பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 15, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 4



இங்கு என்ன நிகழ்கிறது என்று பார்க்க, T-  சோதனையில் எலியின் மூளையில் நிகழ்வதை ஒரு வரைபடமாகக் காண்போம். எலி “டிக்” ஒலி கேட்டவுடன், ஆரம்பத்தில் அதன் மூளை அதிகமாக வேலை செய்வது உணவின் அருகில் சென்றவுடன் மூளையின் செயல் குறைந்து விடுகிறது. உணவை அடைந்தவுடன் மீண்டும் மூளையின் செயல் அதிகமாவது வரைபடத்தில் தெரிகிறது.






அதாவது “டிக்” ஒலியைக் கேட்டவுடன், உணவைத் தேடப்போகிறோம் என்று உணர்ந்து எலியின் மூளை துரிதமாக செயல்படுகிறது. செல்லும் பாதை பழகிய பாதையா, புதிய பாதையா என்று தீர்மானிக்க விழைவதால் மூளையின் செயல்பாடு அதிகமாக தோன்றுகிறது. பழகிய பாதை என்று தெரிந்தவுடன் மூளை செயல்திறனை குறைத்துவிடுகிறது. உணவு கிடைத்தவுடன் அனைத்தும் சரியாக நடந்து விட்டது என்று உறுதி செய்ய விழைவதால் மீண்டும் அதன் செயல்திறன் அதிகரித்துக் காணப்படுகிறது.





மூளையின் மேற்கண்ட செயல்முறை மூன்று படிகளைக் கொண்ட சுழற்சியாக உள்ளது. முதலில் மூளைக்கு ஒரு துப்பு கிடைக்க வேண்டும்; ஏதாவது ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும். இங்கு எலிக்கு “டிக்” என்ற ஒலி கிடைக்கிறது. இரண்டாவது ஏதாவது சில வழிமுறைகளைச் செய்ய வேண்டும். இந்த துப்பு மூளைக்குத் தன்னிச்சையானச் செயல்களைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று கூறுகிறது. மேலும் தன்னிச்சையாக எந்த செயலைச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. அந்த வழிமுறைகள் உடல்வழியாகவோ, உள்ளத்தின் வழியாகவோ, சிந்திப்பதன் வழியாகவோ இருக்கலாம். இறுதியாக அதற்காக ஒரு வெகுமதி கிடைக்க வேண்டும். அந்த வெகுமதியைக் கொண்டு மூளை இதனை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்வதற்கு தகுதியானதா இல்லையா என்று தீர்மானிக்கிறது. கீழே அந்த சுழற்சியைக் காணலாம்.



கால ஓட்டத்தில் – “துப்பு, வழிமுறை, வெகுமதி”, - “துப்பு, வழிமுறை, வெகுமதி” என்று தன்னிச்சையான பழக்கமாக உருவாகிவிடுகிறது. ஒரு கட்டத்தில் துப்பு கிடைத்தவுடன் தாங்கமுடியாத எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கத்தினையும் அளித்து வெகுமதி கிடைக்கும் வரை அந்த ஏக்கங்கள் தொடர்கின்றன. இறுதியில் நம்மை அறியாமலேயே நமக்கு பழக்கங்கள் தோன்றிவிடுகின்றன.


பழக்கங்கள் ஒருமுறை தோன்றிவிட்டால், மாற்றவே முடியாது என்று எண்ணிவிடாதீர்கள். வரும் அத்தியாயங்களில் அவை எப்படி மறக்கடிக்கப்படலாம், மாற்றப்படலாம் அல்லது அதற்குப் பதிலாக வேறு பழக்கங்களை உருவாக்குவது எப்படி என்றும் காணலாம். ஒரு பழக்கம் உருவானபிறகு மூளை தன்செயல்பாட்டிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறது என்பதை நிரூபிக்கவே, பழக்கம் உருவான விதத்தைக் கண்டோம். எனவே ஒரு பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்றாலும் தீவிர முயற்சி செய்தே விடுபட்டாகவேண்டும். அந்த பழக்க சுழற்சிக்கு, மாற்றுப் பழக்கத்தின் சுழற்சியை உருவாக்கியே ஆகவேண்டும்.
பழக்க சுழற்சி, எந்த வகைகளான பாகங்களைக் கொண்டிருக்கிறது, அவை எப்படி வேலை செய்கின்றன என்று அறிந்து கொண்டால் பழக்கங்களைக் கட்டுபடுத்துவது எளிதான செயலாகும். பழக்கத்தை, சிறுசிறு பாகங்களாக பிரித்துவிட்டால், பிறகு அதனுடைய பாகங்களை கவனிப்பதன் மூலம் பழக்கத்தை மாற்ற இயலும்.


“நாங்கள் எலியை வைத்து T – சோதனை செய்தபொழுது நூற்றுக்கணக்கான முறை ஒரே இடத்தில் உணவை வைத்தோம். இறுதியில் “டிக்” ஒலியைக் கேட்டவுடன் உணவை நேரடியாக எடுத்துக்கொள்வது எலிக்குப் பழக்கமாயிற்று. நாங்கள் சில காலங்களுக்குப் பிறகு எலியின் உணவை வேறு இடங்களில் வைத்து எலியின் பழக்கத்தை மாற்றியமைத்தோம். பிறகு ஒரு நாள் மீண்டும் உணவை முதலில் வைத்த இடத்தில் வைக்க ஆரம்பித்தோம். என்னவாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? எலியின் பழைய பழக்கம் மீண்டும் வந்து விட்டது. பழக்கங்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதில்லை. அவை B.G  –ல் சேமித்துவைக்கப்படுகிறது. அது நமக்கு பல விஷயங்களில் நன்மை அளிக்கிறது. இல்லையேல், நீச்சலடிப்பதையும், காரோட்டுவதையும் நாம் மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள நேரிடும். 


பிரச்சனை என்னவென்றால், நல்ல பழக்கத்தையும், தீயப்பழக்கத்தையும் மூளைக்கு வேறுபடுத்தத் தெரியாது. எனவே தீயப்பழக்கத்திலிருந்து வெளிவந்தாலும், சரியான துப்புகளுக்காக அந்த பழக்கம் எப்பொழுதும் காத்திருக்கிறது.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துவதோ அல்லது சாப்பிடும் பழக்கத்தை மாற்றுவதோ ஏன் கடினம் எனபது இதிலிருந்து புரிகிறது. உடற்பயிற்சி செய்வத்ற்குப் பதிலாக சோஃபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டு சாப்பிட்டு இன்பமாக இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியபிறகு அதிலிருந்து வெளியே வருவது கடினமாகிறது. இதே காரணத்தினால், நம்மால் தீய பழக்கங்களை பின்னுக்குத் தள்ளி, புதிய நல்ல பழக்க சுழற்சியையும் ஏற்படுத்தவும் முடியும். இதைத்தான் லிஸா ஆலன், கைரோ பயணத்துக்குப் பிறகு செய்து சாதித்திருக்கிறார். புதிய செயல்முறைகளை உருவாக்கி பழகிவிட்டால், ஒருவரால் டி.வி பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கத்தை விட்டொழித்து, உடற்பயிற்சியில் ஈடுபடுவது சாத்தியம் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.


பழக்கங்களின் சுழற்சியை நினைவில் சேமிக்காமல், ஒவ்வொரு முறையும் நமது மூளை சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமானால், நம் நிலை எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். மூளை ஸ்தம்பித்துவிடும். B.G  – சேதமடைந்த நோயாளிகளால் எந்த விதமான செயல்களையும் செய்யமுடிவதில்லை. எடுத்துக்காட்டாக  B.G  - சேதமடைந்தவர்களால் ஒருவருடைய முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு, அவர் கோபமாக இருக்கிறாரா, மகிழ்ச்சியில் இருக்கிறாரா, எப்படி இருக்கிறார் என்று பிரித்தறிய இயல்வதில்லை.   – இல்லாமல் நம்மால் தினசரி செய்யும் எந்த வேலையையும் செய்ய இயலாது. காலையில் முதலில் பல் துலக்க வேண்டுமா அல்லது குளிக்க வேண்டுமா என்று நாம் யோசிப்பதில்லை.  B.G  – சேதமடைந்தால் பல் துலக்குவதுமுதல் பிரச்சனைதான்.பல் துலக்குவது, குளிப்பது போன்ற செயல்கள் மூளையின் துணையின்றி பழக்கங்களினால் நடக்கிறது.  B.G  – நலமாக உள்ளவரை நாம் சிந்திக்காமலேயே பல செயல்களை சரிவரச் செய்கிறோம்.


அதே வேளையில், மூளை பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதில் அபாயங்களும் உண்டு. பழக்கங்களில் நன்மை இருக்கும் அளவுக்கு தீமைகளும் உண்டு. யூஜினையே எடுத்துக்கொள்ளுங்கள். பழக்கங்கள் அவரது வாழ்க்கையை அவருக்கு ஓரளவுக்கேனும் திருப்பியளித்தன. அதே நேரத்தில் அவரிடமிருந்த முக்கியமான அனைத்தையும் பறித்துக்கொள்ளவும் செய்தன.


ஆராய்ச்சிகளுக்காக யூஜினிடம் அதிக நேரம் செலவழித்த பிறகு, ஞாபத்துறை நிபுணரான லாரி ஸ்கொயர், யூஜினால் புதிய பழக்கங்களை கற்றுக்கொள்ள முடிவதை உணர்ந்தார். யூஜினுடைய B.G  – அதிகமாக பாதிப்படையாமல் இருப்பதை அவர் ஸ்கேன் மூலம் கண்டறிந்தார். மூளை பெருமளவில் சேதமதைந்திருந்தாலும் யூஜினிடம் இன்னும் பழக்க சுழற்சிகளின் தாக்கம் உள்ளதா? நமது ஆதிகால நரம்பியல் செயல்பாட்டுமுறை எப்படி யூஜினுக்கு வழிகளைக் கண்டறிய உதவுகிறது?

யூஜினிடம் எப்படி பழக்கக்கங்களின் சுழற்சி உருவாகிறது என்று கண்டறிய ஸ்கொயர் ஒரு சோதனையைச் செய்தார். பதினாறு வேறுவேறு பொருட்களை எடுத்துக் கொண்டார். அவற்றை ஜோடி ஜோடியாகச் சேர்த்துவைத்தார். மொத்தம் எட்டு ஜோடி பொருட்கள். யூஜினிடம் எட்டு ஜோடிப்பொருட்களையும் காண்பித்துவிட்டு, பிறகு ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஒரு பொருளை எடுத்துக்கொண்டார். எடுத்து வைக்கப்பட்ட மற்ற எட்டுப்பொருட்களில் ஒன்றை யூஜினிடம் கொடுத்து சரியான ஜோடியைக் காட்டும்படி வேண்டினார்.

யூஜினிடம் இரண்டு பொருட்களைக் கொடுத்து அவற்றில் எந்தப் பொருள், காண்பிக்கப்படும் மூன்றாவது பொருளுக்கு சரியான ஜோடி என்று கேட்கப்படும். யூஜின் பதில் கூறிவிட்டு, அந்த பொருளை திருப்பிப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின்புறம் சரி அல்லது தவறு என்று எழுதப்பட்டிருக்கும். மீண்டும் மீண்டும் காண்பித்த பொருட்களையே காண்பிப்பதால் சாதாரண நிலையில் உள்ளவர்கள் நான்கு, ஐந்து முறை கேட்டாலே சரியான பதிலைக் கூறிவிட முடியும். குரங்குகள் எட்டு முதல் பத்து நாட்களில் எட்டு பொருட்களின் ஜோடியையும் கண்டு பிடித்துவிடும். ஸ்கொயர் இந்த சோதனையை வாரம் இருமுறை யூஜினுக்கு அளித்தார். ஆனால் யூஜினினால் ஒரு முறைக்கூட சரியான ஜோடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு இந்த சோதனை தொடரப்பட்டது.


ஒவ்வொரு முறை சோதனையைத் துவங்கும்பொழுதும் இப்படித்தான் ஆரம்பமாகும்.
“நீங்கள் இன்று ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று தெரியுமா?” ஆராய்ச்சியாளர் யூஜினிடம் கேட்பார்.
“தெரியாது.”
“உங்களிடம் சில பொருட்கள் காண்பிக்கப்படும் அவை உங்களுக்கு ஏன் காண்பிக்கப்படுகிறது என்று தெரியுமா?”
“நான் அவற்றைப் பற்றி விளக்கிக் கூற வேண்டுமா அல்லது அவற்றின் பயனைப்பற்றிக் கூற வேண்டுமா?” யூஜினினால் அதற்கு முன்பு நிகழ்த்தப்பட்ட எந்த ஞாபகசக்தி சோதனையையும் நினைவில் நிறுத்த முடியவில்லை.


ஆனால் வாரங்கள் செல்லச்செல்ல யூஜினுடைய நினைவுகூறும் திறமையில் முன்னேற்றம் காணப்பட்டது. பதினான்கு வாரங்களுக்குப் பிறகு 85 சதவிகிதம் கேள்விகளுக்கு அவரால் சரியான ஜோடியை கண்டுபிடிக்க முடிந்தது. பதினெட்டு வாரங்களுக்குப் பிறகு 95 சதவிகிதம் சரியான ஜோடியை அவர் கண்டுபிடித்தார். ஒரு முறை சோதனை முடிந்த பிறகு யூஜின் ஆராய்ச்சியாளரிடம் வியப்புடன் கேட்டார் “எப்படி என்னால் சரியாக கூறமுடிகிறது?” யூஜினினால் அவரையே நம்ப முடியவில்லை.
“நீங்கள்தான் பதில் கூறவேண்டும். இந்த பொருளை முன்பே பார்த்திருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?”
“இல்லை. இங்குதான் எங்கோ இருக்கிறது.” தன் தலையை தொட்டுக் காட்டினார் யூஜின்.

எப்படி நினைவுகூற முடிகிறது என்று ஸ்கொயர் புரிந்துகொண்டார். யூஜினுக்கு ஒரு துப்பு கொடுக்கப்பட்டது. ஜோடிகள் மாற்றப்படாமல், மீண்டும் மீண்டும் யூஜினுக்குக் காண்பிக்கப்பட்டது. அது ஒரு நடைமுறை பழக்கத்தை உண்டாக்கியது. யூஜின் பதில் கூறியவுடன் அந்த பொருளை திருப்பிப்பார்க்கும் வழக்கம் அவரிடம் தன்னிச்சையாகவே ஒட்டிக்கொண்டது. அதில் “சரி” என்று எழுதப்பட்டிருந்தால் அது யூஜினுக்கு மிக்க மகிழ்ச்சியையும், திருப்தியையும் ஏற்படுத்தியது. அதுவே அவருக்கு கிடைக்கும் வெகுமதி. ஆகமொத்தத்தில் யூஜினிடம் ஒரு பழக்க சுழற்சி ஒட்டிக்கொண்டது.




உண்மையில் யூஜின் பழக்கத்தினால்தான் நினைவு கூறுகிறார். அவரிடம் பழக்கம் ஒட்டிக்கொண்டது என்று நிரூபிக்க டாக்டர் ஸ்கொயர் இன்னும் ஒரு சோதனையை மேற்கொண்டார். யூஜினிடம், அவருக்கு நன்கு பரிச்சயமான பதினாறு ஜோடிகளை மொத்தமாக கொடுத்து, ஒவ்வொரு ஜோடியையும் தனித்தனியே எடுத்து வைக்குமாறு கூறினார். யூஜினுக்கு எங்கு ஆரம்பிப்பது என்று புரியவில்லை. “அடக்கடவுளே! இவ்வளவு பொருட்களை எப்படி நான் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும்?” என்று யூஜின் கேள்வி எழுப்பினார். பிறகு ஒரு பொருளை எடுத்து அதன் மறுபக்கத்தை நோக்கினார். ஆராய்ச்சியாளர், யூஜினிடம் ஜோடி ஜோடியாக பொருட்களை எடுத்து வைக்குமாறுதான் கூறினார். அப்படி இருக்கும்பொழுது யூஜின் ஏன் பொருளின் மறுபக்கத்தை நோக்கினார்?
“எனக்கு அப்படியே பழகிவிட்டது என்று நினைக்கிறேன்.” யூஜின் கூறிக்கொண்டார்.
யூஜினினால் ஜோடிகளை சேர்த்துவைக்க முடியவில்லை. எப்பொழுதும் செய்யும்முறையிலிருந்து, கேள்வி மாற்றியமைக்கப்பட்டது யூஜினுக்கு குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. அவருக்கு எதுவும் பிடிபடவில்லை.


டாக்டர் ஸ்கொயருக்கு தேவையான நிரூபணம் கிடைத்துவிட்டது. எந்த செயலையும் சிலவினாடிகள் கூட நினைவில் நிறுத்த இயலாத யூஜின், புதிய பழக்கங்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய திறமை பெற்றிருக்கிறார் என்பது இதிலிருந்து புலனாகிறது. தனியே வீட்டை விட்டு வெளியேறிய யூஜின் எப்படி வழிதெரிந்து வீட்டுக்குத் திரும்பினார் என்றும் புரிகிறது. அவருக்கு வீடு திரும்புவதற்காக சில மரங்கள், வழியில் இருந்த சில அடையாளங்கள், சில வீடுகள் துப்புகளாக இருந்திருக்கின்றன. அதனால் அவரால் அந்த பழக்கத்தைக் கொண்டு, எந்த வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று தெரியாவிட்டால்கூட, பழக்கம் காரணமாக சரியாக வீடு திரும்பியுள்ளார். மூளையிலுள்ள B.G,  கிடைக்கும் துப்புகளைக் கொண்டு பழக்கத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பசியில்லாவிட்டாலும்கூட, யூஜின் சரியான துப்புகள் கிடைத்தால், ஒரே நாளில் மூன்று, நான்கு தடவைகள் காலை உணவை உண்டுவிடுவார். அதற்கு காலைநேரத்தில் ஜன்னலில் இருந்து வெளிச்சம், ரேடியோவில் குறிப்பிட்ட விளம்பரம் போன்று அவருடைய B.G க்கு துப்புகள் கிடைத்தாலே போதும்



-தொடரும்.




பூனைக்கு நன்றி இல்லையா, யார் சொன்னது?

காணொளியில் பதிலைப் பாருங்கள்!


13 comments:

  1. //பசியில்லாவிட்டாலும்கூட, யூஜின் சரியான துப்புகள் கிடைத்தால், ஒரே நாளில் மூன்று, நான்கு தடவைகள் காலை உணவை உண்டுவிடுவார். அதற்கு காலைநேரத்தில் ஜன்னலில் இருந்து வெளிச்சம், ரேடியோவில் குறிப்பிட்ட விளம்பரம் போன்று அவருடைய B.G க்கு துப்புகள் கிடைத்தாலே போதும்.//

    எனக்குத் தெரிந்த ஒருவர் காலையில் சாப்பிட்டதை மறந்து திரும்பவும் காலை உணவு வேண்டும் என்பார். ஏன் இப்படி அவர்செய்தார் என்பதன் காரணம், அது BG க்கு கிடைத்த துப்புகளால் என்று இப்போதுதான் தெரிகிறது. நீங்கள் போன பதிவில் எழுதியிருந்தது போல பார்க்கின்ஸன் போன்ற மறதி நோய்களுக்கும், இந்த Basal Ganglia (B.G) – க்கும் தொடர்பு இருக்குமென்ற ஊகம் சரியென்றே தோன்றுகிறது.

    இந்த தொடரின் மூலம் பல புதிய ஆச்சரியமான சுவையான தகவல்களை அறிந்துகொண்டேன். மேலும் பல புதிய தகவல்களை அறிய ஆவலோடு தொடர்கிறேன்.


    நாய் மட்டுமல்ல எல்லா செல்லப் பிராணிகளும் நன்றியுள்ளவைகள் தாம் என்று சொல்லாமல் சொல்கிறது அந்த காணொளிக் காட்சி. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      பார்க்கின்ஸன் போன்ற மறதி நோய்கள் வளர்ச்சியடையாத நாடுகளில் அதிகமாக இருந்ததில்லை. இப்பொழுது வருவதற்கு, நம் உணவுப்பழக்கமும், மன உளைச்சலும் காரணமென்று நினைக்கிறேன்.

      ஆமாம். அனைத்து செல்லப்பிராணிகளும் நன்றியுள்ளவைகள்தான் என்று நானும் நம்புகிறேன்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. வணக்கம்

    அறிய முடியாத தகவல்கள்...அறியத்தந்தமைக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு.ரூபன் அவர்களே!



      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. /// நல்ல பழக்கத்தையும், தீயப்பழக்கத்தையும் மூளைக்கு வேறுபடுத்தத் தெரியாது... /// அச்சச்சோ...!

    சோதனையின் நிகழ்வுகள் வியப்பாகத்தான் உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      ஆமாம். மூளையைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான். இதயம்தான் நல்லது கெட்டதை முடிவெடுக்க வேண்டும்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. சோதனையின் விளைவுகள் அருமையானவை. என்றாலும் எனக்குக் கொஞ்சம் நீளமான பதிவாகத் தெரிகிறது. விஷயத்தில் கனம் இருப்பதால் மெதுவாகவே (ஆழ்ந்து படிக்கவேண்டியும் இருந்ததால்) படித்தேன்.

    பூனை சரியான சமயத்தில் பாய்ந்து விட்டதே! அந்த நாய்க்கு அந்தப் பையனிடம் என்ன விரோதம் என்றும் புரியவில்லை. நல்லவேளை தான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.

      அந்த நாய் ஒரு கடிக்கும் வகையைச் சேர்ந்தது என்று நினைக்கிறேன். பாவம், குழந்தை வயிற்றில் தையலாம்.
      .
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. எனவே ஒரு பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்றாலும் தீவிர முயற்சி செய்தே விடுபட்டாகவேண்டும். அந்த பழக்க சுழற்சிக்கு, மாற்றுப் பழக்கத்தின் சுழற்சியை உருவாக்கியே ஆகவேண்டும்.//

    ஆகவேதான் குடிப்பழக்கத்தையும் புகைப் பிடிக்கும் பழக்கத்தையும் விடுவது அத்தனை எளிதல்ல போலிருக்கிறது. சிலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்காக பாக்கு போடுவது, சூயிங்கம் மெல்வது போன்ற பழக்கத்தை துவக்கி பிறகு அதற்கும் அடிமையாகி விடுவதை பார்க்க முடிகிறது. மனித மூளை அவன் கண்டு பிடித்துள்ள அனைத்து கருவிகளிலும் உன்னதமானது என்பதை இந்த கட்டுரையின் மூலம் ஓரளவுக்கு தெரிந்துக்கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      தாங்கள் கூறுவதை நான் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன். சிகரெட்டை விட்டுவிட்டு பாக்கு பழக்கத்தில் புகுந்துவிட்டு, பிறகு இரண்டு பழக்கங்களுக்கும் ஆளானவரைத் தெரியும்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  6. இதற்கு முன்பு நான் இந்த காணொளியைக் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டுப் பிராணிகளில் நாய்க்கு அடுத்தபடியாக மிகவும் புத்திக்கூர்மையுள்ள பிராணி பூனைதான்.

    ReplyDelete
    Replies
    1. பூனை புத்திசாலிதான். ஆனால், அதற்கு நன்றி இருக்குமென்று நினைக்கவில்லை. இது அதிசய பூனை.

      இந்த காணொளியைக் காணுங்கள்.

      http://www.youtube.com/watch?v=XYIEO76xJIQ

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்


      Delete
  7. // தீயப்பழக்கத்திலிருந்து வெளிவந்தாலும், சரியான துப்புகளுக்காக அந்த பழக்கம் எப்பொழுதும் காத்திருக்கிறது.//

    குடிப்பழக்கத்தை இன்னும் மறக்கடிக்க முடியாமல் சிலர் திணறுவது இதனால்தானோ என்னவோ?

    ReplyDelete