பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, March 7, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 1


முதன் முதலாக நான் கேதரினை பார்த்தபோது சிவப்புநிற உடையணிந்து என் கிளினிக் வரவேற்ப்பு அறையில் அமர்ந்திருந்தாள். மிகவும் பதற்றத்துடன் கிளினிக்கில் இருந்த பத்திரிகைகள் அனைத்தையும் புரட்டிப் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மூச்சுவிட சிரமப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக, எப்படியாவது இன்று டாக்டரை பார்த்தே ஆகவேண்டும், பயந்து ஓடிவிடக்கூடாது என்று மனதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தாள்.

நான் வரவேற்ப்பு அறையில் இருந்து அவளை வரவேற்று எனது அறைக்கு அழைத்து வந்தேன். கைகுலுக்கும்போது அவள் கை மிகவும் வியர்த்து இருந்தது. அவள் மிகவும் பதற்றத்துடன் இருப்பது இன்னும் உறுதியானது. ஏறக்குறைய இரண்டு மாதங்களாக என் கிளினிக்கு வர மிகவும் யோசித்து இருக்கிறாள். ஏனென்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பே இரண்டு டாக்டர்கள் என்னை பார்க்குமாறு சிபாரிசு செய்திருக்கிறார்கள். இறுதியாக இன்றுதான் கேத்தரின் என் கிளினிக்கு வந்திருக்கிறாள்.

கேதரின் மிக அழகானவள். அந்த சமயத்தில் நான் வேலை செய்த மருத்துவமனையிலேயே லேப் டெக்னிஷியனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் நான் மனநல பிரிவுக்கு தலைமை பொறுப்பில் இருந்தேன். அவள் ஹாஸ்பிடல் வேலையைத் தவிர பகுதி நேரமாக மாடலிங் வேலையும் செய்து கொண்டிருந்தாள்.

வரவேற்பறையில் இருந்த அவளை என் அலுவலகத்திற்கு அழைத்து வந்தேன். நானும் அவளும் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். எங்கள் இருவருக்கும் இடையில் பெரிய மேசை இருந்தது. கேதரின் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துகொண்டு, எப்படி ஆரம்பிப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தாள். நானும் அவளே தொடங்கட்டும் என்று அமைதியாக இருந்தேன். பிறகு நானே, அவளுடைய பிரச்சினையைக் கூறுமாறு கேட்டேன். முதல் விசிடிங்கிலேயே அவள் யார், என்னை பார்க்க வந்த காரணம் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

என் கேள்விகளுக்கு பதில் சொல்லும்பொழுது கேத்தரின் அவளுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி கூறினாள். அவள் ஒரு கட்டுப்பாடான கத்தோலிக்க குடும்பதைச் சேர்ந்தவள். மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தை. அவள் சகோதரன் மூத்தவன். அவன் ஆண்மகனானதால் அவளை விட மிகவும் சுதந்திரமாக வளர்ந்தான். அவனுக்கு விளையாட்டில் விருப்பம் அதிகம். கேத்தரினிக்கு அடுத்து ஒரு தங்கை. அந்த தங்கைதான் பெற்றோருக்கு செல்லக்குழந்தை. கேதரின் தனது பிரச்சனையை பற்றி பேச ஆரம்பித்ததும் அவளுடைய பயமும், நடுக்கமும் அதிகமானது. மிகவும் வேக வேகமாக சொல்ல ஆரம்பித்தாள். நாற்காலியில் இருந்து முன் நகர்ந்து முழங்கையை மேசை மேல் அழுத்தமாக ஊன்றிக் கொண்டாள். அவள் வாழ்க்கையை எப்பொழுதும் பயத்துடனேயே கழித்திருக்கிறாள். முக்கியமாக தண்ணீரைக் கண்டு மிகவும் பயம். மாத்திரை முழுங்கக்கூட தண்ணிரை குடிக்க பயம். விமானத்தில் பிரயாணம் செய்ய பயம். இருட்டைக் கண்டு பயம். இறந்துவிடுவோமென்று பயம். சமீப காலமாக தாங்கமுடியாத அளவுக்கு பயம் வந்துவிட்டது. வீட்டிலும் பயத்தை நீக்குவதற்காக பல சமயங்களில் துணி உலரவைக்கும் அறையில்தான் தூங்குவாள். தினம் தூக்கம் வருவதற்கே இரண்டு, மூன்று மணி நேரங்கள் பிடிக்கும். தூங்கினாலும் அது ஆழ்ந்த தூக்கமில்லை. தூக்கத்தில் அடிக்கடி விழித்துக்கொள்வாள். குழந்தையாக இருந்தபோது வந்த பயங்கர கனவுகளும், தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் மீண்டும் வர ஆரம்பித்து விட்டது.

பயத்தினாலும் மற்ற பிரச்சினைகளாலும் அவளுக்கு மனச்சோர்வு அதிகமாகிக்கொண்டே வந்தது. கேதரின் விளக்கி கொண்டிருக்கும் போது அவள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் உணர முடிந்தது. என் அனுபவத்தில் கேதரின் போன்ற பல நோயாளிகளை குணப்படுத்தியுள்ளேன். அதனால் கேதரின்னையும் குணப்படுத்தி விடலாம் என்று நம்பிக்கை வந்தது. அவளுடைய குழந்தை பருவத்தில் என்ன நடந்தது என்று கண்டு பிடித்து அவள் பிரச்சனையின் மூலக்காரணத்தை அறிந்து தகுந்த சிகிச்சை அளித்தால் அவளுடைய நோய் தீர்ந்துவிடும். இப்பொழுது அவளால் மாத்திரை சாப்பிட முடிந்தால், பதற்றத்துக்குண்டான மாத்திரைகளின் மூலம் அவள் பதற்றத்தை ஓரளவுக்கு குறைக்க வேண்டும். இது வழக்கமான சிகிச்சை முறை. நான் தேவைப்பட்டால் மனச் சோர்வு மாத்திரைகளோ மயக்க மாத்திரைகளோ தருவதற்கு தயக்கம் காட்டியதில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் மாத்திரைகள் தருவதை குறைத்துவிட்டேன். கொடுத்தாலும் அதனை தற்காலிகமாக மட்டுமே தருகிறேன். எந்த மாத்திரையினாலும் பிரச்சினையின் மூல காரணத்தை சரி செய்ய முடியாது. நோயாளிகளுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இதனை உறுதி செய்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு என்று என்னால் தீர்மானமாக கூற முடியும். மாத்திரைகள் பிரச்சனைகளை மறைக்கத்தான் முடியும், ஆனால் தீர்க்க முடியாது என்று அறிந்து கொண்டுள்ளேன்.

கேத்தரினுக்கு ஆலோசனை தரும்போது அவளுடைய குழந்தை பருவம் தொடர்பாக விசாரித்தேன். அவளுக்கு குழந்தையாய் இருந்தததைப் பற்றி அதிகம் ஞாபகம் இல்லாமல் இருந்தது எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. குழந்தைப் பருவத்தில் வித்தியாசமாக அல்லது பிரச்சனையாக எதுவும் நடந்ததாக அவளால்  ஞாபகப்படுத்த முடியவில்லை. அவளை ஹிப்னடைஸ் செய்து அவள் ஆழ் மனதில் உள்ளவற்றை தெரிந்து கொள்ள விரும்பினேன்.

அவளிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்து அவள் குழந்தை பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்து கொண்டேன். அவளுக்கு ஐந்து வயதிருக்கும்போது யாரோ தண்ணீரில் தள்ளியிருக்கிறார்கள். அதில் மிகவும் பயந்திருக்கிறாள். எப்படி இருப்பினும் அவளுக்கு அதற்கு முன்பிருந்தே தண்ணிரைக் கண்டால் பயம். அவள் எப்போதும் தண்ணீரில் விளையாடியதில்லை. கேத்தரினுக்கு பதினோரு வயதிருக்கும்போது அவளது அம்மா மனச்சோர்வினால் பாதிக்கப் பட்டிருக்கிறார். மேலும் அவள் அம்மா இதனால் ஷாக் டிரீட்மெண்டுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த பாதிப்புகளினால் கேத்தரின் அம்மாவுக்கு ஞாபக சக்தி குறைந்து விட்டது. அம்மாவின் நிலைமையினால் கேத்தரின் மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறாள். ஒரு கால கட்டத்தில் கேத்தரின் அம்மாவுக்கு குணமாகி விட்டது. கேத்தரினும் பழைய நிலைக்கு வந்து விட்டாள். கேத்தரின் அப்பா ஒரு குடிகாரர். சில தடவை கேதரினின் அண்ணன், அப்பாவை இரவு, வீட்டுக்கு தேடி அழைத்து வர வேண்டிய சூழல் நேர்ந்திருக்கிறது. அப்பா குடித்துக் கொண்டிருந்ததால், அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். இவை இயல்பாக எல்லா குடும்பங்களிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று கேத்தரின் நினைத்திருந்தாள்.

அவளுக்கு வீட்டை விட வெளியுலகம் மிகவும் நிம்மதியாக இருந்தது. சிறு வயதிலேயே நிறைய நண்பர்கள் இருந்தார்கள். நீண்ட காலமாக தொடர்புடைய நண்பர்களும் அதிகம் பேர் இருந்தார்கள். இருப்பினும், அவளுக்கு மிகவும் பழக்கமானவர்களைத் தவிர வேறு யாரையும் நம்புவதற்கு அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. புதியவர்களிடம் பழகுவதற்கு அவளுக்கு துணிச்சல் இல்லை.

அவள் ஒரு கத்தோலிக்க கிறித்துவராக வளர்க்கப் பட்டாள். அவளுடைய மதம் மிகவும் எளிமையானது. மதத்தில் நல்ல நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்தாள். அவளை பொறுத்தவரை கத்தோலிக்க தத்துவத்தையும் பழக்கங்களையும் நன்கு பின்பற்றினால், ஆண்டவன் சொர்க்கத்தில் இடம் தருவான். அல்லது மீளாத நரகம்தான். ஆணாதிக்கமுடைய கடவுளும் அவருடைய மகனும் எடுத்த இறுதி முடிவை விடாமல் கடை பிடித்தாள். கேத்தரினுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை கிடையாதென்று பிறகு தெரிந்து கொண்டேன். உண்மையில் அவளுக்கு மறுபிறப்பு பற்றி எதுவும் தெரியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்து மதத்தைப்பற்றி படித்திருக்கிறாள். மறுபிறப்பு தத்துவம் அவள் வளர்க்கப்பட்ட சூழ்நிலைக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிரானது. அவள் தன்னுடைய மதக்கோட்பாடுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பினாள்.

கேத்தரின் ஹைஸ்கூலுக்கு பிறகு இரண்டு வருடங்கள் லேபரேட்டரி டெக்னிசியன் கோர்ஸ் படித்து முடித்தாள். சகோதரனின் ஊக்கத்துடன் அவள் Tempa என்ற ஊருக்கு மாறி வந்தாள். அங்கே University of Miami school of medicine-ல் லேபரேட்டரி டெக்னிசியன் வேலையில் அமர்ந்தாள். 1974-ல், இருபத்தியொரு வயதில் வசந்த கால துவக்கத்தில் கேத்தரின் மியாமிக்கு வந்தாள். மியாமியில் கேத்தரினின் வாழ்க்கை, அவள் இருந்த சிறிய ஊரில் இருந்த அளவு சுலபமாக இல்லை. இருந்தாலும் குடும்ப பிரச்சனைகளை விட்டு வெளியே வந்தது மிகவும் நிம்மதியாக இருந்தது.

மியாமியில் கேத்தரின் முதல் வருட வேலை பார்க்கும்பொழுது, ஸ்டுவர்ட்-ஐ சந்தித்தாள். ஸ்டுவர்ட் திருமணமானவன். இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். அவன் ஒரு டாக்டர், பலசாலி, ஆளுமை உணர்வு அதிகம் உள்ளவன். கேத்தரினிக்கும் ஸ்டூவர்ட்க்கும் தவிர்க்க முடியாத அளவுக்கு காதல் இருந்தது. ஆனால் அவர்கள் உறவு அப்படியும் இப்படியும்தான் இருந்தது. சில சமயம் எலியும், பூனையுமாக இருந்தார்கள். இருந்தாலும் அவளுக்கு ஸ்டுவர்ட்டிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்த காலகட்டத்தில்தான் கேத்தரின் என்னிடம் டிரீட்மெண்டுக்கு வந்தாள். அப்பொழுது கேத்தரின் – ஸ்டூவர்ட் தொடர்பு கிட்டத்தட்ட ஆறு வருடம் தொடர்ந்திருந்தது. ஸ்டூவர்ட் கேத்தரினை மிகவும் மோசமாக நடத்தினான். மிகவும் பொய் சொல்லுவான்; ஏமாற்றுவான். இருந்தாலும் கேத்தரினால் ஸ்டூவர்டை விட்டு விலகவோ, மறக்கவோ முடியவில்லை.

என் கிளினிக்கு வருவதற்கு சில மாதங்கள் முன்பு கேத்தரினுக்கு குரல்வளையில் சிறிய கட்டி இருந்ததால் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது. ஆபரேஷனுக்கு முன் கேத்தரின் மிகவும் பயந்து போயிருந்தாள். ஆபரேஷனுக்கு பிறகு கண்விழித்துப் பார்த்து விட்டு கொலை நடுங்கி போயிருந்த கேத்தரினை சமாதானப்படுத்துவதற்க்குள் நர்சுகளுக்கு போதுமென்றாகி விட்டது. மணிக்கணக்காக அவளுடன் போராட வேண்டியிருந்தது. ஆப்பரேஷனுக்கு பிறகு கேத்தரின் உடல் நிலை ஓரளவுக்கு தேறியிருந்தது. அந்த சமயத்தில் எட்வர்ட் என்கிற டாக்டரிடம் மனநிம்மதிக்கான ஆலோசனைக்கு சென்றாள். எடுத்த எடுப்பிலேயே டாக்டரை அவளுக்கு மிகவும் அன்னியோன்யமாக நினைக்க முடிந்தது. டாக்டரிடம் அவளால் பயம், தடங்கல் இல்லாமல் பேச முடிந்தது. தன்னுடைய பயம், தனக்கும், ஸ்டூவர்டுக்கும் உள்ள உறவு, பிரச்சனைகள், தன்னுடைய மன அழுத்தம் அனைத்தையும் கூற முடிந்தது. டாக்டர் எட்வர்ட் என்னை பார்க்குமாறு சிபாரிசு செய்துள்ளார். குறிப்பாக என்னைத்தான் பார்க்க வேண்டும், வேறெந்த மனநல மருத்துவரிடமும் செல்ல வேண்டாமென்று கூறி இருக்கிறார். ஏதோ காரணத்தினால் டாக்டர் எட்வர்ட் என்னால் மட்டுமே கேத்தரினுடைய பிரச்சனைகளை புரிந்து குணப்படுத்த முடியுமென்று நினைத்திருக்கிறார். என்னைவிட நன்கு பெயர் பெற்றுள்ள டாக்டர்களை விட என்னால்தான் கேத்தரினை குணப்படுத்த முடியுமென்று நம்புவதாக டாக்டர் எட்வர்ட் என்னிடம் பேசும்போது கூறினார். ஆனாலும் கேத்தரின் என்னைச் சந்திக்க முயற்சி எடுக்கவில்லை.

சைக்கியாட்ரிஸ்ட் பிரிவின் தலைமை பிரிவில் இருந்ததால் எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. டாக்டர் எட்வர்ட் கேத்தரினைப் பற்றி என்னிடம் கூறி எட்டு வாரங்கள் ஆகி விட்டன. டாக்டர் எட்வர்ட் என்னிடம் கூறியதை கிட்டத்தட்ட மறந்து விட்டேன். கேத்தரினுடைய பயமும் மன அழுத்தமும் கட்டுக்கடங்காமல் மோசமாகிக் கொண்டே இருந்தது. டாக்டர் ப்ராங்க் சர்ஜரி பிரிவில் தலைமை பதவியில் இருந்தார். அவருக்கு கேத்தரினை ஓரளவுக்கு தெரியும். டிபார்ட்மெண்டுக்கு வந்து போகும்போது கேத்தரினும் அவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணும் அளவுக்கு பழக்கமிருந்தது. டாக்டர் ப்ராங்க், கேத்தரின் சிறிது நாட்களாக மகிழ்ச்சியில்லாமல் மன அழுத்தத்துடன் இருப்பதைக் கவனித்திருக்கிறார். பல தடவை கேத்தரினிடம் அதைப் பற்றி பேச முயற்சித்திருக்கிறார். ஆனால் ஏதோ ஒன்று அவரைத் தடுத்திருக்கிறது.

டாக்டர் ப்ராங்க் ஒரு நாள் பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடலுக்கு ஒரு விரிவுரை நடத்த சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் கேத்தரின் வீட்டுக்கு காரோட்டி திரும்பிக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு வேகத்தில், டாக்டர் கேத்தரின் காரை நிறுத்த சொல்லிவிட்டு காரிலிருந்தபடியே கார் கண்ணாடியை இறக்கிவிட்டு “டாக்டர் வெய்ஸை (என்னை) எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் போய்ப் பார்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். பொதுவாக சர்ஜன்கள் உணர்ச்சி வசப்பட்டு பேச மாட்டார்கள். இருப்பினும் டாக்டர் ப்ராங்க் அன்று கூறியது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

மூச்சுத்திணறலும், பயந்து பயந்து இருக்கும் நிலையும் கேத்தரினுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தது. இரண்டு கனவுகள் அவளுக்கு மீண்டும் மீண்டும் வந்தன. ஒரு கனவில் அவள் ஒரு பாலத்தில் காரில் சென்று கொண்டிருக்கிறாள். பாலம் உடைந்து கார் தண்ணீரில் விழுந்து விடுகிறது. அவளால் காரிலிருந்து வெளிவர முடியவில்லை. தண்ணீரில் மூழ்க ஆரம்பிக்கிறாள்.

இன்னொரு கனவில் மிகவும் இருட்டான அறையில் மாட்டிக்கொண்டிருக்கிறாள். அறையை விட்டு வெளிவர முடியவில்லை.

இந்த சூழலில் கடைசியாக என்னை சந்திக்க வந்தாள். கேத்தரினிக்கு முதல் ஆலோசனை கொடுத்தபோது, பயந்துபோய் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கும் இந்த சின்னப்பெண், என் வாழ்க்கை தலைகீழாக புரண்டு போவதற்கு ஒரு வினையூக்கியாக இருக்கப்போகிறாள் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னால்  திரும்ப பழைய நிலைமையில் இருக்க முடியாதென்றும் நான் அறியவில்லை.


தொடரும்-


கொசுறு :
 
இது குழந்தைகளுக்கான ஒரு விளையாட்டு. இதில் இரண்டு பேர் ஒரு குழு. அதாவது குப்பனும், சுப்பனும் ஒரு குழு. மூன்றாமவர் கண்ணன். குப்பனிடம் சுப்பனுக்கு தெரியாமல், கண்ணன் ஒரு பொருளைக் கூறவேண்டும். டி.வி என்று கூறுவதாக வைத்துக்கொள்வோம். குப்பன் சுப்பனிடம் ஒவ்வொரு பொருளாக கேட்டுக்கொண்டு வரவேண்டும். அப்பொழுது கண்ணன் கூறிய பொருளை குப்பன் சொல்லும்பொழுது சுப்பன் சரியாகக் கணிக்க வேண்டும்.
 
 
உதாரணமாக குப்பன்  -  புத்தகமா?, மேசையா?, கதவா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார். சுப்பன் இல்லை, இல்லை என்று மறுத்துக்கொண்டே இருப்பார். அவர் டி.வி யா? என்று கேட்டவுடன் சுப்பன் ஆம் என்று சரியாக சொல்லிவிடுவார்.
 
 
இந்த விளையாட்டுக்கு முன்பு குப்பனும் சுப்பனும் பேசிவைத்துக் கொள்ளவேண்டும். அதாவது, ஏதாவது ஒரு காய்கறியின் பெயருக்கு அப்புறம் குப்பன், கண்ணன் கூறிய பொருளைக் கூறவேண்டும். அல்லது, உடலின் ஒரு உறுப்புக்கு அப்புறம் கண்ணன் கூறிய பொருளைக் கூறவேண்டும். புத்தகமா?, மேசையா?, கதவா?, கத்திரிக்காயா?, டி.வி யா? என்று குப்பன் கேட்கும்பொழுது சுப்பன் எளிதாக கண்டு பிடித்துவிடுவார். கண்ணன் திகைப்பார். ஒவ்வொரு முறை விளையாடும் பொழுதும் வேறு வேறு காய்களைக் கூறுங்கள். அல்லது யூகித்துவிடுவார்கள். குழந்தைகள், எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று அறியும்வரை மேஜிக் போல் இருக்கும்.
 
 
துணுக்கு :
"மக்களே தமிலக் கொல்லுதானுவ மக்களே. நீயும் தப்பா எளுவுவன்னு நினைக்கல மக்கா ! "     -  செல்லில் நண்பன்.

நான்  -    "என்னாச்சு மக்கா?

"உன் blog - பேர் தப்பா எளுவிட்ட மக்கா சரிபண்ணிடு.

"சரியாத்தானே இருக்கு! எப்படி எழுதணும்?"

"ஊக்கமது  கைவிடேல். தப்பு மக்கா!  ஊக்க   மது   கைவிடேல் -ன்னு சரி பண்ணு மக்கா."
 
 
"சரி மக்கா, எங்க இருக்க நீ?"
 
 
"டாஸ்மார்க்க விட்டு வெளியே வந்துட்டு இருக்கேன்."
 
 
"சரி, காலைல பாரு, மாத்திருப்பேன்."
 
 
"தேங்க்ஸ் மக்கா."

9 comments:

  1. சுவாரஸ்யம்...

    முடிவில்... அடுத்த பகிர்வை அறிய ஆவல்...

    துணக்கு : செம...

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன். வெள்ளியன்று தொடரை எதிர்பாருங்கள்.

      அன்புடன்

      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. தொடரின் ஆரம்பே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தொடர்கிறேன் டாக்டர் வெய்ஸுக்கு என்னவாயிற்று என அறிய.
    நகைச்சுவையை இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி ஐயா !. ஆச்சர்யம் காத்திருக்கிறது.

      அன்புடன்

      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. நான் வாசிக்கவில்லை.
    தங்கள் பணிக்கு இனிய வாழ்த்து.
    ஓரு புத்தகத்தை மொழி மாற்றம் செய்வது லேசுப்பட்ட வேலையல்ல.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் நன்றி சகோதரி. தயை செய்து படித்துத்தான் பாருங்களேன்.

      அன்புடன்

      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. வலைச்சரம் கமெண்ட்டில் பாராட்டியதற்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. பகவான் ஜி.

      Delete
  5. வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி ஐயா !.

    அன்புடன்

    பக்கிரிசாமி நீலகண்டம்

    ReplyDelete