களின் தாக்கங்களைப் பொறுத்து அவர்களிடையே அமைதியையோ கலவரத்தையோ ஏற்படுத்த முடியும். நடமாடும் உணவகங்களை நிறுத்தியதைத் தவிர, பலதரப்பட்ட பழக்க நடைமுறைகளை ஏற்படுத்தி குஃபா மக்களுடைய செயல்பாட்டில் அவர் மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவர் பதவி பொறுப்பை எடுத்துக்கொண்ட பிறகு குஃபாவில் கலவரங்களே ஏற்படவில்லை.


தான் இராணுவத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களில், பழக்கங்களை புரிந்துக்கொள்ளும் திறமை மிகவும் முக்கியமானதொன்றாகும் என்று அந்த அதிகாரி கூறினார். “நான் கற்றுக்கொண்ட அந்த விஷயங்கள் உலகைக் கவனிக்கும் குணத்தையே மாற்றிவிட்டது. நீங்கள் படுத்த உடனே தூங்கி, எழும்போது சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? படுப்பதற்குமுன் செய்யக்கூடிய உங்கள் நடவடிக்கைகளைக் கவனியுங்கள். காலை எழுந்தவுடன் உங்கள் நடவடிக்கைகளையும் கவனியுங்கள். ஓட்டப்பயிற்சியை எளிதாக்க வேண்டுமா? அந்த பழக்கங்களுக்கு, ஒரு தூண்டுதலை ஏற்படுத்துங்கள். நானும் என் மனைவியும் எங்கள் வாழ்க்கை நடைமுறைக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். என்னுடைய அலுவலக நிர்வாகக் கூட்டங்களின்போதும் நான் பழக்கங்களைப் பற்றி உரையாற்றுவேன். குஃபாவில் உணவுக்கடைகளை நிறுத்திவிட்டால் கலவரங்கள் இருக்காது என்று என்னிடம் யாரும் கூறவில்லை. ஆனால், நான் கூட்டத்தின் பழக்கத்தை அறிந்துகொண்டதால் என் வேலை எளிதாகிவிட்டது. நான் ஒவ்வொரு மாற்றங்களையும் ஒரு பழக்கமாக கருதுகிறேன். அப்பொழுது, உங்களிடம் வேலைக்குச் செல்ல ஆயத்தமாக இருப்பதற்கு தேவையான உபகரணங்களை தந்துவிட்டதுபோல் ஆகிவிடும். உங்கள் வேலையும் சுலபமாக இருக்கும்.”


அந்த இராணுவ மேஜர், ஜார்ஜியாவில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதர். விடாமல் புகையிலையை மென்றுகொண்டோ, சூரியகாந்தி விதையை மென்றுகொண்டோ இருந்தார். இராணுவத்தில் சேராமல் இருந்திருந்தால், தான் ஒரு டெலிஃபோன் டெக்னிஷியனாக இருந்திருக்கக்கூடும் என்று கூறினார். அவர் காலகட்டத்தில் பள்ளிமுடித்தவர்கள் சுலபமாக தேடிக்கொள்ளகூடிய வேலை அது. அவர் டெலிஃபோன் டென்னிஷியனாக இருந்திருந்தால், அதிகபட்சம் ஒரு சிறு நிறுவனத்திற்கு ஒரு முதலாளியாக இருந்திருக்கக்கூடும். அது அவருக்கு அதிக வெற்றியை அளித்திருக்காது. தற்பொழுது எண்ணூறு இராணுவ வீரர்கள் அவருடைய கட்டளையின் கீழ் உள்ளனர். 


“என்னைப் போன்ற சாதாரண பட்டிக்காட்டான்கூட இந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தால், யாராலும் இதனைக் கற்று செயல்படுத்தமுடியும். என்னுடைய வீரர்களிடம் எப்பொழுதும் ஒன்றைக் கூறுவேன். அதாவது சரியான பழக்கங்களைக் கடைப்பிடித்தால் உங்களால் சாதிக்க முடியாதது ஒன்றும் கிடையாது.”


நரம்பியல் மற்றும் உளவியல் பழக்கங்களைப் புரிந்து கொண்டு அவை நமது வாழ்க்கையில் எப்படிப் பிணைந்து மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதை அறிந்து கொள்வதில் கடந்த பத்து வருடங்களாக மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் தாக்கங்கள் தனிமனித வாழ்விலும், சமூகங்களிலும், நிர்வாகங்களிலும் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதனை நாம் தெரிந்துகொண்டது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக்கூட பார்க்காத ஒன்றாகும். பழக்கங்கள் எப்படி உருவாகின்றன, எப்படி மாற்றங்கள் அடைகின்றன, அந்த மாற்றங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் விஷயங்கள் அனைத்தையும் நாம் இப்பொழுது அறிவோம். பழக்கத்தை சிறுசிறு பண்புகளாக மாற்றி நம் தேவைக்கேற்றப்படி வளைக்கவும் முடியும். அதனால் மனிதர்களை அளவோடு உண்ண வைக்கவும், உடற்பயிற்சியில் ஈடுபட வைக்கவும், தேவைக்கேற்ற திறமையுடன் வேலைசெய்ய வைக்கவும், மொத்தத்தில் நலமாக வாழவைக்க முடியும். பழக்கங்களை மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமோ, சீக்கிரத்தில் முடியக்கூடிய காரியமோ அல்ல. ஆனால் நிச்சயமாக பழக்கங்களை மாற்றியமைக்க முடியும். இப்பொழுது மனிதகுலம் பழக்கங்களைப்பற்றிய புரிதலை அடைந்துவிட்டது என்று கூறலாம்.


- தொடரும்

துணுக்கு:

பறக்கும் மீன்களை இந்தக் காணொளியில் காணலாம். தன்னுடைய எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இந்த மீன்கள் நீரிலிருந்து மூன்றடி உயரத்துக்கு, கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் வரை பறப்பதுபோல் காற்றில் மிதந்து செல்கின்றன. இவற்றால் நீரைவிட்டு வெளியே சுவாசிக்க முடியாது.


http://australianmuseum.net.au/BlogPost/Science/BBC-Life-Flyingfish-footage

Thursday, April 10, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - முன்னுரை

“The Power of Habit_ Why We Do What We Do”   இது  Charles Duhigg” –  என்பவரால் எழுதப்பட்டு, 2012-ல் வெளிவந்த நூல். பழக்கங்கள் எப்படி தோன்றுகின்றன, எப்படி அவைகளை தனி மனிதனுடைய முன்னேற்றத்துக்கும், சமுதாய முன்னேற்றத்துக்கும் நமக்குத் தேவையானபடி வளைத்து உபயோகித்துக்கொள்வது என்று விளக்கும் நூல். ஒவ்வொருவாரமும் சிறிது சிறிதாக மொழிபெயர்த்து எழுதலாம் என்று திட்டமிட்டுள்ளேன். என்னால் முடிந்தவரை மொழி பெயர்க்க முயற்சி செய்கிறேன். இனி புத்தகத்துக்குச் செல்வோம்.


முன்னுரை

அந்த பெண்மணி அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பங்கேற்பாளர். லிஸா ஆலன், அவளுடைய கோப்பின் விவரப்படி பதினாறு வயதில் புகைபிடிக்க ஆரம்பித்திருக்கிறாள். உடல்பருமன் பிரச்சனையினால் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டிருக்கிறாள். தற்போதைய வயது முப்பத்தி நான்கு. கடன் வசூலிக்கும் கம்பெனிகள், அவளுக்கு இருபது வயதிருக்கும்பொழுது, ஆயிரம் டாலர்களுக்காக விடாமல் அவளைத் துரத்தியிருக்கின்றன. வேலைக்கு ஆள் எடுக்கும் கம்பெனிகளின் கணக்குப்படி, அவள் அதிகபட்சமாக ஒரு வருடம்கூட ஒரு கம்பெனியில் நிரந்திரமாக தாக்குப் பிடித்ததில்லை.

ஆனால், ஆராய்ச்சியாளர்களின் முன்னால் அமர்ந்திருக்கும் லிஸா, மிகவும் துடிப்பு மிக்கவளாகவும், சீரான உடலுடன், ஒரு ஓட்டவீராங்கனைக்குரிய கால்களுடனும் தென்பட்டாள். முப்பத்தி நான்கு வயதாக இருந்தாலும், பார்வைக்கு ஒரு பத்து வயது குறைவாகத்தான் அவளை மதிப்பிட முடியும். அறையிலிருந்த அனைவருக்கும் ஒரு உடற்பயிற்சி போட்டி வைத்தால், கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடமுடியும்; லிஸாதான் வெல்வாள் என்று. அவளுடைய இன்றைய ரெக்காடுகளின்படி லிஸாவிற்கு கடன் எதுவும் கிடையாது. குடிக்கும் பழக்கம் முற்றிலுமாகக் கிடையாது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக, ஒரு வடிவமைக்கும் நிறுவனத்தில் தொடர்ந்து வேலைசெய்துகொண்டிருக்கிறாள்.

“நீ கடைசியாக சிகரெட்டைத் தொட்டது எப்பொழுது?” மெர்ரிலேண்ட்ஸ் ஆய்வுக்கூடத்தில் ஒவ்வொரு முறையும் லிஸாவிடம் கேட்கப்படும் கேள்விகள் தொடர்ந்தன. ஆய்வு நடத்தும் மருத்துவர் கேள்விகளைத் தொடர்ந்தார்.

“நான்கு வருடங்களாகின்றன. நான் மாரத்தானில் பங்கேற்க விரும்பினேன். அதற்காக அறுபது பவுண்டு எடை குறைந்திருக்கிறேன்.” தற்சமயம் லிஸா ஒரு மாஸ்டர் டிகிரி படிப்பதற்காக பல்கலைகழகத்தில் சேர்ந்திருக்கிறாள். ஒரு வீடுகூட வாங்கிவிட்டாள். அவளது வாழ்க்கை தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.

அந்த அறையில் மூளைமருத்துவ நிபுணர், மனோதத்துவ நிபுணர், மரபணு நிபுணர் மற்றும் சமூகவியலாளர்கள் அனைவரும் இருந்தனர். அமெரிக்க தேசிய சுகாதாரத் துறையின் நிதியுதவியுடன், கடந்த மூன்று வருடங்களாக, தீய பழக்க வழக்கங்களிலிருந்து மீண்டவர்களைப் பற்றிய ஆய்வினை அந்த நிபுணர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். புகைப்பழக்கம், தன்னிச்சையாக கட்டுப்பாடின்றி அதிகம் உண்பவர்கள், குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள், பொருட்களை வாங்குவதற்கு அடிமையானவர்கள் போன்றவர்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு டஜனுக்கு மேற்பட்டவர்களிடம் அத்தகைய ஆய்வினை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் லிஸாவும் ஒருவர். ஆய்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் ஒரு ஒற்றுமை தென்பட்டது. அவர்கள் அனைவரும் தங்களது தீயபழக்கங்களிலிருந்து மிகச்சிறிய காலகட்டத்திற்குள்ளாகவே விடுபட்டிருக்கிறார்கள். எப்படி அவர்களால் தீயபழக்கங்களிலிருந்து மீண்டுவர முடிந்தது என்பதை ஆய்வாளர்கள் தெரிந்து கொள்ள விரும்பினர்.

அதற்காக ஆய்வில் பங்கேற்பவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்டறிய, அவர்களுடைய அன்றாடய பழக்கவழக்கங்களைப் பற்றி தெளிவுபெற,  அவர்களுடைய வீடுகளில் வீடியோக் கேமராக்களைப் பொருத்தினர். தொழில்நுட்பத்தின் உதவியுடன், அவர்களின் மண்டை ஓட்டுக்குள் ஊடுருவி உணர்வுக்கருவிகளைப் பொருத்தினர். அவர்களை அடிமைப் படுத்திய பொருட்களை அவர்களுக்கு எதிரே வைத்து, அவர்களுடைய D.N.A -வில் ஏற்படும் மாற்றங்களை, அவர்களுடைய மூளைக்குள் செல்லும் மின்னதிர்வுகளின் மூலம் அதே நேரத்தில் (லைவாக) ஆராய்ந்தனர். நரம்புகளின் வழியே மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் தகவல்கள் அளவுக்கு ஆராய்வது, எப்படி பங்கேற்பாளர்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை கூறுவதே ஆராய்ச்சியாளர்களின் இலக்காக இருந்தது.

“மீண்டும் மீண்டும் பதில் கூறி உனக்கு அலுத்துப் போயிருக்கும். என்னுடன் ஆராய்ச்சி செய்பவர்களில் சிலர் நேரடியாக உன்னிடமிருந்து கேட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அமைந்திருக்காது. வேறு யார்மூலமாகவேதான் கேட்டிருப்பார்கள். நீங்கள் எப்படி புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டீர்கள் என்று மீண்டும் ஒருமுறை விளக்க முடியுமா?” ஒரு மருத்துவர் லிஸாவிடம் கேட்டார்.

“நிச்சயமாக.” லிஸா பதிலளித்தாள். “முதலில் கெய்ரோவில்தான் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டேன்.” அவசர அவசரமாக எந்தவித திட்டமும் இன்றி விடுமுறைக்காக கெய்ரோ செல்ல நேரிட்டதாக லிஸா கூற ஆரம்பித்தாள். அந்த விடுமுறைக்கு சிலமாதங்களுக்கு முன்பாக லிஸாவின் கணவன், ஒருநாள் வேலையிலிருந்து திரும்பியவுடன் லிஸாவை விட்டு விலகிவிடப் போவதாக கூறியிருந்தான். அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் நட்பு இருப்பதால் விலகிவிட விரும்புவதாக கூறினான். வஞ்சிக்கப்பட்டு, அதனால் விவாகரத்து வரை சென்றுவிட்டதை உணரவே லிஸாவுக்கு காலம் தேவைப்பட்டது. மனநிம்மதி இழந்த லிஸா கணவனைத் துப்பறியும் செயலில் ஈடுபட்டாள். அவனுடைய புதிய காதலிக்கு நடுஇரவில் ஃபோன் செய்து தொடர்பை துண்டித்து விடுதல் போன்ற தொந்தரவுகளை அளித்தாள். ஒருநாள் நன்கு குடித்துவிட்டு, கணவனுடைய காதலியின் வீட்டு கதவைத் தட்டி ஊரைக்கூட்டினாள். காதலியின் வீட்டை தீயிட்டு கொளுத்திவிடப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறாள்.

“அது என்னுடைய வாழ்வில் சொல்லிக்கொள்ளக் கூடிய தருணம் கிடையாது.” தொடர்ந்தாள். “எனக்கு பிரமிடுகளைப் பார்க்கவேண்டும் என்று நீண்டநாட்களாக ஆசை இருந்தது. என்னுடைய கிரடிட் கார்டுகளில் இன்னும் கொஞ்சம் பணம் இருந்திருந்தால் விடுமுறை எடுத்துக் கொண்டு கெய்ரோ செல்ல தீர்மானித்தேன்.”

அருகிலிருந்த பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கான ஒலியைக் கேட்டு கெய்ரோவில் லிஸா கண்விழித்தாள். அன்று லிஸா கெய்ரோவிற்கு வந்த முதல்நாள் காலை. ஹோட்டலுக்கு வெளியே கும்மிருட்டாக இருந்தது. அரசல்புரசலாக தெரிந்த வெளிச்சத்தில் ஜெட்லாக் இன்னும் தீராத நிலையில் லிஸா சிகரெட்டை நாடினாள்.

குழப்பங்களினாலும், கவலைகளினாலும் நிலை தடுமாறி இருந்த லிஸா, எரியும் பிளாஸ்டிக் மணத்தை நுகர்ந்தபிறகே, தான் பற்ற வைத்தது சிகரெட் கிடையாது, ஒரு பேனா என்பதனை உணர்ந்தாள். கடந்த நான்கு மாதங்களாக அழுவது, சாப்பிடுவது, தன் நிலையை எண்ணி வெட்கப்படுவது, வேகப்படுவது, உதவிக்கு யாரும் இல்லையே என்று மனதுடைந்து இருப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தாள். கட்டிலில் இருந்த அவள் அழஆரம்பித்தாள். “துன்பம் என்ற சுழலில் சிக்கிக்கொண்டதுபோல் எண்ணினேன். என் எண்ணக்கோட்டைகள் அனைத்தும் கிளிஞ்சல் கோபுரங்களானதை உணர்ந்தேன். சரியாக ஒரு சிகரெட்டைக்கூடப் பற்ற வைக்க முடியாமல் தவித்தேன்.”

“என்னுடைய முன்னாள் கணவனைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன். ஊருக்குத் திரும்பியபிறகு மீண்டும் ஒரு வேலையைத் தேடுவது எவ்வளவு கடினம்? எவ்வளவு வருடங்களாக உடலை சரியாக கவனிக்காமல்கூட வாழ்ந்துவிட்டேன்! படுக்கையிலிருந்து எழுந்து தண்ணீர் கூஜாவைத் தரையில் வீசி எறிந்தேன். கண்ணாடி சில்லுகள் சிதறி கூஜா உடைந்து சுக்குநூறாகியது. முன்பைவிட அதிகமாக அழஆரம்பித்தேன். ஏதாவது செய்தாகவேண்டும் என்ற வெறி எனக்குள் உண்டானது. குறைந்தபட்சம், ஒரு விஷயத்தையாவது என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.”

லிஸா குளித்துமுடித்துவிட்டு ஹோட்டலைவிட்டு வெளியேறி, டாக்சியில் கிஸா பிரமிடுக்குச் சென்றாள். சுயபட்சாதாபத்தில் மூழ்கிப்போயிருந்த லிஸா, கிஸா பிரமிடுக்கு முன் நின்றபோது, வறண்ட பாலைவனத்தில் ஒரு நிமிடம் அனைத்து துக்கங்களையும் மறந்தாள். தனக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு இலக்கு இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தாள். வாழ்க்கையை நகர்த்த ஏதாவது ஒரு இலட்சியத்தின் தேவையிருப்பதை உணர ஆரம்பித்தாள்.

டாக்சியில் அமர்ந்தபடி தனக்குள் ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டாள். ஹோட்டலுக்குத் திரும்பிய பிறகு, பாலைவனம் முழுவதையும் கால்நடையாக ஒருமுறை கடப்பதென்று முடிவெடுத்தாள்.

அது ஒரு பைத்தியக்காரத்தனமான தீர்மானம் என்பது லிஸாவுக்கு நன்கு தெரியும். பேங்க்கில் பணம் கிடையாது. உடல் நிலையைப்பற்றியோ சொல்வதற்கில்லை. உடல் பருமனும் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை. எந்த பாலைவனத்தை பாதசாரியாகக் கடக்கப்போகிறாள் என்பதும் தெரியாது. ஆனால் அந்த நேரத்தில் அவள் எதைப்பற்றியும் யோசிக்க விரும்பவில்லை. யோசித்தாலும் பிரயோஜனம் இல்லை. ஏதாவது ஒன்றில் முழுமனதுடன், கண்ணும்கருத்துமாக கவனம் செலுத்தியாகவேண்டும். லிஸா ஒருவருடத்தில் தன்னை தயார்செய்து கொண்டு அந்தப் பாலைவனத்தைக் கடக்க முடிவெடுத்தாள். அந்த நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடிக்க அவள் ஏகப்பட்ட தியாகங்கள் செய்யவேண்டியிருந்தது.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அவர் புகை பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்தியாக வேண்டும்.

பதினோரு மாதங்களுக்கு பிறகு வசிப்பதற்கு வசதிகளைக் கொண்ட உறுதியுடன் (கேரவன்) மற்றும் ஒரு அரை டஜன் மக்களுடன் லிஸா பாலைவனத்தைக் கடப்பதற்காக வந்து இறங்கினாள். கேரவனில் உணவு, நீர், மேப், GPS உபகரணங்கள், வாக்கிடாக்கிகள் மற்றும் தேவையான அனைத்தும் இருந்தன. புகை பிடிப்பதை நிறுத்தி விட்டதால் மட்டும் அனைத்து மாற்றங்களும் வந்து விடுமா?

டாக்சியில் இருந்த லிஸாவிற்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது. அறையிலிருந்த விஞ்ஞானிகளுக்கும், லிஸா பாலைவனத்தில் மேற்கொண்ட நடைப்பயணம் பற்றிய விவரங்கள் தேவையற்றது. கெய்ரோவில் சோகத்தின் வடிவாக அபலையாக நின்று கொண்டிருந்த லிஸாவின் எண்ணங்களில் ஏற்பட்ட சிறிய மாற்றம், புகைபிடிப்பதை சுத்தமாக விட்டொழிக்க வேண்டுமென்ற குறிக்கோள் லிஸாவின் வாழ்வில் ஒவ்வொரு அங்கத்திலும் ஏகப்பட்ட நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக லிஸாவின் விளக்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்த விஞ்ஞானிகள் இதனை உணர ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் புகைப்பதை நிறுத்தியதற்கு பதிலாக லிஸா நடை ஓட்டத்தை தனது தினசரி வழக்கமாக எடுத்துக் கொண்டாள். அந்தப் பழக்கம், அவளை, அவள் எந்த மாதிரியான உணவுகளை உண்ணுகிறாள் என்பதைப் பற்றி சிந்திக்க வைத்தது. தன்னுடைய இலக்கினை அடைய பணம் தேவைப்பட்டதால், அவள் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கும் பழக்கமும் வந்தது. ஒவ்வொன்றாக நல்ல மாற்றங்கள் அவள் வாழ்வில் ஏற்பட ஆரம்பித்தன. சில மாதங்களில் மாரத்தானில் பங்கேற்க ஆரம்பித்தாள். மேற்படிப்பு படிக்கவும் செய்தாள். தற்போது வீடும் வாங்கி, திருமணத்திற்கு நிச்சயத்திருக்கிறாள். முத்தாய்ப்பாக விஞ்ஞானிகளின் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாள்.

லிஸாவின் மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடித்தனர். அவளுடைய பழைய தீய பழக்கவழக்கங்களின் நரம்புகளின் கூட்டங்களை புதிய பழக்கவழக்கங்களின் நரம்புகளின் கூட்டங்கள் ஆக்கிரமித்திருந்தன. பழைய பழக்கங்களின் மின்அதிர்வுகளை இன்னும் காணமுடிந்தது. ஆனால் அவற்றை, புதிய பழக்கங்களின் அதிர்வுகள் அதனைக்காட்டிலும் அதிகமாக சூழ்ந்திருந்தன. லிஸாவின் பழக்கவழக்கங்கள்மட்டும் மாறிவிடாமல் லிஸாவுடைய மூளையின் கூறுகளும் மாறிவிட்டன.

லிஸா கெய்ரோ சென்றிருந்ததாலோ, அவளுக்கு விவாகரத்து நடந்திருந்ததாலோ அவள் நடைப்பயணம் மேற்கொண்டதாலோ அவளிடம் மாற்றம் ஏற்படவில்லை. லிஸா முதலில் ஒரேயொரு பழக்கத்தின்மீது மட்டும் முழு கவனம் செலுத்தினாள். அவள் புகைக்கும் பழக்கத்தில்மட்டும் முழுக்கவனம் செலுத்தியிருக்கிறாள். ஒரேயொரு பழக்கத்தின்மீது முழுக்கவனம் செலுத்துவதன் மூலம் (இது முதன்மை பழக்கம் என்று அழைக்கப்படுகிறது) லிஸா தனது அனைத்து பழக்கங்களையும் மாற்றி அமைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

தனிப்பட்ட மனிதரால் மட்டும் இத்தகைய பழக்கங்களை மாற்றமுடியும் என்று எண்ண வேண்டாம். நிறுவனங்களும், பழக்கங்களில் கவனம் செலுத்தினால் முழு நிறுவனத்திலும் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பிராக்டர் & கேம்பல், ஸ்டார்பக்ஸ் மற்றும் டார்கெட் போன்ற நிறுவனங்கள் இத்தகைய பழக்கங்களைத் தோற்றுவித்து வேலை செய்பவர்கள் எப்படி வேலை செய்யவேண்டும், எப்படி உரையாடவேண்டும் என்றும், வாடிக்கையாளர்கள் எப்படி பொருட்களை வாங்க வேண்டும் என்றும் நெறிப்படுத்தி இருக்கிறார்கள். வேலை செய்பவர்களும், வாடிக்கையாளர்களும் அவர்களை அறியாமலேயே நிறுவனங்கள் விரும்பும் வண்ணம் பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகிறார்கள்.

“சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களூடைய ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை உங்களிடம் காட்ட விரும்புகிறேன்.” ஒரு ஆராய்ச்சியாளர் லிஸாவிடம் கூறினார். கம்ப்யூட்டர் ஸ்கீரினில் லிஸாவிடைய மூளைப்பகுதி தெரிந்தது. “நீ உணவினைக் காணும்பொழுது, மூளையின் இந்த பகுதி முனைப்புடன் இருக்கிறது. இந்தப் பகுதிதான் உண்ணும் இயக்கத்தை ஏற்படுத்தும் பகுதி. உன்னுடைய மூளை, உண்ணவேண்டும் என்னும் ஏக்கத்தை இன்னும் உண்டாக்கிக்கொண்டுதான் இருக்கிறது.” மூளையின் நடுப்பகுதியைச் சுட்டினார். “இருந்தாலும், இந்த இடத்தில் புதிய முனைப்புகள் தோன்றியிருக்கின்றன.” முன்நெற்றிக்கு அருகில் உள்ள இடத்தைச் சுட்டினார். “இங்குதான் மனதளவில் சுயக்கட்டுப்பாடு தோன்றுகிறது என்று நினைக்கிறோம். ஒவ்வொரு முறையும் உன் மூளையின் இந்த பகுதிதான் மிகவும் முனைப்புடன் தோன்றுவது தெரிகிறது.”

லிஸா அனைத்து ஆராய்ச்சியாளர்களும் மிகவும் விரும்பி நோக்கும் பங்கேற்பாளராக இருந்தாள். லிஸாவுடைய மூளையின் ஸ்கேன்கள், பழக்க வழக்கங்கள் மூளையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை துல்லியமாக வேறுபடுத்தி பார்க்க முடிந்ததே அதற்குக் காரணம். “நீங்கள் முடிவெடுப்பது எப்படி பழக்க வழக்கங்களாக மாறுகிறது, என்று உணர்வதற்கு மிகவும் உதவி செய்திருக்கிறீர்கள்”. லிஸாவிடம் டாக்டர் கூறினார்.

அறையில் இருந்த அனைவரும் ஒரு முக்கியமான எல்லையை கண்டுபிடித்துவிட்டதாக உணர்ந்தார்கள். ஆமாம் உண்மையில் கண்டுபிடித்துவிட்டார்கள்.


- தொடரும்


இயற்கையின் அதிசயம் – மொனார்க் வண்ணத்துப்பூச்சி


இயற்கையின் அமைப்பில் பூச்சிகளின் வளர்சிதைமாற்றம் ஒரு பெரிய அதிசயமாகும். முட்டையிலிருந்து புழுவாகமாறி, புழுவிலிருந்து கூட்டுப்புழுவாக மாறி, அதிலிருந்து வண்ணத்துப்பூச்சி உருவாகிறது. மொனார்க் வகை வண்த்துப்பூச்சிகள் வட அமெரிக்காவிலும், கனடாவிலும் வாழ்கின்றன. இவைகள் வளர்சிதைமாற்றம் அடைந்து வண்ணத்துப்பூச்சியாக உருமாறுவது ஒரு பொதுவான அதிசயம். அதையும்தவிர இந்த மொனார்க் வண்ணத்துப்பூச்சிகள், குளிர்காலத்தை சமாளிக்க, கிட்ட்த்தட்ட 2,500 மைல்களைத் தாண்டி, மெக்ஸிக்கோவுக்கு இடம்பெயர்கின்றன. 

முதல் மூன்று தலைமுறைகள் அமெரிக்காவில் வசிக்கின்றன. அப்பொழுது அவற்றின் ஆயுட்காலம் பொதுவாக இரண்டு மாதங்கள் மட்டுமே. அதாவது மூன்று தலைமுறைகளையும் சேர்த்து ஆறு மாதங்கள். நான்காவது தலைமுறை வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே மெக்ஸிக்கோவுக்கு இடம்பெயர்கின்றன. இந்த நான்காவது தலைமுறை வண்ணத்துப்பூச்சிகளின் ஆயுட்காலம் ஆறுமாதங்களாகும். மலைகளையும், காடுகளையும் தாண்டி இவை இடம்பெறுகின்றன. தனது நான்காவது தலைமுறை முன்னோர்கள் சென்ற வழியையே இவை பின்பற்றிச் செல்கின்றன. அவர்கள் வசித்த அதே மரங்களையே இவை நாடிச் செல்கின்றன. நான்காம் தலைமுறை மூதாதையர்கள் கடந்த அதே கணவாய்களையேக் கடக்கின்றன.

இப்படித்தான் செல்லவேண்டுமென்று இவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தது?

காடுகளை அழிப்பதாலும், இயற்கையின் மாற்றத்தாலும் இந்த வண்ணத்துப்பூச்சிகளின் இனம் குறைந்துகொண்டே வருகிறது. வேர்ல்ட் ஹெரிட்டேஜ் லிஸ்ட் இந்த வண்ணத்துப்பூச்சிகளுக்காக சில காடுகளை அழிக்கக்கூடாது என்று அர்ப்பணித்துள்ளது.

சில காணொளிகள்:

http://spanglishbaby.com/2011/11/the-monarch-butterfly-biosphere-reserve-a-world-heritage-site-in-mexico-2/

http://video.nationalgeographic.com.au/video/kids/animals-pets-kids/bugs-kids/monarch-butterflies-kids/

Thursday, April 3, 2014

சிறுகதை – 9-2 ( w.w. ஜேக்கப்)



குரங்கின் பாதம். (விதியின் வழி மதி செல்லும்) – தொடர்ச்சி.

எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் வீடு அமைதியாக இருந்தது. மகனை மயானத்தில் புதைத்துவிட்டுவந்த இரண்டு வயதானவர்களுடைய இதயமும் துயரத்தில் புதைந்திருந்தது. கண்சிமிட்டும் நேரத்தில் அனைத்தும் முடிந்ததுபோல் இருந்தது.

சில நாட்கள் கழிந்தன. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்தது. இருவரும் பேசிக்கொள்ளாமலே நாட்கள் நகர்ந்தன. பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லாததுபோல் இருந்தது.

ஒருநாள் இரவு படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த வொய்ட், அருகே மனைவி இல்லாதிருந்ததை உணர்ந்தார். ஜன்னலுக்கருகே விம்மல் ஒலி கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்த வொய்ட் “படுத்துத் தூங்கு. சளி பிடித்துக்கொள்ளப் போகிறது.” மெதுவாக கூறினார். “என் மகனுக்கு குளிராக இருக்குமே.” அழுதுகொண்டே கூறினார் திருமதி வொய்ட். நீண்டநேரத்திற்குப் பிறகு திருமதி வொய்ட் தூங்க ஆரம்பித்தார். பாதி தூக்கத்தில் திடீரென்று எழுந்து “அந்த குரங்கின் பாதம்...” என்று கூக்குரலிட்டாள். திடுக்கிட்டு எழுந்த வொய்ட் “என்ன? என்னவாயிற்று?” என்றார். கணவரிடம் “எனக்கு அந்த குரங்கின் பாதம் வேண்டும். நீங்கள் அதனை எறிந்துவிடவில்லையே?” என்றார்.
“அலமாரியில் உள்ளது. ஏன்?” வொய்ட் கேட்டார்.
“ஆமாம். நிச்சயம் முடியும். ஏன் இந்த யோசனை எனக்கு முன்பே தோன்றவில்லை?” என்று பைத்தியம்போல் கூறினார் திருமதி வொய்ட்.
“என்ன தோன்றவில்லை?” புரியாமல் கேட்டார் வொய்ட்.
“குரங்கின் பாதத்திற்கு இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றனவே. ஒன்றைத்தானே உபயோகித்திருக்கிறோம். இன்னும் இரண்டை உபயோகிக்கலாமே.” – திருமதி வொய்ட்.
“ஒன்றால் வந்த விபரீதம் போதவில்லையா?” மறுத்தார் வொய்ட்.
“இல்லை. அதனைக் கொண்டுவாருங்கள். நான் என் மகனைக் கேட்கப்போகிறேன். கொண்டுவாருங்கள்.” – திருமதி வொய்ட்.
“உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. பேசாமல் படு.” – வொய்ட்
“முடியாது. கொண்டுவாருங்கள். எனக்கு என் மகன் வேண்டும்.”
வொய்ட் அமைதியாக மனைவியைப் பார்த்தார். “ஹெர்பர்ட் இறந்து பத்து நாட்களாகிவிட்டன. நான் உன்னிடம் சொல்லவில்லை. விபத்துக்குப்பிறகு என்னால் ஹெர்பர்ட்டை அடையாளம் காணவே முடியவில்லை. அவனுடைய உடையை வைத்துதான் அடையாளம் காணமுடிந்தது. அந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தான். வேண்டாம் மறந்துவிடு. உன்னால் அவனை அப்படிப் பார்க்கமுடியாது.” என்றார்.
“நான் வளர்த்த மகனைப் பார்த்து நானே பயப்படுவேனா? எனக்கு முதலில் குரங்கின் பாதத்தைக் கொண்டு வாருங்கள்.” – திருமதி வொய்ட்.
மனைவியின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாமல், இருட்டில் தட்டுத்தடுமாறிச் சென்று அந்த குரங்கின் பாதத்தை எடுத்து வந்தார் வொய்ட். அதனைக்கண்ட திருமதி வொய்ட் “இப்பொழுது வரம் கேளுங்கள்.” என்று உறுதியான குரலில் ஆணையிட்டார்.
“அது பைத்தியக்காரத்தனமானது. கொடுமையானது.” வொய்ட் மீண்டும் மறுத்தார்.
“முடியாது. வரத்தைக் கேளுங்கள்.” திருமதி வொய்ட் வற்புறுத்தினார். வொய்ட் வலதுகையில் குரங்கின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு “எங்கள் மகன் மீண்டும் உயிருடன் வேண்டும்.” என்று வாய்விட்டுக் கூறினார்.

குரங்கின் பாதம் உதறிக்கொண்டு அவர் கையிலிருந்து கீழே விழுந்தது. வொய்ட் அதனை அச்சத்துடன் நோக்கினார். அதனை எடுக்க மனம் இல்லாமல் நாற்காலியில் சாய்ந்தார். திருமதி.வொய்ட் கலங்கும் கண்களுடன், ஜன்னல் அருகே சென்று, ஜன்னல் கதவைத் திறந்துவிட்டார்.

எப்பொழுதும் உபயோகிக்கும் நெருப்புத்தொட்டியில், நெருப்பு வைக்காமல், அதன் அருகில் கால்களைக் கட்டிக்கொண்டு வொய்ட் அமர்ந்திருந்தார். எரியும் மெழுகுவர்த்தியின் திரி காற்றில் அசைவதால், அந்த வெளிச்சத்தில் தெரிந்த நிழல்கள் சுவரின் மீதும், கூரையின் மீதும் ஆடிக்கொண்டிருந்தன. குரங்கின் பாதம் வரத்தை நிறைவேற்றாததால் நிம்மதியான வொய்ட் படுக்கைக்கு சென்றார். சில நிமிடங்களுக்குப் பிறகு திருமதி.வொய்ட்டும் அவரைப் பின்தொடர்ந்தார்.

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டில் எங்கோ எலி ஓடும் சத்தம் கேட்டது. கடிகாரமுள் நகரும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. மீண்டும் எலியின் சத்தத்தைக் கேட்ட வொய்ட், விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு சத்தம் கேட்ட இடத்தை நோக்கி சென்றார். அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் ஓசைக் கேட்டது. அந்த ஓசையைக் கேட்டு வொய்ட் கலவரமடைந்தார். அவர் ஒரு கையில் இருந்த தீப்பெட்டி, கைதவறிக் கீழே விழுந்தது. உண்மையில் கதவு தட்டும் ஓசைதான் கேட்கிறதா அல்லது பிரமையா என்று வொய்ட் திகைத்தார். மீண்டும் கதவு தட்டும் ஓசை தொடர்ந்து, அது அவரை நினைவுலகத்துக்குத் திருப்பியது. பயந்துபோன வொய்ட், வேகமாக தனது படுக்கையறைக்குச் சென்று படுக்கையறையின் கதவைத் தாழிட்டார். அப்பொழுது தெருக்கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்தது.

“என்னவாயிற்று?” திருமதி.வொய்ட் படுக்கையிலிருந்து எழுந்தார்.
“ஒன்றுமில்லை. எலி வரவேற்பறையில் ஓடியது.”
தெருக்கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்தது. “அது, ஹெர்பர்ட்தான். என் ஹெர்பர்ட்தான்.” திருமதி வொய்ட் படுக்கையறைக் கதவைத் திறக்க முற்பட்டார். அதிர்ச்சியடைந்த வொய்ட் மனைவியின் கையைப்பிடித்துத் தடுத்தார். “என்ன செய்யப்போகிறாய்?” என்றார். “என் மகன் வந்துவிட்டான்.” வொய்ட்டின் பிடியிலிருந்து கையை விடுவிக்க முயன்றார். “மயானம் இங்கிருந்து இரண்டு மைல் தூரம் என்பதை மறந்துவிட்டேன். என் கையை விடுங்கள். நான் கதவைத் திறக்கவேண்டும்.” என்றார்.

“இல்லை. முடியாது. அதை உள்ளே விட முடியாது.” வொய்ட் தடுத்தார். “உங்கள் மகனைக் கண்டே பயப்படுகிறீர்களா? என்னை விடுங்கள். ஹெர்பர்ட், இதோ வந்துவிட்டேன்.” வொய்ட்டின் கைகளிலிருந்து செல்ல முயற்சி செய்தார்.

தெருக்கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்துகொண்டே இருந்தது. கணவரின் கைகளிலிருந்து விடுவித்துக்கொண்ட திருமதி.வொய்ட் படுக்கையறைக் கதவைத் திறந்துவிட்டு தெருக்கதவை நோக்கி ஓடினார். தெருக்கதவின் தாழ்ப்பாள் அவருக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. “தாழ்ப்பாள் எனக்கு எட்டவில்லை. சிறிது உதவுங்கள்.” என்று கணவரை உதவிக்கு அழைத்தார்.

ஆனால் வொய்ட், எங்கோ தரையில் கிடந்த குரங்கின் பாதத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அதனை உடனே கண்டுபிடித்தாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். ஒரு நாற்காலியின் உதவியுடன், திருமதி.வொய்ட் தாழ்ப்பாளை நகர்த்தும் சத்தம் கேட்டது. அதே நேரத்தில், வொய்ட் குரங்கின் பாதத்தைக் கையில் எடுத்துவிட்டார். அவசர அவசரமாக, தனது மூன்றாவது வரத்தைக் கேட்டார்.

கதவு தட்டும் ஓசை நின்று போயிருந்தது. ஆனால் அந்த ஓசையின் எதிரொலி வீட்டில் இன்னும் இருந்தது. திருமதி.வொய்ட் கதவைத் திறந்ததும் குளிர்க்காற்று வீட்டினுள்ளே வீசியது. வீட்டுக்கு வெளியே ஓடி, வெளியிலிருந்த தட்டியைத் திறந்துகொண்டு தெருவரை சென்றார் திருமதி.வொய்ட். தெருவிளக்கு மினுக்கிக்கொண்டு இருந்தது. தெருவில் எந்தவித நடமாட்டமும் அவருக்குத் தென்படவில்லை. வெறிச்சோடிக்கிடந்த சாலையைப் பார்த்துக்கொண்டு கண்கலங்கி நின்றாள் அந்தத் தாய்.

-மூலம் – w.w. ஜேக்கப் சிறுகதை.


துணுக்கு :

ஜப்பானைச் சேர்ந்த டாக்டர்.சிகயாகி ஹிநோஹரா (Dr. Shigeaki Hinohara), நூறு வயதைக் கடந்தவர். இன்றளவும் மக்களுக்காக மருத்துவப்பணி செய்துகொண்டிருக்கிறார். 1941 முதல் தொடங்கிய அவரது பணி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. அன்னாரது “மகிழ்ச்சியாக வாழவும், நீண்ட ஆயுள் வாழவும்” என்ற நூல் 12 லட்சத்துக்கு மேல் விற்பனையாகியுள்ளது. அதிலிருந்து சில சிந்தனைகள்.

1) மகிழ்ச்சியாக உணர்வது மிகவும் முக்கியமானது.
நன்றாக உண்ணுவது, நன்றாக உறங்குவது போல நன்றாக மகிழ்ச்சியாக உணர்வதும் மிகவும் முக்கியமானதொன்றாகும். குழந்தைகள் விளையாடும்பொழுது அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அத்தகைய உத்வேகத்தை முதியவர்கள் மீண்டும்பெற்று தமக்குள் இருக்கும் ஆற்றலை உணரவேண்டும்.

2) உடல் எடையை சரியாக நிர்வகியுங்கள்.
தேவைக்கதிகமான எடையை உடல் நீண்டநாள் தாங்குவது நல்லதல்ல. குறைவான அளவு, சத்துள்ள உணவை உண்ணுங்கள். வயிற்றுக்கு அதிக வேலை கொடுத்து தொந்தரவு செய்யாதீர்கள். அது உங்களை சோம்பேறியாக்கும்.

3) ஏதாவது காரியம் செய்ய திட்டமிடுங்கள்.
மூளையும் ஆத்மாவும் இணைந்து துடிப்புடன் இயங்க அவற்றுக்கு எப்பொழுதும் நேர்மறையான, மகிழ்ச்சியான, புதிய முயற்சிகள் தேவை. எதிர்பார்ப்புகள் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை அதிகமாக்குகிறது.

4) செய்யும் தொழிலை உற்சாகமாக அனுபவியுங்கள்.
அனுபவித்து தொழில் செய்யும்பொழுது ஓய்வு பெறவேண்டிய அவசியம் இருக்காது. விரும்பி தொழில் செய்பவர்களுடைய சக்தி குறைவதே கிடையாது. ஒவ்வொரு நிமிடமும் அந்த சக்தி அதிகரிக்கவே செய்கிறது. இயற்கையாகவே, நீண்ட நாட்கள் வாழ்ந்து சாதிக்கவேண்டுமென்ற முனைப்பு வந்துவிடுகிறது. அறுபது வயது வரை குடும்பத்துக்காக வாழுங்கள். அதன் பிறகு சமூக நலனுக்கு வாழ்வை அர்ப்பணியுங்கள். அப்பொழுது செய்யத் தேவையான சேவைகள் அதிகமாகத் தோன்றுவதால், ஓய்வுபெற வேண்டுமென்ற எண்ணமே வராது.

5) மற்றவர்களுடன் இணைந்து பழகுங்கள். கற்றவைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கற்றவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஆனால் கற்றவைகளை அடுத்தவர்களிடம் கொண்டு சேர்ப்பவர்களைக் காண்பதுதான் கடினமாகிவிடுகிறது. மற்றவர்களுக்கும் தான் கற்றவைகள் நன்மைபயக்கும் என்ற எண்ணம் தோன்றவேண்டும். அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். அது உங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியை அதிகமாக்கும்.

6) இயற்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
அனைத்து நோய்களுக்கும் மருந்து மாத்திரைகளினால் தீர்வுகள் உண்டு. இருப்பினும் அதற்கும் எல்லைகள் இருக்கின்றன. மனநோய்களுக்கு அது தீர்வாகாது. அழகும், அமைதியும், இயற்கையுமே அதற்கு சரியான தீர்வாகும். ஒரு மருந்தால் குணப்படுத்த முடியாததை, ஒரு குருவியின் கூவுதலோ, ஒரு சிறிய தோட்டமோ குணப்படுத்திவிடும். நாமும் இயற்கையின் ஒரு அங்கமே.

7) நடந்து செல்லுங்கள்.
நமது தசையை உபயோகிக்க, உபயோகிக்க அதன் வலு அதிகமாகிறது. வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் நடந்து செல்லுங்கள். வாகனங்களை உபயோகிப்பதைக் குறையுங்கள்.

8) செல்வம் சேர்ப்பதில் வாழ்வை வீணடிக்காதீர்கள்.
வாழ்வில் இன்பமயமானவைகள் அனைத்தையும் இயற்கை இலவசமாகவே கொடுத்துள்ளது. அவற்றைப் பணத்தால் வாங்கமுடியாது. செல்வத்தை சேர்ப்பதில் வாழ்வை வீணடிக்காதீர்கள். பொருட்செல்வம் முக்கியமானது. ஆனால் போதுமென்ற மனம் அதைவிட முக்கியமானது.

9) எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
வாழ்வு நினைத்ததுபோல இருப்பதில்லை. எப்பொழுதும் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது. நன்மைகள், தீமைகள் இரண்டுமே நிகழ்கிறது. அதனால் நிகழ்வுகளை உங்களுக்கு சாதகமாக உபயோகிக்க முயலுங்கள். அதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் மனித இனத்துக்கு உள்ளது. ஒவ்வொரு அனுபவத்திலும் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் ஏதாவது இருக்கும்.

10) ஒரு முன்மாதிரியை உருவகித்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு சவாலாக உங்கள் இலக்கைத் தேர்வு செய்யுங்கள். அது உங்களை உயரமான இடத்துக்கு எடுத்துச் செல்வதைக்கண்டு வியப்படைவீர்கள். உங்களுக்கு ஒரு முன்மாதிரியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய சவால்களை அவர்களுடைய கோணத்தில் சிந்தியுங்கள். அது உங்கள் உள்ளுணர்வைத்தட்டியெழுப்பி, உங்களுக்குத் தெரியாத உங்கள் திறமைகளை வெளிக்கொணரும்.