பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, September 26, 2013

கதம்பம்-7


இப்படியும் மனிதர்கள்:

ஒரு நூற்றாண்டாக கணித நிபுணர்களால் விடுவிக்க முடியாத Poincaré conjecture – க்கான தீர்வை கிரிகரி பெரல்மான் என்ற ரஷ்யாவைச் சேர்ந்த கணித நிபுணர் 2002-ல் வெளியிட்டார். அவருடைய விடையை நான்கு வருடங்களாக கணிதமேதைகள் குழுவினராக ஆராய்ந்து சரியான தீர்வுதான் என்று, 2006-ல் உறுதிபடுத்தினர்.

Poincaré conjecture என்பது மிகவும் சிக்கலான, முப்பரிமாண இடத்தை பற்றிய ஒரு கருதுகோளை நிரூபிக்கும் ஒரு புதிர். பரவெளி எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதனைப் பற்றிய விளக்கங்கள் சம்பந்தப்பட்ட புதிர். புதிர் சம்பந்தமான விளக்கங்கள் விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிகவும் அறிவு கூர்மையுள்ள மனிதன் என்று அறியப்படும் கிரிகரி பெரல்மானுக்கு, புதிரை விடுத்தற்காக, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது.
பிரபலத்தை விரும்பாத 47 வயதான, இந்தக் கணித மேதை அந்தப் பரிசை மறுத்துவிட்டார். பரிசுத்தொகை கிடைத்த சமயத்தில் அவர் வேலையில்லாமல் இருந்தார். அச்சமயம், தன் சகோதரியின் உதவித்தொகையுடன், தன்னுடைய வயதான தாயுடன் ஒரு இரண்டு அறை அபார்ட்மெண்ட்-ல் வசித்துக் கொண்டிருந்தார். அவருடைய அப்பார்ட்மென்ட்-லிருந்து கரப்பான் பூச்சி பெருகி அந்த பிளாக் முழுவதும் பிரச்சனையாக உள்ளதாக அவருடைய சக அப்பார்ட்மெண்ட்வாசிகள் அடிக்கடி புகார் செய்துகொண்டிருந்தனர்.  அவர் விருதையும், பரிசுத்தொகையையும் மறுத்தது இது முதல் முறையல்ல. கணிதத்துக்கு நோபல் பரிசு கிடையாது. கணித நோபல் பரிசுக்கு இணையான “ஃபீல்ட் விருதையும் அவர் மறுத்திருக்கிறார். பணத்திலும், பேரிலும், புகழிலும் எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டார். என்னை ஒரு விலங்குக்காட்சி மிருகம் போல மக்கள் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்.

ரஷ்யாவில் பிறந்த கிரிகரி பெரல்மான், யூத இனத்தைச் சேர்ந்தவர். 1966-ல் அவர் ரஷ்யாவில் கணித நிபுணரான தாய்க்கும், ஒரு பொறியியலாளருக்கும் மகனாகப் பிறந்தார். அது ரஷ்யாவில் யூதர்கள் அவமரியாதையாக நடத்தப்பபட்ட காலகட்டம். இப்பொழுதும்தான்.  பதினோரு வயதிலேயே குழந்தை அறிஞராக அவர் அறியப்பட்டார். யூதராக இருந்ததனால் அவர் ரஷ்யாவில் பற்பலப் பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார். அப்பிரச்சனைகளையும் தாண்டி கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

1990-களில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்திருக்கிறார். 1995 வாக்கில், ரஷ்யாவுக்கு விருப்பப்பட்டு திரும்பி, அனைவரையும் வியப்பிலாழ்த்தினார். அப்பொழுது ரஷ்யாவில் அவருக்கு சம்பளம், மாதம் கிட்டத்தட்ட 300 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. அங்கும் சக ஊழியர்கள் அவரை வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்தபொழுது அவருக்கு நிரந்த வேலை எதுவும் கிடையாது. அந்தப் பரிசுத்தொகையையும் அவர் மறுத்துவிட்டார். நிருபர்கள் அவர் வீட்டுக்கு சென்று விபரங்கள் கேட்டபொழுது, சுவருக்கு மறுபுறத்திலிருந்து பேசிவிட்டு அவர்களை அனுப்பிவிட்டார். அவருடைய ஃப்ரிட்ஜில் ரொட்டி, பால், பாலாடைக்கட்டிகள், ஆரஞ்சு தவிர வேறு பொருட்களைக் காணமுடியாதாம். இப்படியும் மனிதர்கள்.


ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 

கண்ணால் காண்பதும் பொய்:
மேற்கண்ட வாசகத்தின் உண்மையான அர்த்தத்தை அறிந்துகொள்ள கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள்.
ஒருவரது வயதைக் கண்டுபிடியுங்கள்:
1 முதல் 7 – க்குள் உங்களுக்கு பிடித்தமான எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை 50- ஆல் பெருக்குங்கள். (2 என்று வைத்துக்கொள்ளுங்கள்; 2 x 50 = 100)
அதனுடன் 44-ஐ கூட்டுங்கள். (100 + 44 = 144)
வரும் விடையை 200- ஆல் பெருக்குங்கள். (144 x 200  = 28,800)
உங்களுடைய பிறந்த நாள் 2013-ல் முடிந்துவிட்டதென்றால் வரும் விடையுடன் 113 – ஐக் கூட்டுங்கள்.(28,800 + 113 = 28,913)
உங்களுடைய பிறந்த நாள் 2013-ல் இன்னும் வரவில்லையென்றால் வரும் விடையுடன் 112 – ஐக் கூட்டுங்கள்.
இப்பொழுது கிடைக்கும் விடையில் தங்களுடைய பிறந்த வருடத்தைக் கழியுங்கள். (28,913 – 1950 = 26,963)
வரும் எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்களும் உங்கள் வயதைக் கொண்டிருக்கும். (தங்களது வயது 63)
இந்த முறையினை 2013-ல் மட்டுமே உபயோகிக்க முடியும். எண்களை மாற்றினால் வேறு வருடங்களுக்கும் உபயோகிக்கலாம்.

Thursday, September 19, 2013

கதம்பம்-6


 

மாபெரும் வர்த்தக சறுக்கல்கள்:

1859-ல் கச்சா எண்ணையை எடுக்க இயந்திரங்கள் இல்லை. எண்ணையை எடுக்க உடல் உழைப்பையே நம்பியிருந்தார்கள். பணி ஓய்வு பெற்ற எட்வின் ட்ரேக் என்பவர், உப்பு கிணறு தோண்டுபவர்களிடம், புதிய எண்ணை எடுக்கும் இயந்திரங்களை வடிவமைக்க உதவிகளை நாடினார். பைத்தியக்காரன்தான் அந்த வேலையை செய்வான் என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். தனது உறவினர்களின் உதவியுடன் எட்வின் தானே புதிய இயந்திரத்தை உருவாக்கினார். ஆனால் வடிவமைப்பை உரிமைப்படுத்த தவறிவிட்டார். மற்றவர்கள் அவருடைய வடிவமைப்பைப் பயன்படுத்தி எண்ணை எடுத்து கோடீஸ்வரர்களாகிவிட்டனர். எட்வின் ஏழையாகவே இறந்தார்.

 

பெல் 1876-ல் வெஸ்டர்ன் யூனியன் தந்திக்கம்பெனிக்கு தொலைபேசி வடிவமைப்பு உரிமையை 100,000 அமெரிக்க டாலருக்கு விற்பதற்கு முன்வந்தார். மிகவும் முக்கியமான அந்த உரிமையை “எலக்ட்ரானிக் பொம்மைக்கு எங்கள் கம்பெனியில் இடமில்லை” என்று கூறி கம்பெனியின் தலைமை அதிகாரி அதனை நிராகரித்துவிட்டார். ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழந்தார்.

 

1962- டெக்கா ரெக்கார்டிங் கம்பெனிக்கு “பீட்டில்” குழுவினர் ஆடிஷனுக்கு சென்றனர். அந்த கம்பெனி பீட்டிலுக்கு தகுதி இல்லையென்று ரெக்கார்டிங் காண்ட்ராக்ட் கொடுக்கவில்லை. பிறகு பீட்டில் குழுவினர், EMI ரெக்கார்டிங் கம்பெனிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வரலாறு படைத்தனர்.

 

அமெரிக்க ப்ரெசிடென்ட் பதவிக்கு நின்று தோற்றவர் ரோஸ் பெரெட். அவர் மைக்ரோசஃப்ட் நிறுவனத்தை 1979-ல் 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க விரும்பினார். பில் கேட்ஸ் 60 மில்லியன் கேட்டார். ரோஸ் மறுத்துவிட்டார். இன்று மைக்ரோசாஃப்ட்டின் மதிப்பு – 200 பில்லியன் டாலருக்கும் மேல்.

 

1980-ல் IBM  தன்னுடைய ஆபரேட்டிங் சிஸ்டத்தை அமைக்க காரி கில்டேட் என்பவரை அழைத்தது. அவர் தனது பொழுதுபோக்கு விளையாட்டுக்கு (விமானம் ஓட்டுவது) சென்றுவிட்டார். கடுப்படைந்த IBM பில் கேட்-ஐ அழைத்த்து. அது மைக்ரோசாஃப்ட் பிறக்க வழிவகுத்தது.

 

ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த ஸ்டீஃப் ஜாப், ஸ்டீஃப் வூஸ்னியாக் இருவரும், ஆரம்பத்தில் HP நிறுவனத்திடம் சென்று எங்கள் கண்டுபிடிப்புகளை தயாரியுங்கள். எங்களுக்கு சம்பளம் கொடுத்தால் போதும். நாங்கள் வேலை செய்கிறோம் என்றனர். HP அவர்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இன்று ஆப்பிளின் மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்

1999-ல் ஜியார்ஜ் பெல் என்ற எக்ஸைட் கம்பெனியின் நிர்வாகிக்கு, கூகிள் கம்பெனி ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனைக்கு வந்தது. அதிர்ஷ்டம் கதவைத் தட்டினாலும் அவர் திறக்க விரும்பவில்லை.அவர் நிராகரித்துவிட்டார். இன்று கூகிளின் மதிப்பு 200- பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்.

1803-ல் அமெரிக்காவில் பாதிக்கு மேல் ஃப்ரான்ஸ் வசம் இருந்த்து. அதை நெப்போலியன் 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுவிட்டார்.

 

 

.

மின்மினி மீன்களும் பச்சோந்தி மீன்களும்:

எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்குமென்று தெரியவில்லை. கிராமங்களில் பலர் கண்டிருக்க சாத்தியமுண்டு. மரம் முழுவதும் சீரியல் விளக்குகள் கட்டிய்து போல மின்மினிப்பூச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம் ஒன்றிரண்டை மட்டுமே காணமுடிகிறது.

ஆழ் கடலில் இரண்டுமணி நேரங்கள் கீழே சென்ற பிறகு வெறும் கும்மிருட்டை மட்டுமே சந்தித்ததாக இவர் கூறுகிறார். அந்தக் கும்மிருட்டில் பற்பல அதிசய மின்மினி மீன் களை பிரத்தியேக கேமரா மூலம் படம் பிடித்து அவர் விவரிக்கும் அழகைக் காணுங்கள். பச்சோந்தி மீன்கள். இந்த மீன்கள் பச்சோந்திகள் மட்டுமல்ல. தன்னுடைய உடலின் தோலையும் தேவைகேற்றபடி மாற்றி, பாறையாகவே உருமாறும் அழகை, உச்சகட்டமாக, கடைசி வினாடிகளில் காட்டுவதை பார்க்கத் தவறாதீர்கள். இந்த வீடியோவில் சப்டைட்டில் உள்ளது. பார்க்கும் முன் தேர்வு செய்து கொள்ளலாம். முழு உரையையும் கட்டுரையாக எழுத்து வடிவிலும் கொடுத்திருக்கிறார்கள். நான் முழு உரையையும் கொடுக்கவில்லை. வீடியோவைக் காணுங்கள்.

 


 

துணுக்கு:

சாக்ரடீஸிடம் ஒருவர் ஏதோ கூறுவதற்காக வந்தார். “உங்கள் மாணவர் ஒருவரைப்பற்றி ஒன்று கூறவேண்டும்”

“உங்களுக்கு நேரடியாகத் தெரிந்த விஷயமா?”

“கேள்விப்பட்டேன். நேரடியாகத் தெரியாது.”

“சரி. அது நல்ல விஷயமா?”

“ம்..... அப்படியாக இல்லை”

“சரி.  அதனால் ஏதாவது பயன் இருக்குமா?”

“ம்... இருக்காது என்று நினைக்கிறேன்.”

“வதந்தி; நல்ல விஷயமும் இல்லை; அதனால் பயனும் இல்லை. ஏன் அதைப்பற்றி பேசவேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.

 

 

Thursday, September 12, 2013

கதம்பம்-5


நூல் அறிமுகம்:

“நம்பவைப்பதன் மனோதத்துவம்” (The psychology of persuation) என்ற ராபர்ட் ச்சியால்டினி (Robert Cialdini) எழுதிய நூல் பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. அது இருபது மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவர் தான் எப்பொழுதும் விற்பனையாளர்கள், நிதி திரட்டுபவர்கள் போன்றவர்களிடம் ஒரு இளிச்சவாயனாக உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். நிதி திரட்டுபவர்களிடம் இல்லை என்று தன்னால் கூற இயலாமல் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். சமூக மனோத்துவ நிபுணரான ச்சியால்டினி, ஒருவர் செய்ய விருப்பமில்லாத செயல்களை, விருப்பமில்லாவிட்டாலும் எப்படி மற்றவர்களால் செய்யவைக்கமுடிகிறது என்று வியந்தார். மற்றவர்களை நம்பவைக்கவும், அவர்களிடம் பொருட்களை விற்பனை செய்யவும் எப்படிப்பட்ட மனோத்துவத்தை விற்பனையாளர்கள் உபயோகிக்கின்றனர் என்று ஆராய்ச்சி செய்து அதன் வழியாக மனிதனின் குணங்களைப்பற்றி இந்த நூலில் விவரித்துள்ளார்.

தன்னிச்சையான பிறரின் செயலை, தன் தேவைக்கு ஏற்றபடி உபயோகித்துக்கொள்ளுதல்:

தாய் வான்கோழிகள் தன் குஞ்சுகளை பாதுகாப்பதில் எந்த உயிரிக்கும் சளைத்ததல்ல. குஞ்சுகளை வளர்க்கும் பருவத்தில் “சிப்..சிப்” என்ற ஒலியை அது தன் குஞ்சுகளின் அடையாளமாகக் கருதுகிறது. “போல்கேட்” எனப்படும் கீரிப்பிள்ளையைப் போன்ற, ஒருவகை பூனை வான் கோழிகளின் குஞ்சுகளுக்கு இயற்கையான எதிரி. அந்த விலங்கினைக் கண்ட கணமே வான் கோழி சண்டைக்கு ஆயத்த நிலையில் நிற்கும். பஞ்சடைத்த போல்கேட்-ஐப் பார்த்தால்கூட உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். ஆனால் பஞ்சடைத்த போல்கேட்-ல் “சிப்..சிப்” என்ற ஒலி கொடுக்கப்பட்டால், தாய் வான் கோழி, அந்த போல்கேட் பொம்மையை தனது குஞ்சு என்று எண்ணி பாதுகாக்க ஆரம்பித்துவிடுகிறது.

சிந்த்னையின்றி தன்னிச்சையாக வான் கோழி செய்யும் செயலை நிரூபித்து படிப்படியாக, மனிதனும் சிந்திக்காமல் எப்படி தனக்கு பிடிக்காத செயல்களைக்கூட செய்யுமாறு முட்டாளாக்கப்படுகிறான் என்று ச்சியால்டினி எடுத்துக் கூறுகிறார். நாம் உயிர்வாழ, நம்முடைய சிந்தனையின்றி, தானியக்கமாக சில செயல்களை செய்வதற்கான அமைப்புடன் நாம் பிறந்திருக்கிறோம். ஆனால் தானியக்கமான அந்த செயல்களே சில சமயங்களில் நம் சிந்தனையை மழுங்கச் செய்து , நம் அறிவுக்கு மாறான செயல்களை நம்மையறியாமலே செய்யவும் வைத்துவிடுகிறது. சில குறிப்பிட்ட வினைகளுக்கு, மனிதன் சிந்திக்காமல் சில குறிப்பிட்ட எதிர்வினைகளையே ஆற்றுகிறான். மனோவியலில் இதனை “நிலையான எதிர்வினை கட்டமைப்பு” என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட செயலுக்கு, மற்றவர்கள் அநேகமாக இந்த வகையில்தான் நடந்துகொள்வார்கள் என்று கூறிவிடமுடியும். -

ச்சியால்டினி -யின் நூலுக்கு “ஒருவர் சிந்திக்குமுன், தன்னிச்சையாக அவரை, எப்படி தான் நினைத்தபடி ஆட்டுவிப்பது?” என்ற பெயர் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். பிரதியுபகாரம், அர்ப்பணிப்பு, கொள்கைப்பற்று, ஊரோடு ஒத்துவாழ்தல், மற்றவர்கள் நேசிப்பை விரும்பும் தன்மை, அதிகாரத்துக்கு பணிதல், பற்றாக்குறையை விரும்பாமை என்ற ஆறு முக்கிய ஆயுதங்களை நிபுணர்கள் உபயோகப்படுத்தி தங்கள் காரியங்களுக்கு அடுத்தவர்களை, அவர்களின் சிந்தனையை மழுங்கச் செய்து, சிந்திக்கவைக்காமலேயே செய்ய வைத்துவிடுவதாக ச்சியால்டினி குறிப்பிடுகிறார்.

பிரதியுபகாரம்:

இது அனைத்து சமூகத்திலும் உண்டு. பொருளாக இருந்தாலும் சரி, சேவையாக இருந்தாலும் சரி, பெற்றுக்கொண்டதை திருப்பி செலுத்துதல் அனைவருக்கும் உள்ள இயல்பு. ஒரு தனிமனிதனிடமிருந்து பெற்றாலும் அல்லது ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்றாலும்,அனைவரும் அதற்கு பதிலாக எதையேனும் திருப்பி செலுத்த விரும்புகின்றனர் என்று மனோவியலாளர்கள் கூறுகின்றனர். சில சமயங்களில் தேவையில்லாத பொருளை பெற்றுவிட்டாலும், அதற்கு பதிலாக ஏதேனும் செய்ய விருப்பப்படுகின்றனர். தொண்டு நிறுவனத்திடங்களிடமிருந்து உதவி கேட்டு கடிதம் வந்தால் 20 சதவிகிதம் மக்களே பதில் எழுதுகின்றனர். ஆனால் அக்கடிதத்துடன் ஏதேனும் அன்பளிப்பும் இணைக்கப்பட்டிருந்தால், அதுவும் பெறுபவர்களின் பெயரும் எழுதப்பட்டிருந்தால் பதில் எழுதுபவர்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்தது தெரிகிறது.

ஒருவரிடமிருந்து ஏதேனும் பெற்றுவிட்டால், பிறகு அவரிடம் முடியாது என்று மறுப்பது கடினம். இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி விற்பனையாளர்களும், தொண்டு நிறுவனங்களும் நாம் விரும்பாவிட்டாலும் நம்மை அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்க வைத்துவிடுகிறார்கள்.

இதற்கு உதாரணமாக வாட்டர்கேட் ஊழலைக் குறிப்பிடுகிறார். கார்டன் லிட்டி என்பவர் சிறுசிறு உதவிகளைச் செய்ததால், அவருடைய வேண்டுகோளை ஏற்று டெமாக்ரேட் கட்சியின் தலைமையகத்தை உடைத்து திருட அனுமதி கேட்டபொழுது, ரிபபளிக்கன் கட்சியினர் மறுக்காமல் ஒத்துக்கொண்டதாக கூறுகிறார். “லிட்டி கொடுத்த தகவலுக்கு பிரதிபலனாகத்தான் நாங்கள் ஒத்துக்கொள்ள நேர்ந்தது” என்று ஜெஃப் மெக்ரடர் கூறியிருந்தார்.  திருப்பி செய்தாக வேண்டும் என்ற தூண்டுதலின் தாக்கத்தை உணர்ந்துகொள்ளுங்கள். வலையில் வீழ்ந்துவிடாதீர்கள்.

இதைப்போல ஆறு ஆயுதங்களையும் எடுத்துக்காட்டுகளுடன் ச்சியால்டினி தன்னுடைய நூலில் விளக்கியுள்ளார்.

 

யார் சொல்லிக்கொடுத்தார்கள்?

பறவைகளில் மிகவும் அறிவுள்ள பறவை காகம் என்று குறிப்பிடுவது வழக்கம். காகத்தால் வால்நட்-ஐ தானாகவே உடைத்து சாப்பிடமுடியாது. அதற்காக காகம் செய்யும் தந்திரத்தை இந்த வீடியோவில் காணுங்கள். ஜப்பானில் உள்ள காகங்கள் இந்த தந்திரத்தை செய்வதாக செய்திகள் வந்தன. இப்பொழுது கலிஃபோர்னியாவிலுள்ள காகங்களும் கற்றுக்கொண்டுவிட்டனவாம். காகங்களின் அருமையான வீடியோவைக் காண,



 

கண்டு மகிழ சில வீடியோக்கள்:


Thursday, September 5, 2013

கதம்பம்-4


அதிசயக்கரடிகள்:

கும்பகர்ணனைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆறுமாதங்கள் தொடர்ந்து தூங்கிவிட்டு பிறகு ஆறுமாதங்கள் தொடர்ந்து கண்விழித்திருக்கும் தன்மையுடையவன். ஓரளவுக்கு கும்பகர்ணனுக்கு இணையாக துருவங்களில் வசிக்கும் க்ரிஸ்லி வகைக்கரடிகள் வருகின்றன. குளிர்காலங்களில் தொடர்ச்சியாக அதிக பனிப்பொழிவு ஏற்படுவதால், அக்காலங்களில் அவை ஆறுமாதங்கள் தொடர்ந்து தூங்கிவிடுகின்றன. பொதுவாக, குளிர்காலங்களில் அனைத்து கரடி இனங்களும் சில காலங்கள் தூங்கிவிடுகின்றன. அலாஸ்காவில் உள்ள கரடிகள் ஆறு மாதங்கள் தூங்குகின்றன.

நீண்டகாலங்களாக, மனிதன் கரடிகள் பனிக்காலங்களில் தொடர்ந்து தூங்குவதில்லை என்றே கருதினான். பனிப்பிரதேசங்களில் வசிக்கும் பாலூட்டிகளான சிப்மங்கஸ் மற்றும் அணில்கள் குளிர்காலங்களில் தூங்கிவிடுகின்றன. அப்பொழுது அவற்றின் உடல் வெப்பநிலை வெகுவாக குறைந்துவிடுகிறது. ஆபத்து சமயங்களில் அவற்றால் உடனடியாக தயார்நிலையை அடையமுடியாது. முதலில் உடல் வெப்பநிலையை அவை அதிகரிக்கவேண்டும். பிறகே அவற்றால் ஆபத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். அதற்கான அவகாசம் கிடைப்பதற்கு வாய்ப்புகள், அநேகமாகக் கிடைக்காது. ஆனால் க்ரிஸ்லி வகைக்கரடிகள் ஹைபர்னேட் (குளிர்காலங்களில் தொடர்ந்து தூங்கும் பழக்கம்) செய்யும்பொழுது அவற்றின் உடல் வெப்பநிலை அவ்வளவாகக் குறையாது. அதனால் ஆபத்து நேரிட்டால், உடனடியாக அவற்றை கரடிகளால் எதிர்கொள்ள முடியும்.

ஹைபர்னேட் செய்யும் காலங்களில் அவை 45 வினாடிகளுக்கு ஒரு முறை மட்டுமே சுவாசம் செய்கிறது. ஆனால் சாதாரண காலங்களில் ஒரு நிமிடத்துக்கு 6 முதல் 10 தடவைகள் கரடிகள் சுவாசிக்கின்றன. அதுபோலவே இதயத்துடிப்புகளும் 40 முதல் 50-லிருந்து 6 முதல் 10 ஆகக் குறைகிறது. மேலும் உண்ணுவதையோ கழிவுகள் வெளியேற்றம் செய்வதையோ முற்றிலுமாக நிறுத்திவிடுகிறது. கோடையில் அதிகமாக சேமிக்கப்பட்ட உடல் கொழுப்பினைக்கொண்டு அவை உயிர் வாழ்கின்றன. உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றாமல், அவை தானாகவே உடலுக்குள் செலுத்தப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. உடல் எடை கிட்டத்தட்ட 30 சதவிகிதம் குறைந்துவிடுகிறது.

பனிக்காலம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பே, அவை பனிக்குகைகளைக் கட்டி வைத்துக்கொள்கின்றன. ஒருகரடி நுழைவதற்கு மட்டுமே போதுமானதாக அளவுள்ள சிறிய குகைகளாக கட்டிக்கொள்வதால் வெப்பத்தை அதிகநேரம் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.

கரடிகளில் உடலில் நிகழும் மாற்றங்கள் ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்கவைக்கிறது. ஹைபர்னேட் காலங்களில் தூங்கும்பொழுது, கரடியின் கொழுப்பு சக்தி சாதாரண நிலையைவிட இரண்டுமடங்கு அதிகரிக்கிறது. இருப்பினும் அவற்றின் இரத்த நாளங்கள் தடிமனாவதில்லை. மேலும் மாதக்கணக்கில் தூங்கிக்கொண்டு உணவில்லாமல் இருந்தாலும், கரடிகளின் எலும்புகளின் அடர்த்தியும் குறைவதில்லை. அந்த சமயத்தில் கரடிகளின் கணையத்தில் (லிவரில்) சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் பித்தப்பைக் கட்டிகளை கரைக்கவல்லது. இப்பொழுது ஆராய்ச்சியாளர்கள், பனிக்கரடியே மிகச்சிறப்பாக ஹைபர்னேட் செய்யக்கூடிய விலங்கினம் என்று ஒத்துக்கொள்கிறார்கள்.

கரடியின் தூங்கும் தந்திரங்களை மனிதன் கற்றுக்கொண்டால் விண்ணுக்குச் செல்லும் பொழுது தோன்றும் உணவுப்பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
 
 
 
துணுக்கு:
தன்னுடைய இரண்டு குறும்புகார மகன்களை பொறுக்க முடியாத தாய் சர்ச்சிலுள்ள பாதிரியாரிடம் சென்று அவர்கள் செய்யும் குறும்புகளைக் குறைப்பதற்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டாள்.
பாதிரியார் முதலில் இளையவனுக்கு அறிவுரை கூறுவதற்கு அழைத்துவருமாறு கூறினார். வந்த இளையவனிடம் எந்த வகுப்பில் வடிக்கிறாய், எந்த பள்ளியில் படிக்கிறாய் என்று கேள்விகளைக் கேட்டார். பிறகு கடவுள் எங்கிருக்கிறார் என்று தெரியுமாவென்று கேட்டார். சிறுவனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. மௌனமாக இருந்தான். மீண்டும் கேட்டார். பதிலில்லை. சிறுவனுக்கு அருகே வந்து கடவுள் எங்கிருக்கிறார், என்று கேட்டார். உடனே சிறுவன் கதவைத் திறந்துகொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். வெளியில் ஒரு அறையில் ஒளிந்துகொண்டு தன் அண்ணனிடம் ரகசியமாக  “ உனக்கு கடவுள் எங்கிருக்கிறார் என்று தெரியுமா?” என்று கேட்டான். அண்ணனும் தனக்குத் தெரியாது என்று கூறினான். சிறுவன் அண்ணனிடம் “ இன்று வசமாக மாட்டிக்கொண்டோம். கடவுளைக் காணவில்லை போலிருக்கிறது. நம்மைத்தான் சந்தேகப்படுகிறார்கள்.” என்றான்.
 
 
 
திருக்குறள்:
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்                                                              வைத்தூறு போலக் கெடும்.  
முன்னாள் அமெரிக்க அதிபர் சைனா சென்றபொழுது:
 
 
 
 
 
 
முன்னாள் பிறகு சைனா அதிபர் அமெரிக்கா சென்றபொழுது: